சாஸ்தா கோயில்கள் அனைத்திலும் உருவ வழிபாடு உள்ளது. ஆனால் எட்டு சாஸ்தாக்களில் முதன்மை சாஸ்தாவாக கருதப்படும் சாஸ்தாவுக்கு உருவம் கிடையாது. அரூப வடிவில் பிரம்மராயர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பரந்துவிரிந்த பூவுலகில் எட்டுதிசைகளையும் திசைக்கு ஒருவராக 8 சாஸ்தாக்கள் காவல் காப்பதாக கூறப்படுகிறது. அரூப சாஸ்தா, பால சாஸ்தா, ருத்ர சாஸ்தா, தர்ம சாஸ்தா, எரிமேலி சாஸ்தா, ஆகாச சாஸ்தா, ஆலப்புழா சாஸ்தா, கால சாஸ்தா ஆகிய இந்த எட்டு சாஸ்தாக்களில் அரூப சாஸ்தா தான் முதன்மை சாஸ்தா என்று கூறப்படுகிறது.
முதன்மையான இந்த சாஸ்தா சிதம்பரத்தில் மேற்கே உள்ள பிரம்மராயர் சுவாமி கோயிலில் அருள்பாலிக்கிறார். தில்லை நடராஜர் கோயிலை விட பழமையான கோயில் இது. இப்பகுதி தில்லைவனமாக இருந்தபோது இங்கே குறுந்தை மரங்கள் அதிக அளவில் காணப்பட்டன.
அப்போது பிரம்மராயர் கோயிலின் தெற்கு பகுதியில் இருந்து மாணிக்கவாசகர், தில்லை அம்பலம் நோக்கி தவம் புரிந்தார். பிறகு கோயிலில் உள்ள வடக்கு கோபுர வாயில் வழியாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வந்தார் என்று தெரிகிறது.
300 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கருவறைக்குள் அவயாந்த சுவாமிகள் என்பவர் தவம் புரிந்து வந்தார். பின்னர் அங்கேயே ஜீவ சமாதி ஆகிவிட்டார். இவர் சமாதிக்கு மேல் அவரது உருவமும் உள்ளது. இன்றும் அரூப சாஸ்தாவான பிரம்மராயர் சுவாமிக்கு பூஜைகள் செய்யும்போது, அவயாந்த சுவாமிகளுக்கும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
திங்கள்கிழமை விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. திங்கள்கிழமைகளில் காலை 7-12 மணி வரையும், மாலை 4.30 – 9.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். தினசரி இருவேளை பூஜை மட்டுமே நடைபெறும். அதில் பக்தர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
கருவறையின் முன் பிரம்மராயர் சுவாமியின் வாகனமான யானையும் பலிபீடமும் உள்ளது. பிரம்மராயர் சுவாமியின் தளபதியாக இரண்டு குதிரையுடன் வீரனார் அருள்பாலிக்கிறார். இந்த குதிரைகளின் காலில் சீட்டுக்கட்டு பிரார்த்தனை மிக விசேஷம்.
கார்த்திகை மாதத்தில் சபரி சாஸ்தாவை காண சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து இக்கோயிலுக்கு வந்து அரூப சாஸ்தாவை வணங்கி தங்கள் பயணம் சிறக்கவும், எந்த விதமான சங்கடமும் இன்றி ஐயனை தரிசிக்கவும் பிரார்த்தனை செய்கின்றனர். கூடுதல் தகவல்களை 9944427778 (முரளி ஐயர்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
அமைவிடம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்.