ஆனந்த ஜோதி

கேட்ட வரம் அருளும் கோட்டூர் கொழுந்தீஸ்வரர்

எஸ்.ஜெயசெல்வன்

திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலமாக விளங்கும் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயிலில், ஈசன் கேட்ட வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக எழுந்தருளியுள்ளார். மாசி மகத்தன்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதைப் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு சமயம் இந்திரனின் சபையில் ரம்பை முதலிய ஏழு தேவலோக மங்கைகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் முடிந்ததும், ரம்பை களைப்புடன் அருகில் இருந்த பூஞ்சோலையில் உறங்கினாள். அப்போது அவளது ஆடை சற்று விலகியிருந்ததைப் பார்த்த நாரத முனிவர், ரம்பையை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். பூமிக்கு வந்த ரம்பை, இத்தலத்தில் ( கோட்டூர் ) வழிபாட்டுக்காக ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, சிவனை பூஜித்தபின், இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்தாள்.

இந்திரன், தனது வாகனமான ஐராவதத்தை அனுப்பி, ரம்பையைத் தூக்கி வரும்படி பணித்தான். பூலோகம் வந்த ஐராவதம் யானை, ரம்பையைத் தனது துதிக்கையால் வளைத்து தூக்க முயன்றது. அதைக் கண்டு அஞ்சிய ரம்பை, சிவலிங்கத்தைத் தாவி அணைத்துக் கொண்டாள். இதனால் கோபமுற்ற ஐராவதம், ‘இந்தச் சிவலிங்கத்தோடு உன்னை இந்திரலோகம் கொண்டு செல்வேன்’ என தனது தந்தத்தால் சிவலிங்கத்தைச் சுற்றிலும் தோண்டத் தொடங்கியது.

ரம்பையின் அளவற்ற அன்பில் நெகிழ்ந்த பரமன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, ஐராவதத்தை உதைத்தார். அதன் உடல் பலவாறாக சிதறியது. ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் அவளுக்கு, வரங்கள் பல தந்து மறைந்தார். ஐராவதத்தின் கொம்புகளாகிய கோட்டால், அகழப்பட்டதால் இத்தலம் ‘கோட்டூர்’ எனப் பெயர் பெற்றது. விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இந்திரன் அவனை வெல்வதற்காக, ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பைப் பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் அரக்கனைக் கொன்றான்.

முனிவரைக் கொன்று முதுகெலும்பைப் பெற்றதால், இந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தைப் போக்கிக் கொள்ள இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் ‘இந்திரபுரம்’ என்றும் அழைக்கப்பட்டது.

மேற்கு பார்த்த கோயிலில், இறைவன் கொழுந்தீஸ்வரர் மேற்கு நோக்கியும், இறைவனின் வலப்புறம், அம்பிகை தேனாம்பாள் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சுவாமிக்கு எதிரே அபிமுகம் காட்டி, தனிச் சந்நிதியில் அருள்புரியும் அன்னை மதுரபாஷிணி, மேலிரு கரங்களில் ருத்ராட்சம், தாமரை மலர் ஏந்தியும், கீழிரு கரங்களில் அபயவரமளித்தும், புன்னகை முகம் காட்டுகிறாள்.

அமைவிடம்: மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பாதையில் மன்னார்குடியிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

- sjkavin08gmail.com

SCROLL FOR NEXT