சண்டீசர் பதம் என்பது ஒரு நிர்வாக அதிகாரி பதவியாகும். சிவாலயத்தின் நிர்மால்ய அதிகாரப் பதவி. நிர்மால்யம் என்பது சிவபெருமானுக்கு படைத்த பொருள்களையும், அவருக்கு அணிவித்த ஆடைகள், மாலைகள் என அனைத்தையும் குறிக்கும் சொல். நிர்மால்யம் என்ற சொல்லுக்கு நிகராக சிவப்பிரசாதங்கள் அல்லது சிவ நிவேதனங்கள் என்று கொள்ளலாம்.
யார் சிவன் மீது அதீத பக்தியையும், சிவ நிந்தனை செய்வோரிடத்து அதீத கடுமையும் கொள்கிறார்களோ, அவர்களுக்கு சிவன், சண்டீசர் என்ற பதவியைத் தருகிறார். நான்முகனான பிரம்மா ‘சதுர்முக சண்டீசர்’ என தில்லையிலும், தர்ம அதிகாரியான யமதேவன் ‘யம சண்டீசர்’ என திருவாரூரிலும் உள்ளனர். மற்ற சிவாலயங்களைப் பொறுத்தவரை சண்டீச பதவியில் இருப்பவர் விசாரசருமர் எனும் சிவபக்தர்.
எச்சத்தன் – பவித்திரை என்ற அந்தணர் குல தம்பதியின் மகன் விசாரசருமர். ஒரு முறை இடையர் இனச் சிறுவன் பசுவை துன்புறுத்துவது கண்டு ஆவேசம் கொண்டு, அவனைத் தடுத்து, அவனிடமிருந்த பசுக்களை பராமரிக்கத் தொடங்கினார். சில நாட்களில் பசுக்களின் பாலை இறைவனுக்கு அபிஷேகம் செய்ய எண்ணி, மணலால் லிங்கம் அமைத்து அதற்கு அபிஷேகம் செய்து வந்தார்.
பசுவுக்கு உரியவர்கள், பாலை மண்ணில் கொட்டி வீணாக்குகிறானே என்று எச்சத்தனிடம் கடிந்து கொண்டனர். எச்சத்தனும் இதை தடுத்து நிறுத்த பூஜையிலிருந்த விசாரசருமரிடம் பேசிப் பார்த்தார். விசாரசருமர் கண்டு கொள்ளாமல் பூஜையிலேயே கவனமாக இருந்தார். கோபம் கொண்ட எச்சத்தன் கோலால் விசாரசருமரை அடித்தும் பார்த்தார்.
விசாரசருமர் அசைவதாக இல்லை. பூஜைக்கு வைத்திருந்த பால்குடத்தை காலால் எட்டி உதைத்தார். சிவ அபிஷேகத்துக்கு வைத்திருந்த பாலை உதைத்து தள்ளியமை கண்டு விசாரசருமருக்கு கோபம் வந்தது. தன்னருகே இருந்த கோலை எடுத்து எச்சத்தனின் காலை நோக்கி வீசினார். கோல் மழுவாக மாறி காலை வெட்டியது. பெற்ற தந்தை எனவும் பாராது சிவநிந்தனை செய்தமைக்காக தண்டனை கொடுத்த படியால், சிவன் பார்வதியுடன் தோன்றி, சண்டிகேஸ்வர பதவி தந்தார்.
இவரை 63 நாயன்மார்களுள் ஒருவராக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவாலய வழிபாடும் சுவாமி தரிசனமும், சண்டீசரை வணங்கினால் மட்டுமே நிறைவடையும். எனவே இவர் சந்நிதியில் ‘அம்மையையும் அப்பனையும் தரிசித்த பலனைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டி, சிவாலய பிரசாதமான திருநீறு, மலரை சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
பின் தாளத்திரயம் எனப்படும் பூஜை தாள முறையை செய்யலாம். இதற்கு வலது கையின் நடுவிரல்களை இடதுகையின் உள்ளங்கையில் மும்முறை மெதுவாக தட்ட வேண்டும்.
அதைவிடுத்து கைகொட்டுவதும், சொடுக்கிடுவதும், ஆடையிலிருந்து நூல் எடுத்து அணிவிப்பதும் முறையன்று. இவருக்கும் மூலவருக்கும் இடையே வருதல் கூடாது என்பதால் இவருடைய சந்நிதியை வலம் வருதல் தடை செய்யப்படுகிறது. சிவபெருமான் அளிக்கும் சண்டிகேஸ்வரர் பதவி யுகத்துக்கு யுகம் வேறுவேறு நபர்களுக்கு அளிக்கப்படுகிறது.
சிவாகம புராணங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருத யுகத்தில் 4 முக சண்டிகேஸ்வரரும், திரேதா யுகத்தில் 3 முக சண்டிகேஸ்வரரும், துவாபர யுகத்தில் 2 முக சண்டிகேஸ்வரரும், கலியுகத்தில் 1 முக சண்டிகேஸ்வரரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.