விலங்குகள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் பல உண்டு. அந்த வகையில் கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில் எழுந்தருளிய ஈசன், புனுகுப் பூனைக்கு அருள்பாலித்த வரலாறு, பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மயிலாடுதுறைக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ள கூறைநாடு வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணை, குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது.
அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் பரவியிருந்தது. ஏற்கெனவே யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளதைப் போல தானும் நற்பேறு அடைய வேண்டும் என்று புனுகுப் பூனை நினைத்தது.
இதையடுத்து சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்தப் பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத் திருமேனி முழுவதும் புனுகை அப்பியது.
வில்வத் தளிர்களை வாயால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க, மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து, கயிலாய மலைக்கு அழைத்துக் கொண்டார்.
இத்தல ஈசன் புனுகீசர் என்று அழைக்கப்படுவார் என்று கூறி, பிரம்மதேவன், திருமால், தேவர்கள் உள்ளிட்டோர் ஈசனை வணங்கினர். சோழ மன்னன் புனுகீசருக்கு அதே இடத்தில், வைத்தீஸ்வரன் கோவில் அமைப்பில், ஒரு கோயில் அமைத்தான். கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் அருள்பாலிக்கின்றனர்.
சாந்த நாயகி அம்பாள் 4 கரங்களுடன், நின்ற நிலையில் அருள்பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் 2 கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் தருவது அபூர்வமானதாக கூறப்படுகிறது.