மோட்சத்துக்கு நேரான காரணம் எம்பெருமானின் அருள் என்றும், அதைப் பெறுவதற்கு முதலில் சேதனம், அசேதனம், ஈச்வரன் என்கிற மூன்று தத்துவங்களை நன்கறிய வேண்டும் என்றும் கூறுகிறார் ஸ்வாமி தேசிகன். இறைவன் குறித்த பகவத் விஷயங்களையும், தத்துவங்களையும் அறிவதற்கு குருநாதர் அவசியம்.
ஒரு ஸதாசார்யனை (குருநாதர்) அடைந்து வேதாந்த காலக்ஷேபம் செய்தால் தான் தத்துவங்களை உள்ள படி அறிந்து கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்ட தாதாசாரியர் காலக்ஷேப கோஷ்டியினர், அஸ்மத் ஸ்வாமி குமாரரும் ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஸஞ்சிகையின் ஆசிரியரும், திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வருமான திருப்புட்குழி ஆராவமுத தாதாசாரியரை ‘சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்’ என்று போற்றி, அவரிடம் இருந்து தத்துவங்களை கற்றறிந்தனர்.
ஆராவமுத தாதாசாரியரும் அவர்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக ரஹஸ்யத்ரய ஸாரம் மற்றும் பகவத் விஷய காலக்ஷேபம் சாதித்து வந்தார். இக்காலக்ஷேபம் நிறைவுற்ற நிலையில் கடந்த ஆனி - அஸ்வினி அன்று தரமணியில் ரஹஸ்ய த்ரயஸார சாற்றுமுறையும், அதைத் தொடர்ந்து பகவத்விஷய சாற்றுமுறையும் நடந்தேறியது.
அன்று அஸ்மத் ஸ்வாமி மஹாவித்வான் திருப்புட்குழி நரஸிம்ஹ தாதயார்ய மஹாதேசிகன் திருநட்சத்திர மஹோத்ஸமும் சேர்ந்து கொண்டதால் வேத, பிரபந்த சாற்று முறையை முதலில் முடித்த பின் சதஸ் நடைபெற்றது. வெங்கடேஷ் சாரங்கனின் வேத கோஷத்துடன் சதஸ் தொடங்கியது. முதலில் உரையாற்றிய காலக்ஷேப ஆச்சார்யன் ஆராவமுத தாதாசாரியர், ‘ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்’ ஸ்வாமி தேசிகனால் அவரது அந்திமதசையில் அருளிச் செய்யப்பட்ட ஓர் அரிய பொக்கிஷம்.
ஒரு ப்ரபன்னன் (இறைவனை சரணடைந்தவன்) அறிய வேண்டிய அனைத்து விஷயங்களையும் தன்னுள்ளே கொண்டது” என்றார். கோடிகன்னிகாதானம் கொண்டங்கி கண்ணன் தாதாசாரியர், மூலமந்த்ர அதிகாரத்தைப் பற்றி ஆங்கிலத்திலும், கல்யாணராமன் த்வயமந்த்ர அதிகார விளக்கத்தை தமிழிலும் அளித்தனர். அநுராதா சரமச்லோக அதிகாரம் பற்றிய விளக்கத்தையும், பேராசிரியர் மாதவன் பகவத் விஷயத்தின் பத்தாம் பத்தின் சாராம்சத்தையும் எடுத்துரைத்தனர்.
சீடர்கள் தெரிவித்த காலக்ஷேப விஷயங்களைத் தொகுத்து நூல்கள் வெளியிடப்பட்டன. ‘பகவத்விஷய பாவார்த்த ஸங்க்ரஹம்” என்ற புத்தகத்தை கண்ணன் தாதாசாரியர் வெளியிட, முதல் பிரதியை ஸ்ரீகிருஷ்ண தாதாசாரியர் பெற்றுக் கொண்டார். ‘ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரார்த்த ஸங்க்ரஹ தீபம்’ என்ற புத்தகத்தை பேராசிரியர் மாதவன் வெளியிட முதல் பிரதியை முரளி (திருச்சி) பெற்றுக் கொண்டார்.
அஸ்மத் ஸ்வாமி தம் சீடர்களுக்கு இறைவன் தொடர்பான பகவத் விஷயங்களை உபதேசித்தருளி, நம் சம்பிரதாயத்தை வளர்ப்பதிலேயே தமது ஆயுட்காலத்தைக் கழித்தவர். அவரது திருநட்சத்திர தினத்தில் இந்த சாற்றுமுறையை நடத்திய ஆராவமுத தாதாசாரியரை அனைவரும் பாராட்டினர். ம்ருதுளா நாராயணனின் மங்கள இசையுடன் காலக்ஷேப சாற்றுமுறை உற்சவம் நிறைவுற்றது.
- ராயதுர்கம் ஸ்ரீநிவாஸ தாதாசாரியர்