மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று அம்சங்களிலும் தனித்துவமிக்க தலமாகத் திகழ்வது பரியா மருதுபட்டி. பொன்னமராவதி நகரின் தெற்கே 4 கிமீ தொலைவில், அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு, ஸ்ரீநரசிம்மர் அவதாரம் எடுத்து இரணிய சம்ஹாரம் செய்து முடித்தார்.
மிக உக்கிரமாகத் தோன்றிய நரசிம்மரை அடக்கி சாந்தம் அடைய திருவுளம் கொண்ட சர்வேஸ்வரன் பாதி உடல் மிருகமாகவும், பாதி உடல் பட்சியாகவும், இறக்கையுடன், 8 கால்களுடன் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து நரசிம்மரின் உக்கிரம் தணித்து அவரை சாந்தமூர்த்தியாக்கினார்.
இத்தகைய தனித்தன்மை கொண்ட சரபேஸ்வரரே இத்தலத்தில் லிங்கேஸ்வரராக இரு தேவியர் சகிதம் அருள்பாலிக்கிறார். காளி, மகாமண்டபத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் பரஞ்சோதி அம்பிகையாகவும், துர்கை தெற்குப் பார்த்த வண்ணம் முகமண்டபத்தில் பார்வதி அம்பிகையாகவும் எழுந்தருளியுள்ளனர். பார்வதி அம்பாளின் சந்நிதி மண்டபத்தில் மகாமேருவின் புடைப்புச் சிற்பமும், அதே கருவறையில் ஸ்ரீசக்கரமும் உள்ளது தனிச்சிறப்பாகும்.
அந்நாளில் இரணியனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷ நிவர்த்திக்காக பெருமாள் இத்தலத்தில் வேடுவர் குலத்தில் மானிடராய்ப் பிறந்தார். மருத வனத்தில் அருள்பாலித்திருக்கும் பரியா மருந்தீஸ்வரரை அதாவது சரபேஸ்வரரை தினமும் பொன்னாங்கண்ணி கீரை நைவேத்திய பிரசாதம் வைத்து வணங்கி வர, ஒரு கட்டத்தில் அவருக்கு இருந்த தோஷம் நீங்கியது.
ஆதியில் ஏற்பட்ட இந்த வழக்கத்துக்கு ஏற்ப இன்றும் மார்கழி மாதம் முழுவதும் நைவேத்திய பிரசாதமாக மூலவருக்கு, பொன்னாங்கண்ணி கீரை படைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயம் மதுரையை முகமதியர்கள் ஆண்ட வேளையில் அந்த மன்னனின் ஐந்து வயது மகன் வாய் பேசாது ஊமையாய் இருந்தான்.
பல மருத்துவம், பல ஊர்களில் சுற்றித் திரிந்தும் அவனது மகன் பேசும் சக்தியைப் பெறமுடியவில்லை. அப்போது, இம்மருத வன ஈசனின் மகத்துவம் குறித்து கேள்விப்பட்டு இத்தலத்துக்கு வந்து வணங்கினான். பிரம்மாண்ட நந்திதேவர் முன்பு நின்று இந்த நந்தி புல் தின்னுமா என அர்ச்சகரிடம் கேட்டான்.
அதற்கு ‘தின்னும்’ என அவரும் பதில் அளித்தார். உடனே சிறிய புல் கட்டை அதன் வாயருகே கொண்டு செல்ல, ஆவலாய் நந்தியும் தின்று முடித்தது. இதனைக் கண்டு வெகுண்ட மன்னன் தன் கூரிய வாளால் ஆத்திரத்துடன் நந்தியின் வாலை வெட்டினான். மறுகணம் வால் அறுந்து கீழே விழ ரத்தம் கொட்டியது.
உடனே தனது தவறை உணர்ந்த மன்னன் நந்தியிடம் மன்னிப்பு கேட்டான். பின்னர் ‘இத்தனை சக்தி கொண்டு விளங்கும் நீ எனது மகனுக்கு பேசும் திறனை அளித்து அருள்வாயாக’ என வேண்டினான். கூடியிருந்த எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் மன்னனின் மகன் சரளமாக பேசத் தொடங்கினான்.
உடல்நலக் குறைபாடுகள் தீர, இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் சுத்தமான பசு நெய்யை நந்தி தேவருக்கு சாத்தி ஈசனை வழிபடுகின்றனர். இதனால் நந்திதேவர் நெய் மணக்க வெள்ளை நிறத்துடன் காட்சியளிக்கிறார்.
இந்த காரணத்தாலேயே மூலவருக்கு பரியா மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். 5-ம் திருநாளில் திருக்கல்யாணமும், 9-ம் திருநாளில் தேரோட்டமும் நடைபெறும்.
தேரோட்ட தினத்தில் பாரம்பரிய வழக்கப்படியும், நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாகவும் அடியார்கள் பலரும் அலகு குத்தி, பால்குடம் சுமந்து, காவடியுடன் ஆடிப்பாடி வீதியுலா வந்து கோயில் வாசலில் உள்ள பெரிய அரசமரத்தடியில் கனன்று கொண்டிருக்கும் பூக்குழியில் இறங்குவர்.
திருவாதவூராருக்காக ஈசன் நரிகளை பரிகளாக மாற்றியதாலும், மருதவனமாகவும் இத்தலம் விளங்குவதால் இவ்வூருக்கு காரணப்பெயராக பரியா மருதுபட்டி என்ற பெயர் ஏற்பட்டது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தால் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அமைவிடம்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பொன்னமராவதி நெடுஞ்சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ளது.