பிரயாக்ராஜ் 
ஆனந்த ஜோதி

சமுத்திர மந்தனாவும் அமிர்த சிதறல்களும்

ராஜி ராதா

சமுத்திர மந்தனா என்பது பாற்கடலைக் கடையும் சம்பவத்தை விளக்கும் புராணக் கதையாகும். தேவர்கள் மற்றும் அசுரர்கள் இணைந்து, பாற்கடலைக் கடைந்து, அதில் இருந்து அமிர்தம் (நித்திய வாழ்வின் அமுதம்) உள்ளிட்ட விலை மதிப்பற்ற பொருட்கள் கிடைக்கப் பெற்றனர். நித்திய ஜீவித அமுதம் பற்றி கூறும் விஷ்ணு புராணத்தில் அசுரர்களின் பேராசையும், தேவர்களின் விருப்பமும் விளக்கப்பட்டுள்ளன.

ஒரு சமயம் இந்திரன் தனது யானையின் மீது பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது துர்வாசர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். அப்சரஸ்கள் தனக்கு அளித்த மாலையை, துர்வாச முனிவர், இந்திரனிடம் அளித்து அணிந்து கொள்ளச் சொன்னார். சற்று நேரம் மாலையை அணிந்து கொண்ட இந்திரன், அதை தனது யானைக்கு அணிவித்தான்.

தேனீக்கள் மாலையை வட்டமிட்டதால், கோபமடைந்த யானை அதை கசக்கி தூக்கி எறிந்தது. அந்த மாலையில் இருந்த மகாலட்சுமி உடனே கடலுக்குள் சென்று மறைந்து கொண்டாள். கீழே கிடந்த மாலையைக் கண்ட துர்வாசர் கோபமடைந்து இந்திரனை நோக்கி, “உனதுபலம், சக்தி, செல்வம் அனைத்தும் உன்னிடமிருந்தும் மற்ற தேவர்களிமிருந்தும் மாயமாய் மறைந்து விடும்” என்று கூறி சபித்தார்.

அனைத்தையும் இழந்த இந்திரன் மற்றும் தேவர்கள் இதுகுறித்து வருத்தம் அடைந்தனர். விவரம் அறிந்த அசுரர்கள், தேவர்களை வென்று அவர்களை விரட்டிவிட்டனர். தேவர்கள் தங்கள் நிலைமை குறித்து திருமாலிடம் விவரித்தனர். பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளியே எடுத்து அதை அருந்தினால் மட்டுமே பழைய நிலை திரும்பும் என்று திருமால் தேவர்களுக்கு ஆலோசனை கூறினார். மேலும், மந்தார மலையை மத்தாகவும், சிவபெருமான் கழுத்தில் இருக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தி பாற்கடலைக் கடையுமாறு பணித்தார். சிவபெருமானும் வாசுகிப் பாம்பை தேவர்களிடம் அளித்தார்.

பாற்கடலைக் கடைய இரண்டு அணிகள் தேவை என்பதால் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என்று தேவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, ‘கிடைக்கும் அமிர்தத்தில் சரி பாதி பிரித்துக் கொள்ளலாம்’ என்று அசுரர்களுக்கு தூது அனுப்பினர். அசுரர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். பிறகு பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. மலை, கடல் அடியில் மூழ்கியது. உடனே திருமால் கூர்ம அவதாரம் எடுத்து மலையை தனது ஓட்டில் தாங்கினார். பாற்கடலைக் கடையும் பணி தொடர்ந்தது. அப்போது பல பொருட்கள் வெளிவந்தன.

முதலில் மகாலட்சுமி வெளிவந்து திருமாலுடன் சேர்ந்து கொண்டார். பிறகு ரம்பா, ஊர்வசி போன்ற அப்சரஸுகள் வெளிவந்தனர். காமதேனு பசு, இந்திரனால் கைப்பற்றப்பட்ட யானை, ஏழு தலை தெய்வ குதிரை, பிரபஞ்சத்தின் மிக மதிப்பு மிக்க ரத்தினம் (அது விஷ்ணுவுக்கு உரியது), கல்ப விருட்சம் (ஒரு போதும் வாடாத அல்லது வாடாத பூக்களைக் கொண்டிருக்கும் தாவரம்) விஷ்ணுவின் சங்கு, ஜேஷ்டா தேவி (துர்அதிர்ஷ்ட தேவதை), அதிதிக்கு அவள் மகன் இந்திரன் கொடுத்த காதணி என்று ஒவ்வொன்றாக வந்தன.

