இந்து மதத்தின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் தர்மங்களும், நியாயங்களும் வேறு எந்த நுால்களிலும் சொல்லப்பட்டதில்லை. மனித வாழ்வின் அடிப்படையே தர்மம்தான். இந்த இரு இதிகாசங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.
இதிகாசங்களையும் புராணங்களையும், நாம் படித்திருந்தாலும், சில விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். அந்த தெரியாத விஷயங்கள் மிகுந்த சுவாரஸ்ய மானதாக இருக்கும். மகாபாரத போருக்குப் பிறகு பாண்டவர்களின் நிலை, ராவணனை அழித்த பிறகு, ராமனின் நிலை உள்ளிட்ட விஷயங்களில் பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன.
அண்ணன் தம்பி பாசத்துக்கு, ராமாயண நாயகர்களான ராமனையும், அவர் தம்பி லட்சுமணனையும் தான் குறிப்பிடுவர். அண்ணன், தம்பி பாசத்துக்கு உதாரணமாக விளங்கிய ராமனாலேயே லட்சுமணனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. லட்சுமணன் எப்படி இறந்தான் என்பது ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன், சிவபெருமானின் கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனாகவும் அறியப்படுகிறார். ஆயிரம் தலைகளை உடைய இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர்.
உதாரணமாக, திருமால் ராமபிரானாக அவதரித்த காலத்தில் அவருக்குத் தம்பியாக, லட்சுமணனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. ராவண வதம் முடிந்ததும், ராமபிரான் வெற்றியோடு அயோத்திக்குத் திரும்பினார். அதன் பிறகு ஓர் அரசனாக, எல்லோரையும் சமமாக மதித்து நீதி தவறாமல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அரசாட்சி புரிந்தார்.
அவருடைய அகண்ட ராஜ்ஜியத்தை ராமரின் மகன்களான லவனும் குசனும், ராமரின் தம்பிகளான பரதன் மற்றும் அவர் மனைவி மாண்டவிக்குப் பிறந்த மக்களும், லட்சுமணன் மற்றும் ஊர்மிளைக்குப் பிறந்த மக்களும், சத்ருக்னன் மற்றும் அவர் மனைவி சுருதகீர்த்திக்குப் பிறந்த மகன்களும், ராமரின் ஆலோசனைப்படி, பல பிரிவுகளாய்ப் பிரித்து நல்ல முறையில் ஆண்டு வந்தனர். ராமரும் நாட்டு மக்களின் நலன்களுக்காக பல யாகங்களைச் செய்தார்.
அப்படி ஒரு நேரத்தில்தான் சீதையும் பூமா தேவியின் அழைப்பின் பேரில் பூமிக்குள் சென்று மறைந்தார். துயரமான அச்சூழ்நிலையிலும் ராமர் தனது அரச கடமைகளில் கருத்தாக இருந்து, ஆயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்டு வந்தார். அவரது மூன்று தாய்மார்களும் தங்களது முதுமைக் காலத்தில் இறைவனடி சேர்ந்தனர்.
காலாகாலத்தில் பிரம்மன் மற்றும் தேவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட யமன், ஒரு துறவி வேடத்தில் வந்து ராமரிடம் தனியே உரையாட அனுமதி வேண்டுகிறான். அவனுக்கு உள்ளே வர அனுமதி கிடைத்ததும், வேறு யாரும் தங்களது உரையாடலில் குறுக்கிடக் கூடாது என்றும் அவன் வேண்டுகிறான். இது மிகவும் ரகசியமான உரையாடல், அதை யாரும் கேட்கக் கூடாது எனக் கூறியதால் ராமர் தனது நம்பிக்கைக்குரிய, தான் பெரிதும் நேசித்த தன் தம்பி லட்சுமணனை அழைத்து, அந்த அறைக் கதவுகளைப் பாதுகாக்குமாறு கூறினார்.
தன் அனுமதி இல்லாமல் அந்த அறைக்குள் நுழைபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஆணையையும் லட்சுமணனிடம் தெரிவித்தார். அப்போது யமன் தனது சுய உருவத்தை ராமரிடம் காட்டிவிட்டு, அவரது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறி விட்டதால் இனி அவர் தனது இடம் திரும்பும் சமயம் நெருங்கி விட்டது என்று கூறுகிறான்.
ராமரும் அதை ஒத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கும் சமயம், ராமரை சந்திப்பதற்காக அங்கு துர்வாச முனிவர் வருகிறார். ஏற்கெனவே உள்ளே இருப்பவர் தன்வேலையை முடித்துக் கொண்டு போகும் வரை காத்திருக்கும்படி லட்சுமணன் துர்வாசரிடம் கேட்டுக் கொள்கிறான். அதைக் கேட்தும் துர்வாசர் கோபம்கொண்டெழுந்து, ராமனைப் பார்க்கத் தன்னை அனுமதிக்கவில்லை என்றால், லட்சுமணன், ராமர், அயோத்தி மக்கள் அனைவரையும் சபித்து விடுவதாக லட்சுமணனை மிரட்டினார்.
எவரையும் உள்ளே விட்டால் அரசர் என்ற முறையில் ராமரது தண்டனைக்கு ஆளாவோம் என்று அறிந்திருந்தாலும், துர்வாசரது சாபத்துக்கு எல்லோரும் ஆளாவதை விட, தனக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் ராமரது தண்டனையே மேல் என்று நினைத்து லட்சுமணன் அவரை உள்ளே போக அனுமதிக்கிறான்.
துர்வாசர் உள்ளே வருவதைப் பார்த்ததும் யமன் அங்கிருந்து அவசரமாக வெளியேறி விடுகிறான். பின் துர்வாசர் அங்கிருந்து சென்றதும், தன் கட்டளையை மீறியதால் தன்வாக்குப்படி லட்சுமணனுக்கு மரணம் என்பதே தண்டனை என்றறிந்த ராமர் மிகவும் வேதனைப்படுகிறார். அந்த இக்கட்டைச் சமாளிக்க இறப்புக்கு மாற்றாக நாடு கடத்தலாம் என்று வசிஷ்ட மாமுனி கூறவே, லட்சுமணனும் ராமரிடம் தனக்கு உண்டான பொறுப்பு முடிந்து விட்டது என்பதையும், தான் புறப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதையும் உணர்ந்து, எந்தச் சலனமும் இல்லாமல் தண்டனையை ஏற்கிறான்.
அதன்படி அவன் சரயு நதி நீருக்குள் புகவே, இறைவர்களும், தேவர்களும் மற்றெல்லோருமாக மலர் தூவி லட்சுமணனை வரவேற்று மேலுலகுக்கு அழைத்துச் சென்றனர். இத்துடன் லட்சுமணனின் பூலோக வாசம் முடிந்தது.