ஆனந்த வாழ்வு அளிக்கும் தலமாக ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஒரே கோயிலுக்குள் 5 திவ்யதேச மூர்த்திகளின் திவ்ய தரிசனத்தையும், உக்கிரம் தணிந்து கருணை மழையாகப் பொழியும் நவ நரசிம்ம மூர்த்திகளின் பேரருளையும் ஒருங்கே பெறும் பேற்றை அடைகின்றனர்.
‘அவனி நாராயணபுரம்' என்று அழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் ஆவணியாபுரம் என மருவியதாகக் கூறப்படுகிறது. சம்ஸ் கிருதத்தில் ‘அவனி' என்றால் 'சிங்கம்' என்று பொருள். அதனால் இத்தலம் ‘ஆவணியாபுரம்' என்று பெயர் பெற்றது.
இத்தலத்தில் நவ நரசிம்ம மூர்த்திகள் அருள்புரிவதால், இது ‘தட்சிண அகோபிலம்’ என்றும் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. மலையடிவாரத்தில் உள்ள அலங்கார வளைவிலேயே, சிம்ம முகத்துடன் கூடிய திருமகளைத் தன் மடியில் அமர்த்திய கோலத்தில் சுதைச் சிற்பமாக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
இங்கிருந்து 70 படிகள் ஏறிச் சென்றால், இரண்டு அடுக்குகளாக அமைந்த அழகிய குன்றுக் கோயிலை அடையலாம். மலையின் இடுக்கில் அமைந்த இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் முதல் நுழைவாயிலில், குகை போன்ற கருவறையில் லட்சுமி நரசிம்மர் தாயாருடன் அருள்பாலிக்கிறார்.
நரசிம்மர் அமர்ந்த நிலையில், மகாலட்சுமி தாயார் அவரது இடது தொடையில் சிம்ம முகத்துடன் அமர்ந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. வழக்கமாக சாந்த ரூபத்திலேயே காட்சியருளும் திருமகள், இங்கு சிங்க முகத்துடன் தோன்றுவது மிகவும் அபூர்வமானதொரு அம்சமாகும்.
நரசிம்மரின் இடது கை, துணைவியாரை அணைத்தபடியும், வலது கை அபய ஹஸ்தமாகவும் உள்ளது. மேல்கைகளில் சக்கரம், சங்குவீற்றிருக்கின்றன. இவர் எதிரே எழுந்தருளியுள்ள கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி அருள்வது மற்றொரு தனிச் சிறப்பாகும். கோயிலின் பிரகாரத்தின் வலப்பக்கத்தில், பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தனித்தனியாக வரிசையாக உள்ளனர்.
மேலும், உற்சவ மூர்த்தியான நரசிம்மர் சிங்க முகத்துடன் 4 கரங்களுடன் நின்ற நிலையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். கருடனுக்கென்று தனி சந்நிதியும் அமைந்துள்ளது.
இக்கோயிலில், லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் 3 நரசிம்ம மூர்த்திகளும், தாயார் சந்நிதி அருகே 5 நரசிம்ம மூர்த்திகளும், மலை உச்சியில் உள்ள சந்நிதியில் யோக நரசிம்மருமாக மொத்தம் 9 நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள ஆஞ்சநேயர், வில்லேந்திய வீர ஆஞ்சநேயராக காட்சி அருள்கிறார்.
மலையின் இரண்டாவது அடுக்கில் 100 படிகள் ஏறிச் சென்றால் 5 திவ்யதேச மூர்த்திகளை தரிசிக்கலாம். பிருகு மகரிஷியின் தவத்தை மெச்சி, பெருமாள் அவருக்கு 5 திவ்ய தேசங்களில் அருளும் கோலங்களில் இங்குகாட்சி நல்கியதாக தலபுராணம் கூறுகிறது.
லட்சுமி தேவி சமேத அஹோபிலம் நரசிம்மர், ரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கம் ரங்கநாதர், அமிர்தவல்லி தாயார் சமேத யோக நரசிம்மர் (சோளிங்கர்), பெருந்தேவி தாயார் சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், அலமேலு மங்கை சமேத திருப்பதி சீனிவாச பெருமாள் ஆகிய திவ்ய தேச மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். 1,500 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எண்ணற்ற திருத்தலங்களில் கடுந்தவம் இயற்றியும், முக்திப் பேறு கிட்டவில்லையே என்ற ஏக்கத்தால் பிருகு மாமுனிவர், நாராய
ணனின் திருவடிகளில் முழுமையாகச் சரணடைந்தார். முனிவரின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்த பகவான், அவரது கனவில் தோன்றி, “மாமுனியே, கலங்காதே! தென்திசையில் 'ஆவணி நாராயணபுரம்' எனும் புண்ணிய பூமி உண்டு.
அங்குள்ள சிம்மாசல கிரிக்குச் சென்று என்னை நோக்கித் தவமியற்று. உன் தவத்தின் பலன் அங்கு உனக்குக் கிட்டும்” என திருவாய் மலர்ந்தார். பிருகு மகரிஷி உடனே ஆவணி நாராயணபுரத்தை அடைந்து அந்த சிம்மாசல மலையில் கடுந்தவத்தில் ஆழ்ந்தார்.
முனிவரின் தவத்தில் மகிழ்ந்த நாராயணன், தாம் அளித்த வரத்தின்படி, தன் திருமார்பில் மகாலட்சுமியைத் தாங்கியபடி, சிங்கத்தின் சீற்றமும் தெய்வத்தின் சாந்தமும் ஒருங்கே இணைந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மராகவும் மேலும் ஐந்து திவ்யதேச பெருமாளாகவும் அவருக்கு காட்சி அருளினார்.
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சர்வதாரி வருடம், ஆனி மாதம் 9-ம் நாளில்தான் தாயார் சிங்க முகத்தைப் பெற்றார். இந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாளில் மட்டுமே, இந்த மலைக்கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு நான்கு வகையான நைவேத்திய பிரசாதங்கள் படைக்கப்படும்.
அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.