ஆனந்த ஜோதி

மனதை தாக்கும் இரண்டாவது அம்பு

ஏ.பி.ரங்கராஜன்

மனிதன் காலையில் எழுந்ததில் இருந்து, இரவு உறங்கச் செல்லும் வரை பல நினைவுகளால் சூழப்படுகிறார். கடந்த கால நினைவுகள் எனும் சுமையை விட்டு, எதிர்காலம் எனும் அச்சத்தையும் விட்டு நிகழ்காலத்தில் அடையாளங்களைத் துறந்த ‘நான்’ யார் என்பதை உணர்வதே பரிபூரண உண்மையான ஆன்மிக அனுபவமாக இருக்கும்.

நினைவுகளின் சுமையில் இருந்து விடு படவே ஒவ்வொருவரும் விரும்புகிறார். மனித மூளை இயற்கையின் ஓர் அற்புதப் படைப்பு. ஐந்து புலன்களால் உணரப்படும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிகிறது. நம்முடைய மூளை எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உருவாகும் எண்ணங்களை நாம் விடாமல் பின்தொடர்வதே சிந்தனையாக மலர்கிறது.

இப்படி மனதில் ஏற்படும் எண்ணங்களை நாம் கவனிக்க ஆரம்பிக்கும்போது, ‘இவை யாருடைய எண்ணங்கள்?' என்று நாம் கேட்கத் தொடங்குகிறோம். அதற்கு, ‘இது என்னுடைய எண்ணம்' என்று பதில் வரும். மனம் இல்லாத ஒரு “சிந்திப்பவரை” உருவாக்குகிறது. ஆனால், அந்த “சிந்திப்பவரும்” உண்மையில் மனம் உருவாக்கிய ஓர் எண்ணமே என்று ரமண மஹரிஷி கூறுகிறார்.

மனமே தன்னை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் எண்ணங்களையும், மறுபக்கம் அவற்றை ஆராயும் சிந்திப்பவரையும் உருவாக்குகிறது. இந்த இரு பாகுபாடும் மாயையே. உண்மையில், சிந்திப்பவரும் சிந்தனையும் ஒன்றே - அவை இரண்டும் மனதின் வேறுபட்ட முகங்கள் மட்டுமே. இந்த மாயையைப் புரிந்து கொண்டால், ‘நான்' என்பதும் ஓர் எண்ணமாகவே தெரிய ஆரம்பிக்கிறது.

எண்ணங்கள் என்பது, நம்முடைய கடந்தகால அனுபவங்கள், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் கதைகள் ஆகியவற்றால் வடிவமைக்கப்படுகின்றன. ஒரு விதையைப் போல, நம் மனதின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்கள், தக்க சூழ்நிலையில் முளைத்தெழுகின்றன.

மனம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. நடந்து முடிந்த சம்பவங்களை நினைத்து வருந்துவதும், நடக்கப் போகும் சம்பவங்களை நினைத்து அச்சப்படுவதுமாக கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கும். பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டு புதிய எண்ணங்களை விதவிதமாக உருவாக்கும். சில நேரம் அந்த எண்ணங்கள் நம்மை கட்டிப் போட்டுவிடும். நாமும் அதை அப்படியே நம்பிவிடுவோம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், அது மனதின் விளையாட்டு என்று புரியும்.

புத்தர் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார். ஒருவர் நம்மை அம்பு எய்து காயப்படுத்துகிறார். அது நமக்கு வலியை ஏற்படுத்துகிறது. இந்த முதல் அம்பு என்பது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வேதனைகள், செய்யும் தவறுகள், ஏற்படும் இழப்புகளின் வலியைக் குறிக்கிறது.

ஆனால், அந்த வேதனைகளையும் தவறுகளையும் நாம் மீண்டும் மீண்டும் கற்பனை செய்து சிந்திப்பது, இரண்டாவது அம்பை நம் மீது நாமே எய்து கொள்வதற்குச் சமம். இதுவே உண்மையான துன்பத்தையும் வலியையும் உருவாக்குகிறது. நாம் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றியே திரும்பத் திரும்ப சிந்தித்து, நம்மை நாமே விமர்சித்துக் கொண்டு மனச்சுமையால் அவதிப்படுகிறோம்.

முதல் அம்பு பொதுவாக தவிர்க்க முடியாதது. ஆனால் இரண்டாவது அம்பு தவிர்க்கக் கூடியது. பெரும்பாலான மக்கள் தொடர்ந்து தங்களைத் தாங்களே இரண்டாவது அம்பால் தாக்கிக் கொள்கிறார்கள் என்பதை உணருவதில்லை. மனம் எண்ணங்களைப் பிடித்துக் கொண்டு, சிறிய காயங்களை முடிவில்லாத வலியாக மாற்றுகிறது. பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் சிந்தித்து எதிர்காலத்தைப் பற்றிய கவலையை உண்டாக்குகிறது.

புற உலகில் எல்லாம் நன்றாக இருந்தாலும் உள்ளுக்குள் நாம் மேலும் மேலும் துன்பத்தை அனுபவிப்பதற்கு இதுவே காரணம். நம் எண்ணங்களே நம்மை இவ்வளவு சுலபமாக ஏமாற்றி தவறான பாதையில் கொண்டு செல்கிறது என்றால், நாம் ஏன் அவற்றுக்கு நம் வாழ்க்கையில் அவ்வளவு அதிகாரமும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும்?

புத்தர் கூறுகிறார்: துன்பம் இந்த உலகத்திலிருந்தோ அல்லது புறக்காரணிகளாலோ வருவதில்லை. மாறாக, நம் மனம் இந்த உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதைப் பொறுத்தே துன்பம் பிறக்கிறது. இந்த உண்மையை நாம் ஒருமுறை தெளிவாகப் புரிந்துகொண்டால், எண்ணங்கள் வெறும் மனதின் வழியாக வந்து செல்லும் நிகழ்வுகள் மட்டுமே. அவை நிரந்தரமான உண்மையல்ல என்பதை உணரலாம்.

நாம் யார் என்பதை நம் கடந்த கால நினைவுகள் மற்றும் அனுபவங்கள் மூலமாகவே உணர முயல்கிறோம். கடந்த கால நினைவுகள் எனும் சுமையை விட்டு, எதிர்காலம் குறித்த கவலையையும் விட்டுவிட்டு நிகழ்காலத்தில் அடையாளங்களைத் துறந்த ‘நான்’ யார் என்பதை உணர்ந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.

SCROLL FOR NEXT