ஆனந்த ஜோதி

கடன் பிரச்சினை தீர்க்கும் திருமயிலாடி சுந்தரேசர்

பொ.பாலாஜிகணேஷ்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள திருமயிலாடி சுந்தரேசர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. புராண காலத் தொடர்புடைய கோயிலாக இக்கோயில் போற்றப்படுகிறது. திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப்பார்க்க நினைத்த சிவபெருமான், ‘இணையில்லாத பேரழகு வடிவானவன் நான்தான்’ என்கிறார். உமாதேவியோ, ‘இல்லையில்லை.

நானே அழகில் சிறந்தவள்’ என்று பதில் கூறுகிறார். யார் அழகு? என்ற விவாதம் தொடர ஒரு கட்டத்தில் சிவபெருமான் கோபமாகி மறைந்து போகிறார். பெருமானைக் காணாமல் தவித்த உமாதேவி தன் தவறை எண்ணி வருந்துகிறாள். எம்பெருமானை எப்படி வரவழைக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்த உமாதேவி, உடனே அழகிய மயில் வடிவம் எடுத்து, கண்ணுவாச்சிபுரம் என்ற தலத்துக்குச் சென்று ஈசனை வழிபடுகிறாள்.

அப்போது அழகிய கோலத்தில் சுந்தர மகாலிங்கமாக ஈசன் காட்சி அருள்கிறார். சிவனின் சுந்தரவடிவம் கண்ட உமாதேவி உச்சிக்குச் சென்று மயில்வடிவாக மாறி தனது தோகையை விரித்து ஆனந்த நடனம் ஆடினாள். அது முதல் இந்த தலம் ‘திருமயிலாடி’ எனப் பெயர் பெற்றிருக்கிறது.  கண்ணுவ மகரிஷி யோக சாதனை செய்த தலம் என்பதால் இந்த ஊர் கண்ணுவாச்சிபுரம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

அக்காலத்தில் இக்கோயிலில் திருப்பணி நடந்துகொண்டிருக்கும்போது, பிருகன்நாயகி சிலையில் விரல்பகுதி உடைந்துவிட, அந்த சிலையை அப்படியே வைத்துவிட்டு, வேறு புதிய சிலையை வடித்து பிரதிஷ்டை செய்ய தயாராகியிருக்கின்றனர்.

அப்போது ஒருநாள் கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருந்தவர், அனைவரது கனவில் ஒரே நேரத்தில் தோன்றிய பிருகன்நாயகி, ‘உனது தாய்க்கு வயதானாலோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ ஒதுக்கி வைத்துவிடுவாயா? அல்லது அவளுக்கு பதில்வேறு தாயை ஏற்றுக் கொள்வாயா? என்னை ஏன் மாற்றுகிறாய்? எனக்கும் இந்த கோயிலில் சந்நிதி அமைக்க வேண்டும்’ என்று கேட்டாள்.

அதன்படி இக்கோயிலில் 2 சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கத் தீவில் பத்மாசுரன் என்ற அரக்கன் கொடுங்கோலாட்சி புரிந்து வந்தான். அவன் தேவர்களை துன்புறுத்தி வந்ததால் கோபம் கொண்ட முருகப் பெருமான் தனது படைகளுடன் சென்று பத்மாசுரனுடன் போர் புரிந்தார்.

முருகப்பெருமானை எதிர்த்துப் போரிட முடியாத பத்மாசுரனோ அவரை வஞ்சனையால் வீழ்த்த எண்ணி, அபிசார வேள்வியை தொடங்கினான். அப்போது வேள்வித்தீயிலிருந்து ஜுர தேவதை வெளிப்பட்டு தேவர் படையை கடுமையான வெப்பம், வைசூரி, ஜுரம் ஆகிய நோய்களால் வாட்டியிருக்கிறாள்.

இதனைக் கண்ட முருகக் கடவுள் திருமயிலாடி தலத்தில் வடதிசை நோக்கி தவம் செய்து சீதளாதேவியை வரவழைத்தார். அவள் ஜுர தேவதையுடன் சண்டையிட்டு வென்று அவளை முருகனிடம் ஒப்படைத்தாள். இதன் பின்னர் தேவர்கள் மீண்டும் போரிட்டு பத்மாசுரனை வென்றனர்.

தேவர் தலைவனாகிய இந்திரன், முருகப்பெருமானை இதே தலத்தில் தவக்கோலத்தில் இருக்குமாறு வேண்டி, அவ்வாறே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிறிய கிராமத்தில் 60 அடி உயரம் உள்ள 3 நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் நந்தி, பலிபீடம்.

இடது பக்கம்தெற்கு முகம் பார்த்து பிருகன்நாயகி அருள்பாலிக்கிறாள். இங்கு 2 அம்பாள் சந்நிதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இடது பக்கம் திரும்பினால் வடக்கு திசை பார்த்து பாலமுருகன் 4 கரங்களோடு காட்சி அருள்கிறார். அர்த்த மண்டபத்தில் பிரதோஷ நந்தி மட்டுமே உள்ளது. கோயிலில் உள்ள 2 நந்திக்கும் பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது.

கருவறையில் சுந்தரேசர் கிழக்கு திசை நோக்கி வட்ட பீடத்தில் அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி உற்சவம் 10 நாள் இங்கு நடைபெறுகிறது,பொதுவாக கந்தசஷ்டி அன்று அம்பாள் சந்நிதியில் தான் முருகன் வேல் வாங்குவார். ஆனால் இக்கோயிலில் முதலில் தந்தையான ஈசனிடம் வேல் வாங்கி அதை அன்னையிடம் ஒப்படைத்த பிறகு அன்னையிடமிருந்து வேல் வாங்குகிறார். பிறகு சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. இது இக்கோயிலில் மிக சிறப்பான ஒரு வைபவம்.

அமைவிடம்: நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்ளிடம் செல்லும் பேருந்தில் ஏறி புத்தூர்கடைத் தெரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 1கிமீ சென்றால் திருமயிலாடியை அடையலாம்.

SCROLL FOR NEXT