கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் 5 அதிசயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்பது என்பவையே அவை. ஈசனில் முடியில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பு காணப்படும்.
ஒரு முறை நான்முகன் படைப்புத் தொழிலில் சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டார். இதை உணர்ந்த திருமால் காமதேனுவை அழைத்து, “நீ சிவபெருமானை நோக்கி தவம் செய்து அவர் அருள்பெற்று படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார்.
இதை ஏற்று காமதேனுவும் இமயமலையில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. ஆனால் சிவபெருமானின் அருள் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர் தட்சிண கைலாயம் பற்றி சொல்ல, காமதேனு தனது கன்றான பட்டியுடன் அரச மரங்கள் சூழ்ந்த இந்த இடத்துக்கு வந்து ஆதிலிங்க மூர்த்தியாக நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினம் பாலாபிஷேகம் செய்து தவம் இருந்தது.
ஒருமுறை காமதேனுவின் கன்று (பட்டி)விளையாட்டாக தனது காலால் புற்றை உடைத்து விட்டது. கன்றின் குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டு, சிவபெருமான் திருமுடியின் மீது தழும்பு ஏற்பட்டது. காமதேனுவும் சிவபெருமானிடம் மன்னிப்பு கோரியது.
காமதேனுவின் முன்னர் தோன்றிய ஈசன், “உனது கன்று எனக்கு ஏற்படுத்திய தழும்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தரும் தலம் என்பதால், நீ செய்த தவத்துக்கு உண்டான பலனை உனக்கு திருக்கருகாவூரில் தருகிறேன். நீ இங்கு தவமிருந்து எனது நடன தரிசனத்தை காணலாம்” என்று அருளினார். மேலும், “உன் நினைவாக இத்தலம் ‘காமதேனுபுரம்’ என்றும் உன் கன்றின் பெயரால் ‘பட்டிபுரி’ என்றும் அழைக்கப்படும்.
நானும் இங்கு ‘பட்டீஸ்வரர்’ என்னும் பெயர் பெற்று அருள்பாலிப்பேன்” என்றார். ஆதிகால சிற்ப வேலைப்பாடுகள், கல்வெட்டுகளைக் கொண்டது கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இங்குள்ள சிற்பங்களில் வைணவ சிலைகளும் உள்ளன. ஆஞ்சநேயர், மாயகிருஷ்ணன் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் வெளிப்படுகிறது.
பேரூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் இது கி.மு.காலத்தில் தோன்றிய ஊர் என்று கருதப்படுகிறது.
நடராஜரின் விசேஷ நிலையை இங்குகாணலாம். பொதுவாக ஆடிய நிலையில் நடராஜர் அனைத்து தலங்களிலும் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ஆடி முடியப்போகும் நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன.
இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார். சிதம்பரத்துக்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் ‘மேலைச் சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது.
5 அதிசயங்கள்
பிறவாத புளி: கோயிலுக்கு முன் பிறவாப் புளி என்ற புளியமரம் உள்ளது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார்.
இறவாப் பனை: இங்கு தரிசனம் செய்தால் அழியாப் புகழ் கிடைக்கும் என்று பொருள்.
எலும்பு கல்லாவது: இறந்தவர்களின் எலும்புகளை நதியில் போட்டால் அவை வெண்கற்களாக மாறிவிடும் என்பது ஐதீகம்.
வலது காது மேல் நோக்கியபடி இறப்பு: இங்கே இறப்பவர்களின் காதில் ஐந்தெழுத்து (நமசிவாய) உச்சரிக்கப்படும். இதனால் சிவபெருமான் அவர்களை தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். இதையொட்டி, இங்குள்ள மக்கள் இறக்கும் தருவாயில், அவர்களின் வலது காது மேலே இருக்கும்படியாக வைப்பர்.
புழுக்காத சாணம்: இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது. இப்படி பல அதிசயங்கள் இத்தலத்தில் நிகழும். இத்தலத்துக்கு மன்னன் திப்பு சுல்தான் மார்கழி திருவாதிரை நாளில் வந்துள்ளான். இக்கோயில் அதிசயங்களை எல்லாம் கேள்வியுற்றவனுக்கு மேலும் ஓர் அதிசயத்தை பக்தர்கள் கூறியுள்ளனர்.
ஈசன் குடியிருக்கும் சிவலிங்கம் அசையும் என்பதே அது. ஈசனின் திருமுடி மீது கை வைத்ததும் அதன் அதிர்வுகளை உணர்ந்துள்ளான். கோயிலுக்கு நிறைய நிலங்களை மானியமாக வழங்கியுள்ளான். அதுபோலவே ஹைதர் அலியும் இத்தலத்துக்கு நிறைய நிலங்களை வழங்கியுள்ளதாக கல்வெட்டுகள் உரைக்கின்றன.
வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் அன்னையாக பச்சை நாயகி இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நிதியின் முன்னர் சிங்கம் சிலை காணப்படுகிறது, அதன் வாயில் ஓர் உருண்டைக் கல் உருளுகிறது. கல் வெளியில் வராதபடி அதன் பற்கள் உள்ளன.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.
சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் ஒருமுறை பட்டீஸ்வரரை வணங்க வந்தார். ஈசன் அவரது தோழர் என்பதால் அவ்வப்போது ஈசனிடம் பணம் கேட்பார் சுந்தரர். சுந்தரர் பணம் கேட்பாரே என்று அஞ்சி, பச்சை அம்மனுடன் ஈசன் நாற்று நடும் தொழிலாளியாக வேடமிட்டு அவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டதாகக் கூறுவார்கள். இச்சம்பவத்தை தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார் சுந்தரர்.
இத்தலத்தில், இறைவன் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் ஆனி மாதத்தில் நாற்று நடும் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். மார்கழியில் திருவாதிரைப் பெருவிழா, பங்குனியில் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டி விநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் சித்திக்கும். இத்தல ஈசனை வணங்குவதால் வாழ்வில் வசந்தம் வீசும்.
அமைவிடம்: கோவை காந்திபுரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் சிறுவாணி செல்லும் சாலையில் பேரூர் உள்ளது.