ஆனந்த ஜோதி

வாழவைத்த கழுத்து ஆடை

செய்திப்பிரிவு

மகளிர் மீது செலுத்த வேண்டிய கண்ணியம் குறித்து நபிகளார் சிறந்த வழிகாட்டுதலைக் கூறியுள்ளார். இதை ஒவ்வொருவரும் கடைபிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒரு நீக்ரோ அடிமை பெண்மணி அடிக்கடி வந்து, இருவரும் பேசிக் கொண்டிருப்பர். சிறு சிறு வேலைகளில் உதவிகரமாக இருப்பார்.

அவ்வப்போது தனக்கு மகிழ்ச்சி ஏற்படும் நேரத்தில் அல்லது மகிழ்ச்சியான செய்தி வரும் நேரத்தில் கவிதை ஒன்றை வாசிப்பார். ‘அந்த கழுத்து ஆடைக்குரிய நாள், என் இறைவனின் அற்புதங்களில் ஒன்று அல்லவா, அவன் என்னை இறை மறுப்பின் ஊரிலிருந்து வெளியாக்கி ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளச் செய்த நாளல்லவா அது !’ என்ற கவிதையை அடிக்கடி வாசிப்பார்.

ஒரு நாள் ஆயிஷா அவர் அடிக்கடி பாடும் அந்த கவிதையின் பொருள் என்ன என்று கேட்டார். அந்த பெண்மணி சொன்னார்: நான் ஒரு நீக்ரோ அடிமை. அரபு வம்சத்தில் ஒரு குடும்பத்தாரின் அடிமையாக நான் இருந்தேன். அந்த வீட்டில் ஒரு சிறுமிக்கு ஒருநாள் புத்தாடை அணிவித்து அழகு பார்த்தனர். கழுத்தின் மேல் அணியும் மேலாடையில் முழுக்க முழுக்க முத்துக்கள் ஒட்டப்பட்டிருந்தன. தெருவில் மற்ற சிறுமிகளுடன் விளையாடும்

போது கழுத்து ஆடை கீழே விழுந்து விட்டது. முத்துக்களின் வெளிச்சத்தில் அந்த சிறுமியின் சதை தெரிந்து அதைப் பார்த்து அந்த ஆடையை இறைச்சி என ஏமாந்த ஒரு கழுகு அதை தூக்கி சென்று விட்டது. வீட்டில் உள்ள அனைவருக்கும் நீக்ரோ பெண்ணாகிய என் மீது சந்தேகம். திருடிவிட்டாய் என்று குற்றம் சுமத்தி என்னை சோதனை செய்தனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது அதே கழுகு வீட்டு முற்றத்தில் அதை போட்டு விட்டது. காணாமல் போனது இதோ வந்து விட்டது.

ஆனால் என் மீது சுமத்தப்பட்ட திருடி என்ற பழி? மனமுடைந்த நான் இதற்கு மேல் மானம் இழந்தவளாக இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பி விட்டேன். இச்சம்பவத்துக்கு சில மாதங்களுக்கு முன்பாக என்னை அவர்கள் விடுதலை செய்தனர். அந்த உரிமையில் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

நபிகள் பற்றிய செய்தி கேட்டு நேரடியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமை சந்தித்து இந்த மார்க்கத்தை நான் ஏற்றுக் கொண்டேன். எனவே அந்த நாள் என்பது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

எனக்கு ஈமானிய வெளிச்சமும் ஏகத்துவமும் கிடைத்த நாள். அந்த நாள் ஆன்மிகத்தில் நான் ஒரு சிறந்த இடத்தை அடைந்த நாள். எனவே என்னால் அந்த நாளை மறக்க முடியாது என்று அந்த பெண்மணி ஆயிஷா அம்மையாரிடம் பதில் சொன்னார்.

மஸ்ஜித் நபவியின் ஒரு பகுதியில், நபிகளார், தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலேயே அந்த பெண் தங்குவதற்காக ஓர் இடத்தையும் கொடுத்து அதில் கூடாரம் அமைத்து கொடுத்தார். வயது முதிர்ந்த காலத்திலும் கூட அந்த பெண்மணி மஸ்ஜித் நபவியை தூய்மைப்படுத்தும் பணிகளை தினமும் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு அந்த பெண்மணி மரணித்து விட்டார். சுற்றிலும் இருந்த நபித்தோழர்கள் அந்த பெண்ணை அடக்கம் செய்தனர். காலையில் அந்த பெண்மணி பற்றி நபிகளார் கேட்க இரவில் நடந்தவை கூறப்பட்டது. உடனடியாக அந்த பெண்மணி அடக்கம் செய்யப்பட்ட இடம் சென்று பிரார்த்தனை செய்தார் நபிகளார்.

- செ. தாஹிர் சைஃபுதீன்

SCROLL FOR NEXT