ஆனந்த ஜோதி

அனைத்து செல்வங்களையும் அருளும் மீஞ்சூர் ஏகாம்பரேஸ்வரர்

வெ.கணேசன்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், அனைத்து செல்வங்களையும் அருளும் தலமாக போற்றப்படுகிறது. வேலவனே தீர்மானித்ததால், இத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருகாலத்தில் மௌஞ்சாரண்யம் என்று அழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் மீஞ்சூர் என்று அழைக்கப்படுகிறது. தர்ப்பைப் புற்கள் அடர்ந்த வனப்பகுதியாக விளங்கும் இவ்வூரில் (வடகாஞ்சி) காஞ்சியைப் போலவே ஏகாம்பரநாதரும், காமாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்த ஏகாம்பரநாதர் கோயில், 5 நிலை ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. தொடக்க காலத்தில் இருந்தே முருகன் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவாக வைகாசி விசாகத்திருவிழா உள்ளது. தெற்கு சுற்றில் வள்ளி - தெய்வானை உடனுறை முருகனுக்கு தனி கோயில் அமைந்துள்ளது.

1976-ம் ஆண்டு, பக்தர்கள் ஒன்றிணைந்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் பாராயண குழு என்ற குழுவை அமைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் பாராயணம், சிறப்பு அலங்காரம், கூட்டுப் பிரார்த்தனை என்று நடத்தி வந்தனர். ஆண்டுதோறும் 13 நாட்கள் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. அதுபோலகந்தப் பெருமானுக்கு பிரம்மாண்டமாக ஒரு விழா நடத்த வேண்டும் என்று முருக பக்தர்கள் விருப்பம் கொண்டனர். இதுதொடர்பாக முருகப்பெருமானிடமே கேட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முருகப் பெருமானுக்குரிய பல்வேறு விழாக்களை எழுதி, முருகப் பெருமானின் திருவடிகளில் வைக்கப்பட்டது, மூன்று முறை சீட்டு எடுத்துப் பார்த்தும், அவற்றில் வைகாசி விசாகம் என்ற முடிவையே முருகப் பெருமான் அருளினார். அன்று முதல் வைகாசி விசாகத் திருவிழா இத்தலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 50-வது ஆண்டாக, வைகாசி விசாகத் திருவிழா இந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

தொடக்க நிகழ்ச்சியாக 108 சங்காபிஷேகம், சிறப்பு ஹோமம், பால்குட அபிஷேகம் நடைபெறும். இல்லம்தோறும் சண்முக கவசம் பாராயண குழுவினரின் பகைகடிதல், ஸ்ரீ குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் மற்றும் சண்முககவச கூட்டு வழிபாடு நடைபெறும். பக்தர்களுக்கான அன்னம் பாலிப்பைத் தொடர்ந்து ஆறுமுகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா காண்பார். மேற்குச் சுற்றில் காசி விஸ்வநாதர் - விசாலாட்சி கோயில், செல்வ விநாயகருக்கு தனி கோயில், பிரகாரத்தில் பூங்காவனம், தலவிருட்சம் மாமரம் உள்ளன. மகாமண்டபத்தின் வடக்கு புறத்தில் 4 கரங்களுடன் காமாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மூலவர் விமானம் வேசர வடிவில் உள்ளது. சென்னை வள்ளலார் நகர், கோயம்பேடு, பாரிமுனை ஆகிய இடங்களில் இருந்து மீஞ்சூருக்கு பேருந்து வசதி உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு ரயிலிலும் வரலாம். கூடுதல் விவரங்களை 9444508445 (விஜயகுமார் சிவாச்சாரியார்) என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.

SCROLL FOR NEXT