உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள கார்த்திக் சுவாமி கோயில், வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றும் திருத்தலமாக போற்றப்படுகிறது. சுற்றிலும் பனி மலைகள் சூழ்ந்த சிகரத்தில் இருந்து சூரிய உதய நேரத்திலும், சூரிய அஸ்தமன சமயத்திலும் முருகப் பெருமானை தரிசிப்பது நற்பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.
தேவ பூமியாக உத்தராகண்ட் மாநிலம் போற்றப்படுகிறது. பஞ்ச பிரயாகையில் (நந்தப் பிரயாகை, தேவப் பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை) ஒன்றான ருத்ரப் பிரயாகையில் அலக்நந்தா நதியும் மந்தாகினி நதியும் சங்கமமாகின்றன.
ருத்ரப் பிரயாகையில் கடல் மட்டத்தில் இருந்து 3,050 மீட்டர் உயரத்தில் கார்த்திக் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிலிர்க்க வைக்கும் சீதோஷ்ண நிலை, கரடு முரடான பாதை, வழி நெடுகிலும் மரங்கள், கொஞ்சம் அசந்தாலும் வழுக்கி விடும் பாறைகள் என்ற நிலையைக் கடந்து முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.
ஒருசமயம் கைலாய மலையில் விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும், உலகை யார் முதலில் வலம் வருகிறார்கள் என்ற போட்டி நடந்தது. போட்டி அறிவிக்கப்பட்டதும், முருகப் பெருமான் உலகை வலம் வரக் கிளம்பிவிடுகிறார். விநாயகப் பெருமான் தனக்கு தாய் தந்தையரே உலகம் என்று கூறி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வலம் வந்து போட்டியில் வெல்கிறார். நடந்த சம்பவங்களை அறிந்த முருகப் பெருமான் கோபம் கொண்டு சிவபெருமானுக்காக தனது உடலையும் எலும்புகளையும் காணிக்கையாக்குகிறார்.
வெண்ணிற எலும்புகள் அனைத்தும் ஒன்றாகி சுயம்பு வடிவ கார்த்திக் சுவாமியாக, முருகப் பெருமான் தேவர்களுக்கு காட்சி அருள்கிறார். சிவபெருமானும் முருகப் பெருமானின் திருவிளையாடலைப் புரிந்து கொண்டு அவரை அந்த இடத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரியுமாறு பணித்தார். அதன்படி அருகில் உள்ள கிரௌஞ்ச மலையில் சௌகம்பா சிகரத்தின் பின்னணியில் வெண்நிறச் சுயம்புத் திருமேனியுடன், முருகப் பெருமான் கார்த்திக் சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோயிலில் கட்டப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மணிகள் நம்முள் உணர்வலைகளை எழுப்புகின்றன. கார்த்திகை பூர்ணிமா தினத்தில் இங்கு வந்து இந்த மணியைக் கட்டி சுவாமி தரிசனம் செய்தால், பக்தர்களின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறை வேறும் என்பது ஐதீகம். அதற்கேற்ப தினந்தோறும் மாலை நேரத்தில் இந்த மணிகளின் ஓசையுடன் சந்தியா கால ஆரத்தி நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு, இக்கோயில் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக உத்தராகண்ட் மாநில அரசு பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் முருகப் பெருமானுக்கு ஸ்கந்த மகா யாகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்துச் செல்கின்றனர். உத்தராகண்ட் அரசின் சுற்றுலா துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
டேராடூன் விமான நிலையத்தில் இருந்து 150 கிமீ மலைப் பாதையைக் கடந்து சென்றால் ருத்ரபிரயாக் நகரத்தை அடையலாம். அங்கிருந்து 40 கிமீ மலை மார்க்கமாக பயணித்து கனக்சௌரி கிராமத்தை அடைந்து அங்கிருந்து 3.5 கிமீ மலையேறிச் செல்ல வேண்டும். பின்னர் அரை கிமீ தூரத்துக்கு 400 செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை அடைந்தால், கார்த்திக் சுவாமியை தரிசித்து அருள்பெறலாம். உத்தராகண்ட் கார்த்திக் சுவாமி கோயில் தொடர்பான தகவல்களை அறிய உதவும் யுடியூப் லிங்க் https://www.youtube.com/watch?v=7pcU8Y_9shg