‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்கிற முதுமொழிக்கு ஏற்ப இறைவனை சரண் புகுந்தால், அனைத்து இன்னல்களும் களையப்படும் என்பதை சரணாகதி தத்துவத்தின் வாயிலாக பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், வேதாந்த தேசிகர், கம்பர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
தனக்கு தீங்கு செய்தவனை மாய்த்துவிட வேண்டும் என நினைப்பது மனிதனின் இயல்பு. தீயவற்றை செய்தும், பாவங்களை செய்தும், தன்னையே கொல்ல வருவதாக இருந்தாலும், தனக்கும், தர்மத்துக்கும் பலவகைகளில் தீங்கு இழைத்திருந்தாலும் அந்த செயல்களுக்கு எல்லாம் வருந்தி, தன்னையே பக்தியோடு ஆத்ம நிவேதனமாக சமர்ப்பிப்பவனை (சரணாகதி) மன்னித்து, காத்து, மோட்சத்தை அளிப்ப வன்தான் இறைவன். அவனின் திருவடியைப் பற்றினால் தான் மோட்சம். இதையே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் உபதேசித்துள்ளார். தன்னிடம் சரணடைந்தவர்களை பாவங்களிலிருந்து விடுபட்டுக் காப்பேன் என்கிற பொருளில் கூறியுள்ளார்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சரணாகதி பற்றி முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீமத் ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சரணாகதி, யுத்த காண்டத்தில் விபீஷணன் சரணாகதி போன்றவை சொல்லப்பட்டுள்ளது. பாகவதத்தில் கஜேந்திர மோட்சம் (இதுவும் ஒரு சரணாகதி) பற்றி சொல்லப்பட்டுள்ளது. முதலையின் பிடியில் சிக்கிய யானையைக் காப்பாற்ற திருமால் வந்ததைப் பற்றி பெரியாழ்வார், ‘பதக முதலைவாய்ப் பட்ட களிறு’ எனத் தொடங்கும் பாசுரத்தையும், ஆண்டாள், ‘குண்டு நீருளை கோளரீ மத யானை’ எனத் தொடங்கும் பாசுரத்தையும், தொண்டரடிப்பொடி ஆழ்வார், ‘உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி’ எனத் தொடங்கும் பாசுரத்தையும் பாடியுள்ளனர். வேதாந்த தேசிகர் ‘வாரணம் அழைக்க வந்த தாரணன்’ என பாடியுள்ளார்.
மனிதனுக்கு மட்டுமின்றி விலங்கினங்களுக்கும் அருள்பவர்தான் முழுமுதற் கடவுள். ராமபிரானின் மனைவியான சீதாதேவியை அரக்க குலத் தலைவனும், இலங்கையின் அரசனுமான ராவணன் நயவஞ்சகத்தால் கவர்ந்து இலங்கைக்குக் கொண்டு சென்று விட்டான். தம்பி விபீஷணன் அறநெறிக்கு புறம்பாக அச்செயல் உள்ளதாக சொல்லி ராவணனின் தவறைத் தட்டிக் கேட்டு, சீதாதேவியை விடுவிக்குமாறு அரசவையில் வீற்றிருக்கும்போது புத்திமதி கூறினான். ராவணன் எதையும் ஏற்காமல் தம்பி விபீஷணனை துரோகி என்று கூறி அவமானப்படுத்தினான்.
இனிப் பேசி நல்ல முடிவுவராது, ராவணனுக்கு அழிவு காலம் வந்து விட்டது (விநாசகாலே விபரீத புத்தி) என்பதை நன்கு உணர்ந்த விபீஷணன் மனவேதனையுடன் இலங்கையிலிருந்து கிளம்பி வானர வீரர்களுடன் இருந்த ராமபிரானை நோக்கி தனக்கு அபாயம் (ஆபத்து) என்பதால் அபயம் (அடைக்கலம்) அளிக்குமாறு ‘சர்வலோக சரண்யாய’ எனக் கூறிக் கொண்டே நேரில் வந்து ராமபிரானின் திருவடியை வணங்கினான்.
