நாராயண பட்டத்திரி இயற்றியிருக்கும் நாராயணீயத்தில் கூறப்பட்டிருக்கும் கதைகள் யாவும் ஸ்ரீமத் பாகவத்திலுள்ள சரித்திரங்களேயாகும். ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றிய வேத வியாசர் தனது மகன் சுகாச்சாரியாருக்கு உபதேசம் செய்ய, அவர் பரிஷீத் என்ற அரசருக்கு கங்கை நதிக்கரையில் உபதேசித்து சாப விமோசனம் பெற வைத்தார்.
கேரளாவில் பாரதப்புழை என்னும் நதிக்கரை அருகிலுள்ள மேல்புத்தூர் என்ற இடத்தில் கி.பி. 1560-ம் ஆண்டு நாராயண பட்டத்திரி பிறந்தார். தன்னுடைய தந்தை மகா பண்டிதர் மாத்ருதத்தர் மற்றும் பல ஆச்சாரியர்களிடத்தில் வேதங்களையும், பல்வேறு சாஸ்திரங்களையும் கற்று, தனது 16-வது வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கினார்.
தானே நூல்களை இயற்றும் ஆற்றலை பெற்ற பட்டத்திரி பல கிரந்தங்களை இயற்றியிருக்கிறார். அவர் பிறவிப் பயனாகவே கிருஷ்ண பக்தராக விளங்கினார். ஒரு முறை தனது குருவின் அந்திமக் காலத்தில் அவரை காண சென்ற பட்டத்திரி, அந்த குரு, இறைவனே அவரது காதில் ஸ்ரீ ராமநாமாவை சொல்ல வேண்டுமேன்று வேண்டி ஸ்லோகத்தை சொல்லும்போது, கடைசி வார்த்தையைச் சொல்ல முடியாமல் போக, சிஷ்யரான பட்டத்திரி ஸ்லோகத்தின் மீதி வார்த்தையை சொல்லிமுடித்தார்.
அவருடைய குருபக்தியையும், தெய்வ பக்தியையும் கண்டு குரு, மனதால் அவரை ஆசிர்வதித்தார். இந்நிலையில் பட்டத்திரிக்கு கர்ம பலனாக வாத ரோகம் ஏற்பட்டது. பலனளிக்காத பல சிகிச்சைகளுக்கு பிறகு ஒரு பிரபல ஜோதிடரை அணுக, அவரும் பட்டத்திரியை குருவாயூருக்கு போய் அங்கு புனித நீராடி, இறைவனின் சரித்திரத்தை அவன் சந்நிதி யிலேயே காவிய நடையில் எழுதும்படி உத்தரவிட்டார். பட்டத்திரியும் அவ்வாறே காவியமழை பொழிந்தார். அந்தக் காவியமே ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய சரித்திரத்தை கூறுவதாலும், நாராயண பட்டத்திரி இயற்றியதாலும் ‘நாராயணீயம்’ என்ற பெயருடன் விளங்குகிறது.
நாராயணீயத்திலுள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் பட்டத்திரி குருவாயூரப்பனை பார்த்து ‘ஹே குருவாயூரப்பா’ என்று கூப்பிட்டு, அரசனுக்கு சுகர் இவ்விதம் உபதேசித்தது சத்யமா என்று ஒவ்வொரு சரித்திரத்தையும் ஆச்சரியமாக கேட்பது போல அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிம்பமாக நிற்கும் ஸ்ரீ குருவாயூரப்பன் ‘ஆம்’ என்று பட்டத்திரியின் கேள்விகளுக்கு தலை அசைத்தார்.
நாராயணீயத்தில் 1,034 சுலோகங்கள் இருக்கின்றன. இதை நூறு தசகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒவ்வொரு தசகத்திலும் பத்து சுலோகங்கள் உள்ளன. சில தசகங்களில் பத்துக்கு மேலும் உள்ளன. 99-வது தசகத்தில், ‘ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்தி தான் எனக்கு கதி என்று பகவத் சரணத்தில் நமஸ்கரித்து, தன்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டுமென்று மனமுருகி எழுந்து நின்றார் பட்டத்திரி. அந்தக் கணத்திலேயே அவர் எதிரில் இறைவன் பட்டத்திரிக்கு வைகுண்டவாசனாக காட்சி அருளினார். அந்தக் கண்கொள்ளா காட்சியை கடைசி தசகமாக பட்டத்திரி வர்ணிக்கிறார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் தத்துவமும், பக்தியும் பிரதானம். நாராயணீயத்தில் பக்தியே பிரதானம். பட்டத்திரி தனது ஆழ்ந்த பக்தியை ஸ்ரீ கிருஷ்ண பகவான் மதுராவுக்குள் நுழையும்போது, “ஹே! கிருஷ்ணா ! முதன் முதலாகத் தாங்கள் மதுரா நகரத்துக்கு செல்லும் வழியில் பல பக்தர்கள் சந்தனம், தாம்பூலம், பூமாலை, பாமாலைகளுடன் வரவேற்றனர். நானும் அந்த சமயத்தில் ஏதேனும் ஒரு புஷ்பத்துடன் வழியில் நிற்க முடியாமல் போய்விட்டேனே.. எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே.. அதனால்தான் இதுபோன்று கஷ்டப்படும் பிறவியை நான் அடைந்திருக்கிறேன்" புலம்பியழுது வெளிப்படுத்துகிறார்.
இதைக் கேட்டு பிம்பமாக இருந்த ஸ்ரீ குருவாயூரப்பனும், “நீ இப்போது பிறக்காதிருந்தால், நாராயணீயத்தை யார் எழுதியிருப்பார்கள் ?” என்று பட்டத்திரியை திருப்பிக் கேட்டார். ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு இருந்த வாத ரோகம் நீங்கிவிட்டது. குருவாயூர் கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஷேத்திரம்.
இந்த ஷேத்திரம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு ‘நாராயண சரஸ்’ என்ற குளக்கரையில் உள்ள அழகான கோயிலில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் எழுந்தருளியிருக்கும் பகவான், ‘குருவாயூரப்பா’ என்று ஆனந்தத்துடன் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண பக்தரான உத்தவர் தனது சிறு வயதில் துவாரகையில் ஓர் அழகான கிருஷ்ண விக்கிரகத்தை பூஜித்து வந்தார். அதே விக்கிரகத்தை வசுதேவரும், தேவகியும் பூஜித்து வந்திருக்கிறார்கள்.
பிறகு பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்த அந்த விக்கிரகம், கிருஷ்ணர் வைகுண்டத்தை சென்றடைந்த ஏழாவது நாள் கடல் பொங்கி எழுந்து, துவாரகை கடலில் மூழ்கியது. அங்கிருந்த கிருஷ்ணர் விக்கிரகம் அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட, அதை குரு பகவானும், வாயு பகவானும் பார்த்தனர்.
விக்கிரகத்தை அவர்கள் கேரள தேசத்துக்கு எடுத்து சென்று அங்கு பிரதிஷ்டை செய்தனர். குருவும், வாயுவும் சேர்ந்து கிருஷ்ணர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததால் அந்த இடத்தை ‘குருவாயூர்’ என்றும் அந்த கோயிலில் உறையும் பகவானை ‘குருவாயூரப்பன்’ என்றும் அழைக்கின்றனர்.
குருவாயூரப்பன் விக்கிரகம் கலியுக தொடக்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வாதம் முதலிய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் நாராயண சரஸில் நீராடி குருவாயூரில் சிறிது காலம் தங்கி குருவாயூரப்பனை வழிபட்டு நோய்களிலிருந்து விடுபடுகின்றனர்.