ஆனந்த ஜோதி

ஆனந்த வாழ்வு அளிக்கும் சுதர்சனர் வழிபாடு

கே.சுந்தரராமன்

திருமாலின் வலது கரத்தை அலங்கரிக்கும் சக்கர ஆயுதம், சுதர்சனாழ்வாராக வணங்கப்படுகிறார். திருமாலுக்கு இணையானவராகக் கருதப்படும் இவர், பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளுக்குள் உறையும் பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார்.

மனிதனின் நிம்மதியை பாதிக்கும் கடன், நோய், பகைவர் தரும் இன்னல்கள் என அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி அளிப்பவராகவும், கல்வி யோகத்தை அளிப்பவராகவும் சக்கரத்தாழ்வார் விளங்குகிறார். திருவாழியாழ்வான், சக்கரராஜன், ரதாங்கம், நேமி, திகிரி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சுதர்சனாழ்வார், பெருமாள் கோயில்களில் தனிசந்நிதியில் 16, 32 என்ற எண்ணிக்கையில் கரங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

பெரியாழ்வார் தனது பல்லாண்டிலும், சுவாமி தேசிகன் தனது சுதர்சனாஷ்டகத்திலும், சக்கரத்தாழ்வாரைப் போற்றி பாடியுள்ளனர். ‘சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருமாலுடன் அவரது சக்கரத்துக்கும் சேர்த்து ஏற்றம் தரும் வகையில் ஆண்டாள் பாடியுள்ளார். ஸ்ரீரங்கம் கூர நாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளிச் செய்துள்ளார்.

தனது வலது கரத்தில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிஷம், வேல் ஆகியவற்றையும் இடது கையில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவற்றையும் ஏந்தி சுதர்சனாழ்வார் அருள்பாலிக்கிறார்.

சில கோயில்களில் இந்த அமைப்பு மாறுபட்டு காணப்படும். திருக்கோவிலூரில் மூலவர் வலது கரத்தில் சங்கு, இடது கரத்தில் சக்கரத்துடன் காட்சி அருள்கிறார். பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில். மூலவரின் வலது கரத்தில், பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் உள்ளது.

கும்பகோணம் சக்கர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மதேவருக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக அருட்காட்சி வழங்குகிறார்.

நித்ய சூரியான சுதர்சனர் வாழ்வில் ஒளி தருபவர். வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியிலும், நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாகவும், வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கிய தர்ப்பை வடிவமாகவும், ராமர் அவதாரத்தில் அவரது வில்லிலும், பரசுராமர் அவதாரத்தில் அவரது ஏர்க் கலப்பையாகவும், கிருஷ்ணர் அவதாரத்தில் சக்கரமாகவும் இருந்தவர் சுதர்சனர் என்று புராணங்கள் கூறு கின்றன.

சிசுபாலனின் தவறை 100 முறை மன்னித்த கிருஷ்ணர், அவனது 101-வது தவறின் போது சுதர்சன சக்கரத்தை ஏவி அவனை அழித்தார். மகாபாரத யுத்தத்தின்போது ஜயத்ரதனை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, பெருமாளின் சக்கரம் எழுந்து, சூரியனை மறைத்தது. இதனால் குருஷேத்திரமே இருளில் மூழ்கியது. அப்போது ஜயத்ரதன் அழிக்கப்பட்டு, அச்சம்பவமே மகாபாரத வெற்றிக்கு வித்திட்டது. கஜேந்திர மோட்சம் சம்பவத்தில் யானையின் காலைப் பிடித்துக் கொண்ட மகேந்திரனை (முதலை) சீவித் தள்ளி, கஜேந்திரனை காத்தருளியது சுதர்சன சக்கரம்தான்.

திருமால், ராமாவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணங்கள் உரைக்கின்றன. சுதர்சனருக்கான வழிபாடுகள், விகசை என்ற மகாமுனிவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுதர்சனரின் நட்சத்திரம் சித்திரை என்பதால், அந்த தினத்தில் அவரை வழிபடுவது நன்மை பயக்கும். சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமம் மிகவும் சிறந்ததாகும். ஜூவாலா கேசம், திரிநேத்ரம், 16 கரங்கள், 16 ஆயுதங்கள் கொண்டசுதர்சனரை வழிபடுவதால், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள் நீங்கும்.

இவரை புதன்கிழமையும் சனிக்கிழமையும் வணங்குவது சிறப்பு. சனிக்கிழமை காலையில் சுதர்சனாழ்வாரை சூரிய வடிவாகவே எண்ணி வழிபடலாம் என்றும், அன்றைய சூரிய நமஸ்காரத்தை சுதர்சன ஆராதனையாகவே செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. வியாழக்கிழமைகளில் சிவப்பு மலர் மாலை சூட்டி இவரை வழிபட்டால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி, ‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம:’ என்று கூறி வழிபடுதல் நன்மையைத் தரும்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி வலம் வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீசுதர்சன காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, அவரை வழிபடுபவர்கள் மரண பயமின்றி வாழ்வார்கள் என்று ஸ்ரீமத் பாகவத புராணம் தெரிவிக்கிறது. பக்தர்களைக் காக்க சக்கரத்தாழ்வார் ஓடோடி வருவதுபோல, நரசிம்மரும் பக்தர்கள் குரல் கேட்டு ஓடோடி வருவார் என்பது ஐதீகம்.

SCROLL FOR NEXT