ஆனந்த ஜோதி

மன அமைதி நல்கும் யானைமலை யோக நரசிம்மர்

ரங்க ராமானுஜ தாஸன்

நரசிம்மர் கோயில்களில் மிகப் பெரிய உருவம் கொண்ட கோயிலாக யானைமலை யோக நரசிம்மர் கோயில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் பெருமாள், மனதில் இருக்கும் மூர்க்கத்தனத்தை நீக்கி மன அமைதிக்கு வித்திடுவார் என்பது ஐதீகம். உரோமச முனிவர் பல காலமாக குழந்தை வரம் இன்றி வருந்தினார். அதற்காக யாகம் செய்ய முடிவு செய்தார். உடனே அவருக்கு பிரகலாதன் நினைவுக்கு வர, அவனது உயர்வுக்கு காரணமான நரசிம்மரை மனதில் தியானித்தார்.

சக்ர தீர்த்தத்தில் நீராடி, நரசிம்மரை நோக்கி தவம் புரிந்தார். அவருடைய அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரை தரிசிக்க விரும்பினார். அவரது தவத்தின் பயனாக நரசிம்ம மூர்த்தி அங்கே தோன்றினார். உக்கிரரூபத்தில் தோன்றியதால் அனைவரும் நடுங்கினர். அவரது உக்கிரத்தை தணிப்பது குறித்து உரோமச முனிவர் யோசனை செய்தார். பிரகலாதனை அழைத்ததால் நரசிம்மரின் உக்கிரம் சற்றே தணிந்தது. ஆனால் முழுவதும் சாந்தம் அடையவில்லை.

இச்செய்தி மகாலட்சுமியின் காதுகளுக்கு எட்டியது. உடனே தாயார், தனது கனிந்த பார்வையால் நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தி அவர் மார்பில் அமர்ந்தாள். நரசிம்மரும் சாந்தமடைந்து யோக நிலையில் அனைவருக்கும் அருள்பாலித்தார். இந்தக் கோயிலில், மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு நோக்கியும் சேவை சாதிக்கின்றனர்.

பிரம்மதேவனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து விட்டார் சிவபெருமான். அதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார் ஈசன். இந்த தோஷத்தில் இருந்து விடுபட கஜகிரி தலத்துக்கு வந்தார். இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி, ஒரு மண்டல காலம் இத்தலத்தில் தங்கி நரசிம்மரை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.

முதலாம் வரகுணபாண்டியனின் அமைச்சரான மாறங்காரி என்பவன், கி.பி. 770-ல் இந்த கோயிலை எழுப்ப முற்பட்டான். ஆனால், இந்த திருப்பணிகள் முற்றுப் பெறாமல் பாதியிலேயே நின்றன. மாறங்காரிக்கு பிறகு அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவனது தம்பி மாறன் பொன்னன், கோயிலின் திருப்பணியை நிறைவேற்றி, முன்மண்டபமும் எழுப்பியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

யானை ஒன்று படுத்திருப்பது போன்று தோற்றம் தரும் இந்த மலை அடிவாரத்தில் அமைந்த குடவரைக் கோயிலில் யோக நரசிம்மரும் நரசிங்கவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குள் தெற்கு பார்த்தபடி அமர்ந்த கோலத்தில் மேல் இரு கரங்களில் தாமரை, முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் நரசிங்கவல்லித் தாயார் அருள்பாலிக்கிறார்.

கருட மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபத்துக்கு அருகே சிறிய கருவறையில், யோக நிலையில் பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்து யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கொடி மரம் கிடையாது. கொடிமரம் என்பது மேலுள்ள விமானத்தில் நீள அகல அளவைப் பொறுத்தே அமையும். இத்தலத்தில் கருவறைக்கும் மேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் இல்லை என்று கூறப்படுகிறது.

உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும் குடவரை அமைப்பில் உள்ளது. கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசி பெளர்ணமியில் கஜேந்திர மோட்ச உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காகவே இத்தலத்தின் அருகே அமைந்துள்ள திருமோகூரிலிருந்து காளமேகப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார். மேலும், இந்த மலையில் பெளர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது.

தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாகப் படுத்திருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த மலையும் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. திருமணம் நடந்தும் கணவன் மிகவும் கோபத்துடனும் மூர்க்கத்துடனும் நடப்பவனாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் கோபம் நீக்கி, அமைதி தவழும் இல்வாழ்க்கைக்கு வித்திடுவார் ஸ்ரீயோக நரசிம்மர் என்பது மக்களின் நம்பிக்கை. எனவேதான் இங்கே நரசிம்ம பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் பலர் வருகின்றனர்.

அமைவிடம்: மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT