ஆனந்த ஜோதி

புதுமடம் ஜாபர் அலி

செய்திப்பிரிவு

இஸ்லாமிய கடமைகளில் தொழுகை ஒரு முக்கிய கடமையாகும். நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டும். உடல் தூய்மை பேணி, நமது எண்ணங்களை முழுமையாக இறைவனை நோக்கி ஒருமுகப்படுத்தி தொழ வேண்டும். தொழுகைக்கான ஒரு குறிப்பிட்ட காலக் குறியீடு, நேரக் கோட்பாடுகளுக்கு இஸ்லாம் மதத்தை பொறுத்த வரையில் இதில் சமரசம் இல்லை. தொழுகைக்கான இடம் மசூதியாகவும் கூட்டு தொழுகையாகவும் இருப்பது சிறப்பானது.

ஒரு நாளின் ஐந்து நேரம் மனிதன் இறைவனை நினைவுகூர (தொழுகை) வேண்டும். அதிகாலை - வைகறை பொழுது அதாவது லேசான வெளிச்சமும் இருட்டும் கலந்த போழுது - ஸீபுஹ். சூரியன் நடுவானில் இருந்து சற்று விலகி இருக்கும் நேரம் – ளுஹர். சூரியன் மஞ்சள் நிறமாக மாறும் நேரம் - அஸர். சூரிய வெளிச்சம் மங்கும் நேரம் அஸ்தமனம் – மஃகரிப். முழுமையாக இருட்டு ஆக்கிரமிக்கும் நேரம் -இஷா.

மக்காவிலுள்ள கஃபாவை நோக்கி தொழ வேண்டும். அதாவது கஃபா நம்மிடமிருந்து மேற்கில் உள்ளதால், நாம் மேற்கு நோக்கி தொழுகை செய்கிறோம். மற்ற நாடுகளில் திசை வேறுபடும். காரணம், அந்த நாட்டில் இருந்து கஃபா எந்த திசையில் இருக்கிறது என்பதை பொறுத்து, தொழுகை திசை அமையும். குறிப்பாக எகிப்து நாட்டில் கிழக்கு நோக்கி தொழுகை நடக்கும். அந்த நாட்டுக்கு கிழக்கே கஃபா இருப்பதால் திசை மாறுகிறது.

தொழுகை இரண்டு வகையாக உள்ளது - தனியாக தொழுவது, ஜமாத்தாக (கூடி) தொழுவது. தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழ வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஜமாத்தாக தொழும்போது ஒருவர் தொழுகையை நடத்துவார். அவரை பின் தொடர்ந்து தொழ வேண்டும். அப்போது மனித சமுதாயம் ஒரு கட்டமைக்கப்பட்ட சமுதாயமாக ஒரு தலைமையின் கீழ் செயல்படும் சமுதாயமாக உருவாகும்.

தொழுகை நடத்துபவர் இமாம் என்று அழைக்கப்படுவார். அந்த கூட்டத்தில் யார் அதிகம் மார்க்க கல்வி கற்று இருக்கிறாரோ அவரே தொழுகை நடத்த தகுதியான நபர். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். உலகில் தொழுகை நடைபெறாத நேரமே இல்லை. உலகில் சூரிய கணக்குப்படி நேரம் மாறி மாறி வருவதால் உலகின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் தொழுகை நடந்து கொண்டே இருக்கும்.

இடைவெளி இல்லாமல் இறைவனை வணங்கிக் கொண்டு இருப்பார்கள். சமூகநீதி, மனிதகுல சமத்துவம் மற்றும் மனிதர்களுக்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை களைந்து அனைவரும் ஒருமித்த ஒரு கொள்கையில் பயணிக்க தொழுகை ஒரு காரணியாக அமைகிறது.

SCROLL FOR NEXT