ஆனந்த ஜோதி

நினைத்ததை நிறைவேற்றும் கரூர் ரத்னகிரீஸ்வரர்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர் மலை ரத்னகிரீஸ்வரர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 64-வது தேவாரத் தலம் ஆகும். ஒரு சமயம் சூரியராஜன் என்ற மன்னனின் நவரத்தின கிரீடம் காணாமல் போனது. மன்னனும் கிரீடத்தைத் தேடி அலைந்தான். அய்யர் மலையில் ஈசனிடம் கிரீடம் இருப்பதாக ஒரு வேதியர், மன்னனிடம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் மன்னன் படையுடன் அய்யர் மலைக்கு விரைந்தான். ஈசனே கோயிலில் ஓர் அந்தணராக நின்று கொண்டிருந்தார்.

அருகில் இருந்த கொப்பரையில் காவிரியில் இருந்து நீர் கொண்டு வந்து நிரப்பினால் மணிமுடியைக் கொடுப்பதாகக் கூறினார். அரசனும் நீர் கொண்டு வந்து நிரப்பினான். எவ்வளவு முயன்றும் கொப்பரை நிறைந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மன்னன், தனது வாளை எடுத்து அந்தணர் மீது வீசினான்.

அந்தணர் அந்தக் கணமே சிவலிங்கம் அருகே நின்று மறைந்தார். அரசனின் வாள் ஈசனின் திருமுடி மீது பட்டு சிவலிங்கத்தில் இருந்து குருதி பீறிட்டது. மன்னன் தன் தவறை உணர்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முற்படும்போது, ஈசன் அவனைத் தடுத்து மணிமுடி சூட்டினார். இச்சம்பவத்தை ஒட்டி ஈசனுக்கு வாள்போக்கி நாதர் என்று பெயர் வந்தது. இன்றும் ஈசன் திருமுடி மீது அந்தத் தழும்பு இருப்பதைக் காணலாம்.

அய்யர் என்றால் தலைவன் என்று பொருள். எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் தலைவனாக இருக்கும் ஈசன் குடிகொண்டிருக்கும் மலை என்பதால் அய்யர் மலை என்று பெயர் பெற்றது. பாண்டவர்கள் ஐவரும் சிலகாலம் இந்த மலையில் தங்கியிருந்ததால் ஐவர் மலை என்று பெயர் பெற்று பின்னர் அய்யர் மலை என்று மருவியது.

கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் 1,017 படிகளைக் கொண்டு விளங்குகிறது அய்யர்மலை. இந்த மலையில் உள்ள படிகளைப் போல உயரமான படிகளும், செங்குத்தாக ஏறக்கூடிய படிகளும் அபூர்வம். மலை அடிவாரத்தைச் சுற்றிவர 4 கிமீ சாலை ஒன்று உள்ளது. இது, கிரிவலத்துக்கு உகந்ததாக உள்ளது.

மலை ஏறும்போது ஒரு குன்று காணப்படுகிறது. நினைத்தது கைகூட பிரார்த்திக்கும் இடமாக, சகுனம் பார்க்கும் இடமாக இன்றும் விளங்குகிறது சகுனக்குன்று. பதினெட்டாம் படியில் இருந்து சூடம் கொளுத்தி சத்தியம் செய்தால் அந்தச் சத்தியம் அடுத்த தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. காலங்காலமாக பதினெட்டாம்படி ஓர் இறை நாட்டாமையாக விளங்கி, மக்களின் சச்சரவுகளை பயபக்தியோடு தீர்த்து வருகிறது.

வீரப்பூரைச் சேர்ந்த ஏழு கன்னிப் பெண்கள் ஒருமுறை மலை உச்சியில் கடவுளை வழிபட்டுவிட்டு திரும்பிவரும்போது பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. கன்னிப் பெண்கள் தங்களுக்கு மலையில் பாதுகாப்பான இடம் தரும்படி ரத்னகிரீஸ்வரரை வேண்டினர். கன்னிப் பெண்களுக்காக ஈசன் ஒரு பாறையை இரண்டாகப் பிரித்து குகைபோல ஏற்படுத்திக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதை 689-வது படியைக் கடந்தால் காணலாம்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வைராக்கிய பெருமாள் தனக்கு குழந்தை வரம் கிடைத்தால் தன் சிரசை ஈசனுக்கு தருவதாக வேண்டினார். குழந்தை பாக்கியம் கிட்டியதும், பதினெட்டாம் படியில் நின்றுகொண்டு தனது சிரசை காணிக்கையாக தந்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது.

ஈசன் இவரது பக்தியை மெச்சி அருள்பாலித்தார். அதன்படி ஈசனுக்கு சூடிய மாலைகள் முதலில் இவருக்கு சூட்டப்படும். இறைவனுக்கு காட்டிய கற்பூர ஆரத்தி, பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் காட்டப்படுகிறது. அம்மனுக்கு படைத்த தளிகை இவருக்கே அளிக்கப்படுகிறது.

மலையடிவாரத்தில் இவர் உடம்பின் அடிப்பாகம் ஒரு சந்நிதியாகவும், நடுப்பாகம் மலைக்கு செல்லும் நடுவழியில் ஒரு சந்நிதியாகவும். தலைப்பாகம் மலைமேல் ஈசன் சந்நிதிக்கு மிக அருகில் ஒரு சந்நிதியாகவும் அமைந்துள்ளது. தேனும் தேங்காய்ப் பாலும்தான் இவருக்கு அபிஷேகம்.

ஆயர் ஒருவர் அபிஷேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பாலில் காகம் கவிழ்ந்ததால் அது எரிந்து போயிற்று. இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பதில்லை. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இன்று வரை நடக்கும் அதிசயமாகும்.

அமைவிடம்: கரூர் - திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் 9 கிமீ தொலைவில் அய்யர் மலை உள்ளது.

- விஜய நாராயணன்

SCROLL FOR NEXT