அப்போது அங்கிருந்த வானர வீரர்கள் வாழ்வியலில் ஒழுக்கத்தை அறியாத ராவணனின் தம்பியை எப்படி ஏற்பது என்றும், விபீஷணனால் நமக்கு ஏதாவது ஆபத்து வரலாம் என்றும், எதிரியை தண்டிக்காமல் எப்படி மன்னிப்பது என்றும் கூறி விபீஷணனை ஏற்க ஆட்சேபம் தெரிவித்தனர்.
ராமபிரான் தன் அருகே இருந்த அங்கதன், சரபன், சுக்ரீவன், ஜாம்பவான் போன்றோரிடம் ஆலோசனை கேட்டபோது ஒவ்வொருவரும் விபீஷணனை ஏற்காமல் இருப்பதற்கான காரணத்தைத் தெரிவித்தனர். மதிநுட்பமும், செயல்திறனும் கொண்ட அனுமனிடம் கருத்து கேட்டபோது மிகத் தெளிவான சிந்தனையுடன் நாடி வந்த விபீஷணனை ஏற்பதே சரி எனக் கூறினார். இந்த முடிவை ராமபிரானும் மகிழ்ச்சியுடன் ஏற்றார். விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்து தம்பியாக ஏற்பதாகக் கூறினார்.
ஒருவர் காலில் விழுந்து மன்னித்து ஏற்குமாறு கூறிய பின்பு கைவிடுதல் என்பது பாவச்செயல் என்பதாலும், வந்தவரை ஏற்றுக் கொள்ளுதல் தான் தர்மம் என்றும், கொலை, களவு போன்ற பாவங்களைச் செய்திருந்தாலும் ஏற்க வேண்டும் என்றும், தீயகுணத்தை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் இப்படி பல காரணங்களால் தான் விபீஷணனை ஏற்பதாக ராமபிரான் வானர வீரர்களிடம் தெளிவாக கூறி சமாதானப்படுத்தினார். கூடியிருந்த அனைவரும் ராமபிரானின் கருணை உள்ளத்தையும், பெருந்தன்மையையும் நினைத்து மகிழ்ந்து வணங்கினர்.
பெருமாளின் கருணை உள்ளத்தைப் பற்றி வேதாந்த தேசிகர் அமிருதஸ்வாதினி எனும் நூலில், தன்னை சரணடைந்தவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது ‘அஞ்சேல்’ எனக்கூறி அவர்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிற பொருளில் கூறியுள்ளார். போரில் வென்ற ராமபிரான், தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த விபீஷணனுக்கு மூன்று பரிசுகளைக் கொடுத்தார் என்றே சொல்லலாம்.
முதலாவதாக, விபீஷணனுக்கு தன் தம்பி லட்சுமணன் மூலம் பட்டாபிஷேகம் செய்து வைத்து இலங்கைக்கு அரசனாக முடிசூட்டி மகிழ்ந்தது. இரண்டாவதாக ஸ்ரீரங்க விமானத்தை அளித்தது. மூன்றாவதாக விபீஷணனின் தூய பக்தியை போற்றும் வண்ணம் ‘விபீஷணாழ்வார்’ என்கிற சிறப்புப் பெயரை தந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் இருக்கும் இடத்தில்தான் பட்டாபிஷேக வைபவம் முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டாபிஷேக வைபவம் ஆனி மாதம் வளர்பிறை நவமி அன்று நடைபெற்றதால் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக இக்கோயிலில் உற்சவம் நடைபெறுவதுண்டு. முதல்நாள் அஷ்டமி அன்று மாலையில் ராவண வதம் நிகழ்ச்சியும், மறுநாள் நவமி அன்று விபீஷண பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறும்.
அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாத சுவாமி கோயில் நடை அடைப்பது வழக்கம். மறுநாள் தசமி அன்று ஸ்ரீ ராமநாதர் பிரதிஷ்டை தின நிகழ்ச்சி நடைபெறும். இந்நாளில் தான் முன்பு சீதாதேவி மணலால் ஆன லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்தைதான் ராமபிரான் முதலில் பூஜித்தார் என்பது வரலாறு.
- dr.r.rajeswaran@gmail.com