உலக உயிர்கள் பயனடையும்படி வாழ்வதே நம் பாரத கலாச்சாரத்தின் உயிர் மூச்சு. நோயற்ற ஆரோக்கிய வாழ்வு, வலிமையான உடல், நீண்ட ஆயுள், ஊக்கம் இவற்றோடு பிறர்க்கு உதவி செய்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணி செயல்படுவதே நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் வழி ஆகும்.
அசுர குல அரசனான ஹிரண்யகசிபுவின் மகன் பக்த பிரகலாதன் பல துன்பங்கள், கஷ்டம், கடும் வேதனை, சித்ரவதைகளை அனுபவித்தபின், தூணிலிருந்து நரசிம்ம [ நர – மனித உடல், சிம்ம – சிங்க முகம் ] அவதாரமாக கடவுள் தோன்றி ஹிரண்யகசிபுவை அழித்தார்.
பின் பிரகலாதனைப் பார்த்து, “உன் உறுதியான பக்தியில் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்றார். “நான் செய்த புண்ணியத்தால் உங்கள் தரிசனம் கிடைத்தது. உங்கள் ஆசியும் அருளும் எனக்கு போதும். வேறு எதுவும் வேண்டாம். உள்ளன்புடன் வழிபட்டு உங்கள் நினைவில் திளைப்பது மட்டுமே என் விருப்பம். வேறு எந்த விருப்பமும் எனக்கு இல்லை” என விடையளித்தான் பிரகலாதன். “உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற பேரவா எழுந்ததால் இந்த நரசிம்ம அவதாரம் எடுத்தேன்” என இறைவன் கூறினார்.
அவரது கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால் வேறு வழியின்றி, “ஒரே ஒரு விருப்பத்தை மட்டும் தங்களிடம் பிரார்த்திக்கிறேன்" என்றான் பிரகலாதன். “உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துன்பம், துயரம், கஷ்டம் விலகி இன்புற்று வாழ அருள் செய்யுங்கள். இதுவே நான் விரும்பும் வரம்” என கேட்டான். சின்னஞ்சிறு சிறுவனின் பெரிய விருப்பத்தை இறைவன் வரமாக அளித்தார்.
இதுவே நம் முன்னோரிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்; கலாச்சாரம்; பண்பாடு; பாரம்பரியம். இதை நாம் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும். இதைப் போன்ற மிக உயர்ந்த சிந்தனைகள் எனும் புதையல் மற்றும் பொக்கிஷங்களை பாதுகாப்பதே மனித குலத்தின் தற்போதைய தேவை.
அதி நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் அணு ஆயுதங்களைக் கொண்டு நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், நாம் பக்த பிரகலாதனின் பெருந்தன்மையான பிரார்த்தனையை நினைவில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.எனக்கு என்ன கிடைக்கும் என்பதைவிட என்னால் பிறருக்கு என்ன கொடுக்க முடியும்
என எண்ணுவதே வாழ்வின் உயர் லட்சியம்.
கண்விழிப்பதிலிருந்து மீண்டும் உறங்கும் வரை உயிர்வாழத் தேவையான உணவைத் தேடுவது மிருகம், பறவை, புழு, பூச்சி போன்ற உயிரினங்களின் இயல்பு. ஆறறிவுடைய மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இல்லையா? நிலையற்ற உலகில் அழியும் இயல்புடைய பொருட்கள் பலவற்றை சேகரிக்க இந்த கிடைத்தற்கரிய மனித பிறவியை வீணாக்குவது விவேகமற்ற செயல். சிந்திக்கும் திறனை மனிதர்களுக்கு மட்டுமே, இறைவன் அளித்துள்ளார்.
நான் ஏன் பிறந்தேன்? மனித வாழ்வின் நோக்கம் என்ன? உயிர் வாழ்வதன் பயன் என்ன? பணத்தை சம்பாதிக்க போட்டியும், அதை சேமித்து பாதுகாக்க சண்டை மற்றும் சச்சரவுகளில் ஈடுபடவா இந்த வாழ்க்கை? இறந்தபின் இந்த உலகிலிருந்து நாம் எதை எடுத்துச் செல்லப் போகிறோம்? பிறரை வஞ்சித்து ஏமாற்றி, பொய்சொல்லி அநியாயமாக சேர்த்த பணமும் பொருட்களும் இறந்தபின் நம்முடன் வருமா? நாம் மற்றவர்களுக்கு என்ன செய்தோமோ அது மட்டுமே நாம் இறந்தபின் நம்முடன் வரும்.
நாம் சம்பாதித்து சேர்த்த செல்வம், நகை, தங்கம், பணம், பொருள், வீடு, நிலம், கணவன்/மனைவி, குழந்தைகள் என யாரும், எதுவும் இறந்தபின் நம்முடன் வரப்போவதில்லை. நாம் செய்த நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலனாக புண்ணியம் மற்றும் பாவம் இவை இரண்டை மட்டுமே இந்த உலகிலிருந்து நாம் எடுத்துச் செல்ல முடியும்.
சந்தன கட்டை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, தன்னுள் இருக்கும் நறுமணத்தை பிறர் பயனடைய வீசுவதைப்போல், மற்றவர்களுக்கு உதவுவதே மனிதப் பிறவியின் நோக்கமாக இருக்க வேண்டும். பலன் கருதாமல் நாம் செய்யும் உதவி, பயனடைந்தவர்களின் இதயத்தில் இடம்பிடித்து என்றும் நீங்காத நறுமணம் கமழும் புகழாக நிலைத்து நிற்கும்.
மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கையே மேலானது. சுயநலத்துடன் வாழ்வது, நடைபிணமாக வாழ்வதற்கு சமம். எல்லோருடனும் சகோதர உணர்வுடன் பழகி, பிறர் துயர் தீர உதவுவோம். எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பது இறைவன் எனும் உண்மையை உணர்ந்து உதவுவதுதான் தெய்வீகம். ஒரே ஒரு நூல்தான் பல பூக்களைக் கோர்த்து ஒருங்கிணைத்து பெரிய மாலையாக உருமாற்றுவதைப்போல் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகிறார். இதை உணர்வதே ஞானம்.
உலகத்தையே நம் குடும்பமாக நினைப்பது மிக உயர்ந்த நிலை. எத்தனை உயிர்களுக்கு என்னால் உதவ முடியும்? என திட்டமிட்டு உதவுவதை இலக்காக கொண்டு வாழ வேண்டும். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் உள்ளம் வாடினேன்” எனச் சொன்ன வள்ளலாரைப் போல் செடி, கொடிகளுக்கும்கூட உதவ வேண்டும். ஊருக்கு உதவினால் கடவுள் நமக்கு உதவுவார். இதுவே பாரத தேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர் உலகுக்கு உணர்த்திய உண்மை.