தன்வந்திரி அமிர்த குடத்துடன் வந்தார். அசுரர்கள் தன்வந்திரியிடம் இருந்து அமிர்தத்தை அபகரித்துக் கொண்டு ஓடினர். தேவர்கள் திருமாலிடம் இதுகுறித்து முறையிட்டனர். திருமால் மோகினி அவதாரம் அடுத்து, அசுரர்களிடம் இருந்து அதை எடுத்துக் கொண்டு சமாதானம் செய்தார். ஒருபக்கம் தேவர்களையும், மற்றொரு பக்கம் அசுரர்களையும் அமரச் செய்து, முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுத்துவிட்டு, பின்னர் அசுரர்களுக்கு தருவதாக திருமால் கூறினார்.

அதன்படி அனைவரும் அமர்ந்தனர். இடையில் தேவர் வடிவத்தில் ஓர் அசுரனும் அமர்ந்திருந்தான், அவன் உடலில் இருந்து ஓர் ஒளி தென்பட்டதால், அதை சூரிய சந்திரர்கள் அறிந்து, திருமாலிடம் கூறினர். ஆனால் அதற்குள் அந்த அசுரன், அமிர்தம் வாங்கி உண்டுவிட்டான்.

திருமால், தனது சக்கராயுதத்தைப் பயன்படுத்தி, அசுரனின் தலையை வெட்டினார். தலை ராகு எனவும், துண்டிக்கப்பட்ட உடல் கேது எனவும் ஆனது. அசுரர்கள் கோபமடைந்து தேவர்களிடம் சண்டையிடத் தொடங்கினர். இதுதான் தக்க தருணம் என்று நினைத்த திருமால், தனது சுய வடிவம் எடுத்து, கருடன் மீது ஏறி பயணித்தார்.

அவரிடம் இருந்து அமிர்த குடத்தை அபகரிக்க, அசுரர்கள் முயன்றனர். அதில் இருந்த அமிர்தம் 4 இடத்தில் சிந்தின. அமிர்தம் தேவர்கள் கைக்கு கிட்டியது. இதனால் அவர்கள் தங்கள் பழைய பலம், சக்தி, செல்வம் ஆகியவற்றைப் பெற்றனர். அசுரர்களை எளிதில் வென்று பாதாள உலகத்தில் அவர்களை தள்ளிவிட்டனர். அமிர்தம் சிந்திய 4 இடங்களாக, ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜையினி அடையாளம் காணப்பட்டது.

1.ஹரித்வார் (உத்தராகண்ட் மாநிலம்) - கங்கை பூமியில் இறங்கி ஓடத் தொடங்கிய இடம், மது என்ற அரக்கனை திருமால் சம்ஹாரம் செய்த இடம், முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று என்று பல சிறப்புகளைக் கொண்டது. கங்கைக் கரையில் திருமாலின் பாதம் உள்ளது. பிரம்ம குண்டத்தில் அமிர்தம் சிதறியதால், இங்கு புனித நீராடுவது சிறப்பு. வியாழன் கும்ப ராசியிலும், சூரியன் மேஷ ராசியிலும் இருக்கும்போது (12 ஆண்டுகளுக்கு ஒரு முறை) இங்கு கும்பமேளா நடைபெறும்.

2.உஜ்ஜையினி (மத்திய பிரதேசம்) தூஷணனை அழித்து, சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக அருள்பாலிக்கும் இடம் ஆகும். இங்கு சிப்ரா நதி ஓடுகிறது. இதன் தாஷ்வதகாட்டில்தான் அமிர்தம் சிந்தியது. சிப்ரா நதியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது.

3.நாசிக் (மகாராஷ்டிரா) சூர்ப்பனகையின் மூக்கு அறுபட்ட இடம் ஆகும். கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்காட்டில்தான் அமிர்தம் சிதறியது. கோதாவரியில் சிம்மாஷ்டமி தினத்தில் கும்பமேளா நடக்கிறது.

4.பிரயாக்ராஜ் (உத்திர பிரதேசம்) பகுதியில் கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமம் ஆவதால் திரிவேணி சங்கமம் என அழைக்கின்றனர். 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா சமீபத்தில் நடந்து முடிந்தது.

SCROLL FOR NEXT