யோகம், தியானம், தவம் ஆகிய அரிய கலைகள் குறித்து அகத்தியர் முதல் இன்று வரை பல ஞானிகள் விளக்கிக் கூறியுள்ளனர். இன்றைய சூழலில், மெய்ஞானமே உண்மையான அமைதியை தரும் என்பதை நாம் யாவரும் உணர்ந்துள்ளோம். இறைவனே நமக்கு உண்மையான குரு. அவர் காட்டிய மெய்ஞான வழியிலேயே எப்போதும் நடப்போம்.
யோகம், தியானம், தவம் போன்றவற்றில் பயிற்சி பெற வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு பலர் வருகின்றனர். ஏனெனில், நம் நாட்டில்தான் சித்தர்கள் உருவாக்கியுள்ள முறையான மெய்வழிகள் உள்ளன. ஒவ்வொரு மனிதரும் தன்னையறிந்து கொள்வதுடன், இறைவனையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் சித்தர்களின் விருப்பம். அதற்காகவே அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர்.
இறைவனை நாடி முக்தி பெற, ஜென்ம சாபல்யம் தீர விரும்பி தவிப்பவர்கள் ஏற்கெனவே இறை அனுபவம் பெற்ற மகான்களை, சித்தர்களை தரிசித்து வணங்குகின்றனர். மெய்யறிவை வேண்டிய ஒருவர் தன் கைகள் நிறைய மலர்களுடன் புத்தரை காண வந்தார். புத்தர் அவரைப் பார்த்து ‘கீழே போடு’ என்றார். வந்தவருக்கு குழப்பம். ஒருவேளை இடது கையால் பூக்களை அர்ச்சிப்பது சரியல்ல என்று சொல்கிறாரோ என நினைத்து இடது கையில் வைத்திருந்த மலர்களை கீழே போட்டார்.
மறுபடியும் புத்தர், ‘கீழே போடு’ என்றார். இந்த முறை வந்தவர் சற்று குழப்பம் தெளிந்தவராக,ஒருவேளை இந்த சடங்குகள் வேண்டாம் என்கிறாரோ என்று நினைத்து கொண்டு, வலது கையிலிருந்த மலர்களையும் கீழே போட்டு விட்டு வெறும் கைகளுடன் நின்றார்.
மறுபடியும் அவரிடம் புத்தர் ‘கீழே போடு’ என்றார். திகைப்பும், குழப்பமுமாக அந்த மனிதர், ‘நான் எதை கீழே போடுவது’ என்றார். ‘நான் கீழே போடும்படி சொன்னது மலர்களை அல்ல. அவற்றைக் கொண்டு வந்தது எதுவோ, அதை கீழே போடு’ என்றார், புன்னகை மாறாமல்.
‘நான்’ என்ற உணர்வை உதறிவிடு என்பது புத்தரின் உபதேசம். உண்மையான அறிவு, மெய்யான பக்தி அடக்கத்தை கொடுக்கும். அந்த அறிவு, பக்தி தன்னிடம் எதுவும் இல்லை என்ற உண்மையை உணர்த்தி 'நான்’ என்ற அகந்தையை விலக்கி விடும். அதனாலேயே அது மெய்யறிவு என்று கூறப்படுகிறது. அசைக்க முடியாத நம்பிக்கை, அயராத மெய்த் தொண்டு, ஞான வேட்கை, தொடர் யோகப் பயிற்சி இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது மெய்யான பக்தியேயாகும்.
அன்னை ஆதிபராசக்தியை பத்து வயது சிறிய பெண்ணாக (வாலைக் குமரி) சித்தர்கள் வழிபட்டனர். இது வாலை வழிபாடாகும். ஆதிபராசக்தியின் அருள்பெற வாலையை வணங்கினாலே போதும் எனவும், சிவனின் அருள் பெற முருகப் பெருமானை பூஜிக்க வேண்டும் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர்.
‘ஓம்’ என்பதே வாலையின் மந்திரம். அ, உ, ம் என்ற அட்சரங்கள் ‘ஓம்’ என்னும் மந்திரத்தில் அடங்கியுள்ளன. அனைத்து மந்திரங்களுக்கும் மூலமானது இந்த ஓங்காரம் என்னும் பிரணவ மந்திரமே. பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம் மற்றும் இவற்றின் அனல் ஆகிய ஒன்பதும் பிரணவமாகும் என்கிறார் திருமூலர்.
‘ஓம், ஓம், ஓம்’ என்று இடைவிடாமல், சீராக சொல்ல சொல்ல, மனம் அந்த ஒலியில் ஆழ்ந்துவிடும். ஆழ்ந்து விட, ஆழ்ந்துவிட, பிரணவத்தின் அதிர்வுகள் நமக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். தானாகவே மனம் தியானத்தில் வயப்பட்டுவிடும். ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தை உச்சரித்து வருபவர்களின் உடலையும், உயிரையும் இது கவசம் போல் பாதுகாக்கும். உள்ளமும், உடலும் தூய்மையடையும்.