ஆனந்த ஜோதி

நன்மை தரும் பொன்மொழிகள் | நூல் விமர்சனம்

கே.சுந்தரராமன்

‘நாம் எந்த வகையில் வாழ வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நம்மால் உடனடியாக அப்படி வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அதற்காக நம்மனதில் குற்ற உணர்வு ஏற்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில் என்றாவது ஒரு நாள் அப்படி மாற்றிக் கொள்ள அருள வேண்டும் என்று அம்பாளிடம் அல்லது நம் இஷ்ட தெய்வத்திடம் தினமும் மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுவே நமக்கு நன்மையைத் தரும்’ என்பது காஞ்சி மகாஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உபதேச மொழி ஆகும்.

காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளைத் தொகுத்து உரைக்கும் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வாசிக்க இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இவர்களைப் போன்ற அன்பர்களுக்கு தெய்வத்தின் குரலை கொண்டு சேர்க்கும் விதமாக ‘தினசரி பெரியவா தியானம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பக்கம், ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு நற்சிந்தனை என்று இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

அன்பர்கள் ஒவ்வொரு வரையும் இதுபோன்று தினசரி (365 நாளும்) பிரார்த்தனை செய்யத் தூண்டும் விதமாக இந்நூலை வேதா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்கால வாசகர்களுக்கு அந்த மொழிநடையை வாசிப்பதில் சிரமமாக இருக்கலாம் என்பதால், அந்த மொழிநடை எளிமைபடுத்தப்பட்டு, தற்கால தமிழ் நடையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மகாஸ்வாமியின் கருத்துகள் வருங்கால தலைமுறையினரை சென்றடைய வேண்டும் என்பதே வேதா நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

இந்நூலைப் படிக்கும்போது இயல்பாகவே ‘குருவின் திருமேனி காண்டலும், திருவார்த்தை கேட்டலும்’ நடைபெறும். இதன் தொடர்ச்சியாக, ‘குருவின் திருநாமம் செப்பலும், திருவுரு சிந்தித்தலும்’ சாத்தியப்பட முடியும். இதன் மூலம் தெய்வத்தின் குரல் வாசிப்பதை அன்பர்கள் அனைவரும் தங்கள் அன்றாடக் கடமையாகக் கடைபிடிப்பது எளிது. அன்பர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் என்பது திண்ணம்.

தினசரி பெரியவா தியானம்; வேதா வெளியீடு; வேத ப்ரகாசனம், 64 மதுரைசாமி மடம் தெரு,செம்பியம் தீயணைப்பு நிலையம் எதிரில், பெரம்பூர், சென்னை – 11; விலை – ரூ.500; தொடர்புக்கு – 7305527466, 7550113406, 9940552516; மின்னஞ்சல்: vedaprakaasanam@gmail.com

நோய்கள் நீக்கும் அருமருந்து: பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானி இருக்க முடியாது. பகவத் கீதையை விட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது. கண்ணனை துதிக்க முடிந்தவரும், கீதையை படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள் என்பது ஆன்றோர் வாக்கு. ‘கீதையை தியானிப்பவரை பாவங்கள் அண்டாது.

கீதை எங்கிருக்கிறதோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன. எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது. எங்கு கீதை கற்கப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ அங்கு நான் (பரமாத்மா) வாசம் செய்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே உபதேசிக்கிறார்.

வியாச பகவான் இயற்றிய மகாபாரத காவியம் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. அதில் பீஷ்ம பருவத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ச்சுனனுக்கும் நடக்கும் சம்வாதமாக பகவத் கீதை இடம்பெறுகிறது. பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம் என புகழப் பெறும் கீதை, தற்போது எளிய தமிழில் பி.எஸ்.ஆச்சார்யாவின் உரை விளக்கத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மேற்கோள்களுடன் நர்மதா பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

கீதை பிறந்த கதையில் தொடங்கி, அர்ச்சுன விஷாத யோகம், ஸாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான கர்ம யோகம், சந்நியாச யோகம், தியான யோகம், ஞான – விஞ்ஞான யோகம், அட்சர பிரம்ம யோகம், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம், விபூதி யோகம், விஸ்வரூப தர்சன யோகம், பக்தி யோகம், புருஷோத்தம யோகம் உள்ளிட்ட 18 அத்தியாயங்களுக்கும் எளிய நடையில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பகவத் கீதை (உரை விளக்கம் – 18 அத்தியாயங்களுக்கும்); பி.எஸ்.ஆச்சார்யா; விலை: ரூ.200; நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராயர் நகர், சென்னை – 17; தொடர்புக்கு – 044-24334397, 9840226661, 9840932566, 9940045044.

SCROLL FOR NEXT