தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 37-வது தலமாகவும் விளங்கும் திருக்கோடிக் காவல் திருக்கோடீஸ்வரர் கோயில், கர்மவினைகளைக் களையும் தலமாகப் போற்றப்படுகிறது. திருக்கடையூரில் கால சம்ஹாரம் நடந்த பிறகு, யமதர்மன் தன்னுடைய சக்தியை இழந்து அனைத்தும் சிவத்துக்குள் அடக்கம்' என்கிற தத்துவத்தை உணர்ந்து பிரம்புக் காட்டுக்குள் உறைந்திருக்கும் லிங்கத் திருமேனிக்குள் ஐக்கியமாகி அசைவற்று இருந்தார்.
காலன் இயக்கமற்று இருப்பதால் பூலோகத்தில் ‘மரணம்' என்ற நிகழ்வு நின்று விட்டது. பிறப்பு மட்டுமே நிகழ்த்து கொண்டிருந்ததால் பூமித்தாய் பாரம் தாங்காமல் தவித்தாள். சகல பூலோக காரியங்களும் முரண் பட்டதால் பூமி தடுமாறத் தொடங்கியது.
விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட எண்ணி வேத்ரவனத்தை (திருக்கோடிக்கா) நோக்கி ஓடிவந்தனர். அவர்கள் காவிரி நதியைக் கடக்க முயலும்போது அதன் சுழலில் சிக்கி மீள முடியாது தவித்தனர். அவசர கதியில் முதற்கடவுளாம் விநாயகரிடம் விண்ணப்பம் செய்யாது வந்ததால் ஏற்பட்ட சோதனை இது என்பதை தேவர்கள் உணர்ந்தனர்.
இதை தேவர்களுக்கு உணர்த்திய அகத்தியரும் துர்வாசரும் இதில் இருந்து அவர்கள் தப்புவதற்காக ஒரு வழியையும் அருளினர். அவர்களின் யோசனைப்படி காவிரி ஆற்று மணலிலேயே விநாயகப் பெருமானின் உருவத்தை சிருஷ்டி செய்து அவரிடத்தே பிழை பொறுத்துக் காக்குமாறு வேண்டினர்.
மனமிரங்கிய விநாயகரும் காவிரியாற்றின் வெள்ளத்தைத் தணித்து தேவர்களைக் கரையேற்றினார். தேவர்கள் சிருஷ்டித்த அவ்விநாயக மூர்த்தியே இத்தலத்தில் ‘கரையேற்று விநாயகர்' என்ற நாமத்துடன் நிலைத்து இருக்கிறார் என்பது புராணச் செய்தி. ஆற்று மணலால் ஆன திருமேனி என்பதால், விஸ்தாரமான அபிஷேகங்கள் இவருக்குச் செய்யப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் விசேஷமான ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்ற சிவத்தலம் இது. இவ்வூர் வேத்ரவனம் எனப் புராணத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தல இறைவன் - ஸ்ரீ திருக்கோடீஸ்வரர், இறைவி - திரிபுரசுந்தரி. திரிகோடி என்றால் மூன்று கோடி என்று அர்த்தம்.
மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் திருக்கோடிகா என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள்பாலித்தார்.
மங்கு, பொங்கு, மரணச் சனி மூன்றுக்கும் வழிபடக் கூடிய சனி பகவானாகிய பாலசனி பகவான் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இவ்வூரை ஒட்டி காவிரி நதி, ‘உத்தரவாஹினியாக’ அதாவது தெற்கிலிருந்து வடக்காகப் பாய்கிறது. இங்குள்ள நதியில் கார்த்திகை ஞாயிறன்று அதிகாலையில் நீராடினால் எல்லாப்பாவங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும் என்பது நம்பிக்கை.
அமைவிடம்: கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் (பூம்புகார்-கல்லணை சாலை) கதிராமங்கலத்தில் இருந்து 2 கிமீ தொலைவிலும் திருவிடைமருதூருக்கு வடகிழக்கில் 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- sjkavin08gmail.com