ஆனந்த ஜோதி

கனக சபையில் ஸ்படிக லிங்க அபிஷேகம்

முனைவர் இரா.இராஜேஸ்வரன்

சிகண்டி பூரணம் எனும் பெரிய ஆலய மணியின் தெய்வீக ஓசையுடன், சிவனாடியார்கள் சங்கை ஊத, தில்லை வாழ் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்களகரமான சூழ்நிலையில் கனக சபையில் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம், ஆராதனை நடப்பதை கண்குளிர கண்டு களிப்பது என்பது வாழ்நாளில் ஓர் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

இறைவனுடன் ஆழ்நிலையில் ஒன்றி, உடல் சிலிர்க்க, ஒரு வகையான தெய்வீக அதிர்வலை ஏற்படுவதை அனுபவத்தால் மட்டுமே நிச்சயம் உணர முடியும். இதைத்தான் மாணிக்கவாசகர் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ எனப் பாடினார் போலும்.

இந்த தெய்வீக அனுபவத்தை மனப்பூர்வமாக உணர ‘பூலோக கைலாசம்’ என்கிற சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமாளின் கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும். இங்குதான் ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரருக்கு தினமும் வைதீக முறைப்படி ஆறு கால அபிஷேகம், பூஜைகள் அன்னாபிஷேகத்துடன் நடைபெறுகின்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான (ஆகாயம்) சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமாள் குடிகொண்ட கோயிலைப் பற்றி திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் ‘கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே; செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய’ எனத் தொடங்கும் பாடலிலும், திருநாவுக்கரசர் நான்காம் திருமுறையில் ‘செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி’ எனத் தொடங்கும் பாடலிலும், சுந்தரர் ஏழாம் திருமுறையில் ‘மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும்’ எனத் தொடங்கும் பாடலிலும், மாணிக்கவாசகர் எட்டாம் திருமுறையில் ‘தில்லை மூதூர் ஆடிய திருவடி’ எனத் தொடங்கும் பாடலிலும் தெரிவிக்கின்றனர்.

இவைதவிர இவர்கள் பல தேவாரப் பாடல்களை இத்தலத்தின் சிறப்பையும், பெருமையையும் விளக்கும் வண்ணம் பாடியுள்ளனர். இதுபோன்று நம்பியாண்டார்நம்பி, சேக்கிழார், வள்ளலார் போன்ற அருளாளர்கள் இத்தலத்தைப் போற்றி பாடியுள்ளனர். வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற முனிவர்கள் ஈசனை வழிபட்டு முக்தி பெற்றனர்.

முற்காலத்தில் தில்லை வனமாக இருந்த இன்றைய சிதம்பரத்தின் பொற்சபையில் ஆனந்த தாண்டவம் புரியும் மூலவர் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

சித்திரையில் ஓணமுதல் சீர்ஆனி உத்திரமாம் சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்றுள் ஈசர் அபிஷேக தின மாம் என்கிற வெண்பா பாடல்படி, சித்திரை மாதம் திருவோண தினத்தன்றும், ஆனி மாதம் உத்திர தினத்தன்றும், ஆவணி மாதம் சதுர்த்தசி தினத்தன்றும், புரட்டாசி மாதம் சதுர்த்தசி தினத்தன்றும், மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்றும், மாசி மாதம் சதுர்த்தசி தினத்தன்றும் மூலவருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்போது வானிலிருந்து தேவர்களும் இக்காட்சியைக் கண்டு களிப்பார்கள் என்பது ஐதீகம்.

இந்த ஆறு நாட்களில், உத்தராயண புண்ணிய காலத்தின் முடிவில் வரும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அம்பாளுக்கு விசேஷமான தினம் என்பதால் ஆயிரம் கால் மண்டபத்தில் ஆனித் திருமஞ்சனம் எனும் பெயரில் மஹோத்ஸவம் நடைபெறும்.

அதே போன்று தட்சிணாயண புண்ணிய காலத்தின் முடிவில் வரும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் மூலவர் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு விசேஷமான தினம் என்பதால், அச்சமயத்தில் ஆர்த்ரா (ஆருத்ரா) மஹோத்ஸவம் நடைபெறும். சிதம்பரத்தில் நடைபெறும் நித்ய பூஜை, உற்சவங்கள் யாவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி மகரிஷியால் ஏற்படுத்தப்பட்ட வைதீக பூஜை முறைகள்.

அவற்றை இன்றும் தில்லைவாழ் அந்தணர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், ‘சிவ சக்த்தையக்ய ரூபிணீ லலிதாம்பிகா’ என்கிற ஒருநாமா வருகிறது. இதன் பொருள் சிவனும், சக்தியான பார்வதியும் ஒரே வடிவில் இணைந்து உள்ளனர் என்பது.

இதே பொருளில் அபிராமி அந்தாதியில் 46-வது பாடலில், ‘கறுக்கும் திருமிடற்றான் இடப்பாக்கம் கலந்த பொன்னே...’, என ஒரு வரி வருகிறது. இப்படி முழு முதற் கடவுளான சிவபெருமாள் நடராஜர் என்கிற திருப்பெயரில், பிரபஞ்சத்தின் தாயான பார்வதிதேவி சிவகாமி என்கிற மங்கள பெயருடன் தில்லையின் கருவறையில் வீற்றிருந்து நமக்கு அருள்பாலிக்கின்றனர்.

ஆனி திருமஞ்சன மஹோத்ஸவம் ஜூன் 23-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் உற்சவமும் ஜூலை 1-ம் தேதி மஹா ரதோத்ஸவமும் (தேர் திருவிழா), ஜூலை 2-ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் விடியற்காலையில் ஸர்வ த்ரவிய மஹாபிஷேகமும் நடைபெற்றன. இந்த உற்சவத்தில் மூலவர், உற்சவராகவே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவத்தின் நிறைவு நாளான ஜூலை 3-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT