வங்கக் கடல் அருகே சென்னை பெசன்ட் நகரில் ஸ்ரீ வரசித்தி வல்லப விநாயகர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில் அருளின் பெருக்காக, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருட்சமாக, சுகத்தின் ஊற்றாக விளங்குகிறது.
ஸ்ரீ வரசித்தி வல்லப விநாயகர் கோயிலின் மூலஸ்தான ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது. கோயிலில் பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவர் விநாயகப் பெருமான் சந்நிதிக்கு உட்புறம் பக்த ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
கோயிலுக்குள் நுழையும்போது, வலதுபுறம் சண்முகர் அருள்பாலிக்கிறார். இடதுபுறம் சூரியனை நடுநாயகராகக் கொண்டு நவக்கிரக மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். இதர மூர்த்திகளுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. விநாயகப் பெருமானின் வலது புறம் வடக்கு நோக்கி கஜகேசரி லலிதாம்பிகை சந்நிதி, கிழக்கு நோக்கி சத்திய நாராயணர் சந்நிதி, தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி சந்நிதிகள் உள்ளன. பிரகாரத்துக்கு வெளியே நாகராஜர் சந்நிதி, சனீஸ்வர பகவான் சந்நிதிகள் உள்ளன.
பிரகாரத்தைச் சுற்றி வலம் வரும்போது விநாயகப் பெருமானின் லீலா விநோதங்கள் 60 வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வடிவங்களையும் அரவணைத்து ஆதரிப்பவராக ஸ்ரீ வரசித்தி வல்லப விநாயகர் உள்ளார். காலையில் கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் தினமும் 2 வேளை பூஜை நடைபெறுகிறது. தினமும் மாலையில் 5.45 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், பிரதி மாதம் பௌர்ணமி தினத்தில் சத்யநாராயண பூஜை, பிரதோஷ சமயத்தில் தட்சிணா மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இக்கோயிலில் எந்நேரமும் யாகங்கள் நடைபெற்ற படி இருப்பது குறிப்பிடத்தக்கது. நியமம் தவறாத வேத வித்துகள் வேதாகம சாஸ்திர முறைப்படி வேத கோஷம் முழங்க ஹோமம் செய்கின்றனர். அதிருத்ர மகா யக்ஞம், சுதர்சன ஹோமம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பிரீதி முதலியவற்றில் எண்ணற்ற மக்கள் பங்கு கொள்கின்றனர்.
ஆனி மாதம் 23-ம் தேதி (07-07-2025) திங்கள்கிழமை அனுராதா நட்சத்திரம், சுக்ல துவாதசி சுபயோகம் பவகரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வரசித்தி வல்லப மகா கணபதி மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை 9381437637 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
சிருங்கேரி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள், சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் (3 முறை), காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பல முறை). காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பல முறை), குற்றாலம் மௌன சுவாமிகள் பீடம் ஸ்ரீ திரிவிக்கிரமானந்த பாரதி சுவாமிகள் உள்ளிட்ட மகான்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்துள்ளனர்.