சுயநலம் துறந்து பிறருக்கு உதவுபவர்கள் மேன்மக்கள் என இதிகாச புராணங்கள் புகழ்கின்றன. அத்தகைய மேன்மக்களின் நல்லொழுக்கமே மனித குலத்தின் இப்போதைய தேவையாக உள்ளது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இதை உணர்ந்து கொண்டால், ஒருவர் எதுவாக மாற விரும்புகிறாரோ, அதுவாகவே ஆகி அதற்குள் ஊடுருவ முடியும்.
என்றும் மாறாத இந்த விதியே ஆன்மிக வாழ்வின் அடித்தளம். இந்த உறுதியான எண்ணம் மட்டுமே மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் படிநிலையில், ஆன்மிக வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாற்றம் படிப்படியாக மற்றும் உறுதியாக நம்முள் நிகழ்ந்தால் – மனம், இதயம், உணர்வு, எண்ணம், சிந்தனை இவற்றில் ஆன்மிக முன்னேற்றம் இயல்பாக நிகழும்.
வெளியுலகம் அந்த முன்னேற்றத்தை எப்படி எதிர்கொள்ளும் எனக் கவலைப்படத் தேவையில்லை. தெய்வநிலைக்கு உயர உள்ளத்தில் நிகழும் மாற்றமே மிக முக்கியம். மனித தன்மையிலிருந்து படிப்படியாக பிரகாசமான தெய்வ உணர்வு நம்முள் தலைதூக்க வேண்டும். ஆன்றோர் பலர் இந்த கடின வழியை கடந்து இறை நிலைக்கு உயர்ந்தனர்.
கடவுளை உணர, தெய்வத்தன்மை இல்லாத எல்லாவற்றையும் உரித்தெரிந்து, இல்லாமல் செய்து அவற்றை துறப்பதே சிறந்த வழி. தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறி எளியவனாக மாறவேண்டும். ‘நான் இறைவனின் கைப்பாவை’ என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். அந்த நிலையில் தெய்வத்தன்மை நம்முள் குடிகொண்டு பொங்கி பிரவாகமெடுக்கும்.
தெய்வத்தன்மையை உணர விரும்புபவர்கள் அதற்கு எதிரான எல்லா எண்ணங்களையும் துறக்க வேண்டும். இறைத்தன்மையுடன் இணங்கிப் போகாத எதுவும் நம்மிடம் இருக்கக் கூடாது. இதுவே கடவுளை உணரும் ரகசியம். இதுதான் உண்மையான துறவு. இந்த விழிப்புணர்வு தான் ஆன்மிக வாழ்வின் அடித்தளம். இதுவே நம் இயல்பாக இருப்பது மிக முக்கியம். பழைய எண்ணங்கள் சுத்தமாக அகன்று புத்தம் புதிய இறை சிந்தனை மட்டுமே நம்முள் மேலோங்கி மலர வேண்டும்.
தோட்டத்தில் அழகான புத்தம் புதிய மலர்கள் பூத்துக்குலுங்க, முட்புதரை அழித்து, கற்களை அகற்றி, மண் கட்டிகளை உடைத்து, சீர்படுத்தி சுத்தம் செய்து, செப்பனிட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு அதற்குப்பின்தான் பூச்செடிகளை நடுகிறோம். அதைப்போல் உள்ளத்தில் மாற்றம் நிகழ தடையாக இருப்பவற்றை இனம் கண்டு அவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் விலகி வாழ்வதே இறைவனை உணர வழி வகுக்கும்.
தடைகளை மொத்தமாக தகர்த்து எரிவது சுலபமில்லை. ஒரு தடையை விலக்கினால், எங்கிருந்தோ மற்றொரு தடை தலைதூக்கி தொந்தரவு செய்யும். எனவே ஒவ்வொரு முறையும் ஆன்மிக விழிப்புணர்வுடன் சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து தடைகளை நீக்கும்போது, வெவ்வேறு வகையான இறை சிந்தனை மனதில் குடிகொள்ளும். தடைகளை நீக்குவது, புதிய இறை சிந்தனை இடம் பெறுவது என இரு செயல்களும் இடையறாது நிகழ வேண்டும்.
ஆன்மிக சாதகர்களுக்கு இறைவன் பல வகைகளில் உதவி செய்வார். நம்மிடம் உள்ள குறைகளை களைய பல சந்தர்ப்பங்களை ஆண்டவன் அளித்து அருளுவார். நற்குணங்களை வளர்க்க நாம் பின்பற்ற வேண்டிய வழிபாடுகளை உள்ளுணர்வால் நமக்கு உணர்த்துவார். நமக்கு இதுவரை அறிமுகமற்ற வேறு புதிய நபர் ஒருவர் நம் மனதில் உதிக்கும் ஐயங்களை நீக்குவார்.
ஆன்மிக சாதகன் பக்தனாக பரிணமிக்க பெரும் கருணை மற்றும் பேரன்புடன் இறைவன் இவற்றை செய்வார். இதனால் மன மாயைகள் அகன்று அர்ஜுனன் இறை தரிசனம் பெற்றதுபோல் சாதகன் பக்தனாக உருமாற முடியும். இறைவனே தன்னை குருவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குருவையே நாம் இறைவனாகவும் பார்க்க முடியும்.
ஞானம் மற்றும் அஞ்ஞானம் இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. இருள், அறியாமை இவற்றை அகற்றி ஞானத்தை அருள்வதும் இறைவன்தான். அறியாமையால் நம் உண்மைத் தன்மையை அறியமுடியாமல் செய்வதும் இறைவனின் மாயா சக்திதான். அந்த சக்தியே நம்முள் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படவும் உதவுகிறது. இதன் மூலம் இறை தரிசனம் பெறுவது எளிது. மாயையில் கட்டுண்டு கிடப்பவர்களை அந்த கட்டிலிருந்து விடுவிக்க இறைவனால் மட்டுமே முடியும்.