கும்பகோணத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் திருநறையூரில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் அலங்காரசுத்தரி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் அருள் பாலிக்கிறாள். இங்கு நவக்கிரக பீடத்தில் உள்ள சூரிய பகவான் உஷா, பிரதியுஷாவுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சனீஸ்வரர் மங்கள சனீஸ்வரராக போற்றப்படுகிறார்.
சனி பகவான் மணிமுத்தா நதியின் வட ஆரண்யத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சர்வேஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அதன் பயனாக ஈஸ்வர பட்டமும், கிரக அந்தஸ்தும் பெற்றார். சனீஸ்வர பகவானின் பரிகாரத் தலமாகப் போற்றப்படும் பிரம்ம புரியில் (திருநரையூர்) அவர் தன் மனைவிகள் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மந்தாதேவியின் இரு மகன்கள் குளிகன், மாந்தியுடன் அருள்பாலிக்கிறார்.
ராமாயண காவிய தலைவன் ஸ்ரீ ராமனின் தந்தையாகிய தசரதர் அயோத்தியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தபோது கால சக்கரத்தால் சனீஸ்வரன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்ல இருப்பதை, தன் ஆஸ்தான ஜோதிடர்கள் மூலம் அறிந்தார். குலகுருவான வசிஷ்டர், “இந்த காலகட்டத்தில் 12 ஆண்டுகள் வற்றாத செல்வங்கள் குன்றுவதுடன் பஞ்சம் பெருகும். மக்களும் விலங்குகளும் அவதிப்படுவார்கள். மேலும் பெரும் தீமைகள் ஏற்படும்’’ என்றார்.
இதையடுத்து தசரதர் தன் உன்னதமான தேரில் அமர்ந்து தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள ரோகிணி நட்சத்திரத்தை அடைந்தார். அப்போது இரண்டாவது சூரிய பகவான் போல் வந்த சனீஸ்வரனைப் பார்த்து தசரதன், “தாங்கள் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்ல வேண்டாம். அப்படி பிளந்து கொண்டு செல்வதால் ஏற்படும் மிகக் கெடுதியான பலன்களை தவிர்க்க வேண்டும்” என்றார். சனி பகவானும் அவ்வாறே வரம் அளித்தார்.
இதில் மகிழ்ச்சி அடைந்த தசரதர், பிரம்மபுரி என்கிற தலத்தில் உள்ள சனீஸ்வர பகவானை வணங்கினார். இதையடுத்து சனிபகவான், “ நீ துதித்த இந்த சனி ஸ்தோத்திரத்தை துதிப்போருக்கு தோஷங்களை நீக்கி சுப பலன் அளிப்பேன். சனிக்கிழமைதோறும் வன்னி இலையால் என்னை அர்ச்சனை செய்து வணங்கி, சிறிதளவு உளுந்து கலந்த எள்ளன்னம் தானம் செய்பவர்களை நான் பிடிப்பதில்லை.
கோச்சாரத்திலும் தசையிலும் புத்தி அந்தரத்திலும் நான் நன்மை செய்வேன். இங்கு வந்து என்னை வழிபடுவோருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைப்பேன்’’ என்று அருளினார். சனிபகவானின் உற்சவமூர்த்திக்கு சனிப் பெயர்ச்சிதோறும் திருக்கல்யாணம் நடை பெற்று திருவீதியுலா வருவது தனி சிறப்பாகும்.