அபிஷேகப் பிரியரான சிவபெருமான் மிக விரைவில் ஆனந்தம் அடைந்து அருள் வழங்குபவர். சிவனின் அடையாளங்களுள் ருத்ராட்சம், திருநீறு, பஞ்சாட்சர மந்திரம் தவிர வில்வமும் ஒன்று. சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை மிகவும் பிடித்தமானது. சிவ பூஜைக்கு வில்வமே பிரதானமான ஒன்று. ஒரு வில்வதளம் பல ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமமானது.
மூவிலைகளைக் கொண்டதும், முக்குணங்களைக் குறிப்பதும், முக்கண்களைக் குறிப்பதும், திரிசூலத்தைக் குறிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களை எரிப்பதுமாகிய வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பக்தர்கள் இந்த இலையை ஈசனுக்கு படைப்பதுண்டு.
சிவபெருமானைத் துதித்து ஒரு வில்வ இலையைச் சமர்ப்பித்தாலும் பாவங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வில்வத்தால் வழிபட்டால் சகல சௌபாக்கியத்தையும் அடைவர். வில்வ சமித்துகளால் ஹோமம் செய்தால் செல்வத்தை அடையலாம். வில்வ மரத்தடியில் ஜபம் செய்தல் மிகவும் நன்று. வில்வமர பிரதட்சணம் செய்வது மஹா புண்ணியத்தை தர வல்லது.
வில்வ மரத்தின் வேர், பட்டை, இலை, பழம் முதலியவை பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகும். வில்வ இலையின் மகிமையைக் கூறும் ஒரு கர்ணப் பரம்பரைக் கதை அனைவரும் அறிந்ததே. வேடன் ஒருவன் சிவராத்திரியில் புலிக்கு பயந்து வில்வ மரத்தில் உட்கார்ந்து வில்வத்தைப் பறித்து இரவு முழுவதும் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. சிவராத்திரியன்று பூஜை செய்த பலனாக அவனுக்கு சிவதரிசனமும் கயிலாய பிராப்தியும் கிடைத்தன.
வில்வப் பழத்துக்கு ‘ஸ்ரீபலம்' என்ற பெயருண்டு. வில்வப்பழம் திருவின் பாலால் வளர்ந்தது என்பர். அது சகல மங்கலங்களையும் அளிக்கக் கூடியதென்றும் கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருப்பதியில் வெங்கடாசலபதிக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது. வில்வத்தின் மூன்று இலைகளிலும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூவரும் அதி தேவதைகளாக இருக்கிறார்கள்.
வில்வ இலை உலர்ந்து போனாலும், ஏற்கெனவே பூஜை செய்யப்பட்ட நிர்மால்யமாக இருந்தாலும், பூஜை செய்வதற்குத் தகுதியுடையது. வில்வ விருட்சம், வில்வ இலை, வில்வப் பழம் ஆகியன தெய்வீகத் தன்மை பொருந்தியவை என்றும், அவை மகாலட்சுமியின் வாசஸ்தலங்கள் என்றும் 'ஸ்ரீஸூக்தம்' கூறுகிறது.