ஆனந்த ஜோதி

திருமண வரம் அருளும் கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி

கே.சுந்தரராமன்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், செவ்வாய் தோஷம் போக்கும் தலமாக போற்றப்படுகிறது. திருமணத் தடை நீக்கி, அனைத்து நலன்களையும் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்தில், பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் பூலோக ப்ரதிக்ச விவாஹம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஈசனும் சக்தியும் மணந்து கொண்ட திருமணத் தலங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

திருமணக் கோலம் காட்டிய திருத்தலங்கள் (காசி விவாஹம்) - வேதாரண்யம், திருவேற்காடு, காஞ்சி. காந்தர்வ முறைப்படி ஈசனும் சக்தியும் மணந்து கொண்ட இடங்கள் (காந்தர்வ விவாஹம்) - உத்திரகோசமங்கை, திருவீழிமிழலை. வாக்கு தந்தபடி ஈசன் அன்னையை கரம் பிடித்த தலங்கள் (ப்ரதிக்ஞா விவாஹம்) - மதுரை, குற்றாலம். விளையாட்டாக பந்தாடி பார்வதியை ஈசன் மணந்த தலம் (ஹாஸ்ய விவாஹம்) - பந்தநல்லூர். முறைப்படி அனைவரும் புடைசூழ செய்து கொண்ட திருமணம் (பூலோக ப்ரதிக்ச விவாஹம்) - திருமணஞ்சேரி, கயிலாயம், திருவாரூர், கொருமடுவு.

பரமேஸ்வரனை கணவனாக அடைவதற்கு, கொருமடுவு பகுதியில் சக்திதேவி கடும் தவம் புரிந்தார். இந்த கிராமத்தில் சக்திக்கும் ஈசனுக்கும் பூலோக ப்ரதிக்ச விவாஹம் நடைபெற்றது. கொருமடுவு தலத்துக்கு முருகப் பெருமானை, சக்தி தேவி அழைத்து வந்து இத்தல பெருமைகளை எடுத்து சொன்னார்.

மேலும் இத்தலத்தில் வந்து பூஜித்தால், திருமணம் தொடர்பான சகல தோஷங்களும் நீங்கி நல்ல வரன் அமையும் என்றும் முருகப் பெருமானுக்கு சக்தி தேவி வரம் அருளினார். அன்னையின் வரத்தை பக்தர்களுக்கு எடுத்துச் சொல்ல, முருகப் பெருமானும், பிள்ளை வடிவில், பாலதண்டாயுதபாணியாக கையில் தண்டம் ஏந்தி மேற்கு நோக்கி சிரித்த முகத்துடன் இத்தலத்தில் கோயில் கொண்டார்.

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக முருகப் பெருமான் விளங்குகிறார். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 இடங்களில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு திருமணத் தடை, பிள்ளைப்பேற்றில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு, தொழிலில் இழப்பு, உத்தியோகத்தில் இடர்பாடு போன்றவை ஏற்படலாம். இத்தலத்தில் வந்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் பூரணமாக விலகும் என்று தல புராணம் கூறுகிறது.

1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலம், சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது. தெற்கு பார்த்த அம்மன் (கௌரி) கோயில்,மேற்கு பார்த்த முருகன் (பாலதண்டாயுதபாணி) கோயில், சுற்றி பச்சைப் பசேல் மரங்கள், அருகில் தண்ணீர் ஓடை, எந்நேரமும் குவியும் பக்தர்கள் என்று இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. வனப்பகுதியாக விளங்கும் இங்கு முருகப் பெருமான் மலைகள் சூழ வீற்றிருக்கிறார். ஈசனும் சக்தியும் ஒரு சேர காட்சியருள்கின்றனர். விநாயகர், ஏகபாத மூர்த்தி, பிரம்மா - பிராமி, பித்ருக்கள், சரஸ்வதி, மகாலட்சுமி, சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதிகள் உள்ளன.

இத்தலத்தில் செய்யப்படும் பார்வதி சுயம்வர பார்வதி ஹோமம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். திருமணஞ்சேரி, பவானி கூடுதுறை, காளஹஸ்தி, ராமேஸ்வரம், திருநள்ளாறு, ஸ்ரீரங்கம், நவக்கிரக தலங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் திருமண பரிகார சடங்குகளையும் இங்கு ஒருசேர செய்வதால், இந்த ஹோமம் மிகவும் விசேஷமானது.

கணபதி ஹோமம் ஸ்ரீகாலபைரவர் ஹோமம், நவக்கிரக வழிபாடு, மாங்கல்ய தோஷம் நீங்கவாழைமர பரிகார வழிபாடு, பாலைமர வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து வித வழிபாடுகளும் இந்த ஹோமத்தில் நடைபெறுகின்றன. இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மதேவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அன்னை பார்வதிக்கு கிடைத்ததைப்போன்ற இனிய துணை கிடைக்கச் செய்வதே இந்த ஹோமத்தின் நோக்கம். இத்தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம், வைகாசி 26-ம் நாள் (திங்கள்கிழமை, 09-06-2025) காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 9940700402, 9895678168, 9790591091 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அமைவிடம்: சத்தியமங்கலத்தில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது.

SCROLL FOR NEXT