‘வாயினால் பாடி மனத்தால் சிந்தித்து தூமலர் தூவி இறைவனை அன்றாடம் வழிபட வேண்டும்’ என்று பாவை பாடிய பைங்கிளி ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத் திருநாள் அனைத்து வைணவ கோயில்களிலும் சிறந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. பெரியாழ்வார் அமைத்த நந்தவனத்தில் துளசி காட்டில் தூயவளாய் தோன்றியவள் ஆண்டாள். அன்னை மகாலஷ்மியே பெரியாழ்வார் தமிழ் கேட்க அவரது திருமகளாய் அவதரித்தார்.
அந்த ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தில் திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் ஆடிப்பூர உற்சவம் (திங்கள்கிழமை 28.7.2025) நடைபெறுகிறது. மாலை 3 மணியளவில் ஸ்தலசயனப் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடைபெற்ற பின்பு மாட வீதி உலா காண திவ்ய தம்பதி எழுந்தருள்கின்றனர்.
முன்பாக அவர்கள் பூதத்தாழ்வார் அவதார தலத்தில் தங்குகின்றனர். இந்த அவதார தலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கேற்ப 28 வகையான மலர்ச் செடிகள் பயிரிடப்பட்டு தினமும் மலர் மாலைகள் இறைவனுக்கு சாற்றப்படுகின்றன. ‘செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி’ என எண்வகை பூவும் கொண்டு பாமாலையுடன் பூமாலையும் கட்டி சாற்றி மகிழ்ந்தார் விஷ்ணுசித்தர்.
அவரிடத்தில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்த கோதையோ கண்ணையே மணாளனாக வேண்டி பாவை நோன்பிருந்து பாவை பாடினாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என பெயரெடுத்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே அரங்கனுக்கும் அணிவிக்கப்பட்டது.
அந்த ஆண்டாள் அவதரித்த வில்லிபுத்தூரில் ஒவ்வொரு பூரநட்சத்திரத்தன்றும் தான் பிறந்த நந்தவனத்துக்கு எழுந்தருளி உற்சவம் நடைபெறும். அப்படி பெரியாழ்வார் பெண் பிள்ளை ஆண்டாளும் நந்தவன நாயகியாக இந்த திருக்கடல் மல்லை நந்தவனத்தில் பூதத்தாழ்வார் அவதரித்த புண்ணிய பூமியில் தன்நாயகனுடன் எழுந்தருள்வது தனிச் சிறப்பு.
இதில் மேலும் ஓர் ஒற்றுமை என்னவென்றால், திருமலை, திருக்கடல்மல்லை, வில்லிபுத்தூர் போன்ற திவ்ய தேசங்கள் யாவும் வராக ஷேத்திரம் ஆகும். இதில் திருமலை புஷ்ப மண்டபம் என்றே பெயர்பெற்றது.
திருக்கடல் மல்லையில் பூதத்தாழ்வார் கருங்குவளை மலரில் அவதரித்தவர். பெரியாழ்வாரின் நந்தவனத்துக்கு புகழ் பெற்றது வில்லிபுத்தூர். ஆக எம்பெருமானின் புஷ்ப கைங்கர்யத்தில் பெரியாழ்வார், ஆண்டாள் ஈடுபட்டதைப்போல, தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் துளப (துளசி) தொண் டாற்றி அரங்கனுடன் கலந்தார்.
ஆழ்வார்கள் வழியில், சிந்து பூ மகிழும் திருவேங்கடம் என்னும் நம்மாழ்வார் பாசுரத்தின்படி ராமானுஜர் இட்ட கட்டளைக்கிணங்க அனந்தாழ்வான், திருமலையில் ஏரி அமைத்து, நந்தவனம் அமைத்து பல காலம் திருவேங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர். ஆண்டாள் மேல் பக்தி கொண்டு வில்லிபுத்தூர் சென்று தரிசித்து அங்கே ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்தில் நீராடி தரிசித்தார்.
ஆண்டாள் குறித்து கோதா சதுஸ்லோகி என்னும் ஸ்தோத்திர நூலை இயற்றியவர். அந்த ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூர திருநாளில் திருமலையில் பரமபதம் அடைந்தார் அனந்தாழ்வான். திருவேங்கடவன் ஆணைப்படி அவர் ஏற்படுத்திய நந்தவனத்திலேயே இவருக்கு திருவரசு அமையப் பெற்றது.
இந்த திருவாடிப் பூரத்தன்று மலையப்ப ஸ்வாமி தன் தேவியருடன் இந்த அனந்தாழ்வானின் திருவரசுக்கு எழுந்தருளி, மகிழ மரத்துக்கு சடாரி மரியாதை இன்றளவும் நடைபெற்று வருகிறது. அப்படி புகழ்பெற்ற இந்த மூன்று வராக ஷேத்திரங்களிலும் திருவாடிப்பூரத் திருநாள் புஷ்ப கைங்கர்யத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாகவே நடைபெறுகிறது.