தவத்தால் கிட்டும் பலன்கள் அனைத்தும் தேரோட்டத்தின்போது தேரையும், உலா வரும் இறைவனையும் தரிசிப்பதால் கிட்டும். ஆனி மாதத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நெல்லையப்பரை வரவேற்று, தரிசித்துப் பேரானந்தம் கொள்வதற்காக திருநெல்வேலி அருகேயுள்ள ரஸ்தா பகுதியைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதரும் வருவதுண்டு.
தேர்த் திருவிழாவுக்கு இடுப்பை மறைக்கும் வஸ்திரம், நீண்டதாடி, ஊன்றுகோல் சகிதம் வந்திருந்தார். ஆனால் பண்டாரக் கோலத்தில் இருந்த அவரைப் பார்த்து, அங்கிருந்த சில இளைஞர்கள் கேலி செய்து, தேரை இழுக்க விடாமல் அங்கிருந்து அவரை விரட்டினர்.
பக்தர்களின் பூஜை முடிந்து, தேரை நகர்த்துவதற்காக முட்டுக்கட்டை அகற்றப்பட்டது. அனைவரும் உற்சாகத்துடன் தேரை இழுத்தனர். ஆனால், தேர் நகரவே இல்லை. தேர் நகராமல் இருப்பதன் காரணம் அறிய பிரசன்னம் பார்க்கப்பட்டது.
‘தேரை வடம் பிடித்து இழுக்க வந்த சந்நியாசி ஒருவரை இளைஞர்கள் சிலர் தடுத்து விரட்டிவிட்டனர். அவரை தேரோட்டத்தைக்காணவும் விடவில்லை. சந்நியாசியாக வந்தவர் சித்தர். அவரைச் சரணடைந்தால் தான் தேர் நிலைக்கு வரும். அந்த மகான் தற்போது குற்றாலத்தில் உள்ளார்’ என்று பிரசன்னத்தில் தெரிந்தது.
இந்த விஷயத்தை அறிந்த சிவலோகநாதர், தன் கையில் இருந்த ஊன்றுகோலை வீசியெறிந்தார். அது விழுந்த இடத்தில் (குருக்கள் மடம்) ஓலைக்குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தார். அதே சமயம், குற் றாலம் வந்த நெல்லையப்பர் கோயில் நிர்வாகிகள், அங்கு சிவலோகநாதர் இல்லாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
மீண்டும் பிரசன்னம் பார்த்து, அவர்கள் அனைவரும் குருக்கள் மடம் வந்தடைந்தனர். நடந்தவற்றுக்கு சித்தரிடம் மன்னிப்பு கோரினர். அவர்களை வாழ்த்தி தேர் நகர்வதற்கு ஆசி வழங்கினார் சிவலோகநாதர். இதன் பின்னர், குருக்கள் மடம் பகுதியிலேயே வசிக்கத் தொடங்கினார்.
அங்கேயே குழந்தைகளின் பிணியைத் தீர்ப்பதிலும், ஜோதிட பலன்கள் கூறுவதிலும் தம்முடைய சேவையைத் தொடங்கினார். இதனால் அவரை ‘ஏடு ஜோதிடர்’ என்றே மக்கள் அழைத்தனர். உகதானம் (யாசகம்) பெற்று கஞ்சி காய்ச்சி, பனையோலைப் பட்டையில் வழங்கி வந்தார். பக்தர்களுக்கு, அந்தக் கஞ்சி நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியது.
தாம் கூறியபடி சித்திரை முழுநிலவு தினத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற சம்பவம் இது. சிவலோகநாதருக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. சந்தான பாக்கியம் பெற, தொழிலில் மேன்மை அடைய என்று வியாழக்கிழமை, பூச நட்சத்திரம், பௌர்ணமிதோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலி - தென்காசி சாலையில் நெல்லைக்கு மேற்காக 40 கிமீ தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. அங்கிருந்து சுரண்டை என்ற நகருக்குச் செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் கீழப்பாவூர் உள்ளது. இங்கு வடக்கு பேருந்து நிலையம் அருகே அரசு நூலகத்தின் பின்னால் குருக்கள் மடம் பகுதியில் ஜீவசமாதி உள்ளது.
- கீழ்ப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்