ஒருவரது எண்ணங்களே அவரை பக்குவப்படுத்தும் கருவியாக உள்ளது. இந்த எண்ணங்களால் ஒருவரை வாழ்வின் உயரத்துக்கு கொண்டு முடியும். படுகுழியில் தள்ளவும் முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், நாம் நம்மை சுய சோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒருவரை நீங்கள் யார் என்று கேட்டால், அவர் தன் பெயர், வயது, கல்வித் தகுதி, பதவி, நாடு உள்ளிட்ட தகவல்களை தெரிவிப்பார். இவை அனைத்தும் மாற்றத்துக்கு உட்பட்டது. மகிழ்ச்சியானவன் அல்லது மகிழ்ச்சியற்றவன் என்றும் சொல்ல முடியாது. இன்பம் - துன்பம் ஆகிய இரண்டும் கலந்த கலவையான அனுபவங்களைக் கொண்டவனா என்றும் புரியவில்லை. நம்மைப் பற்றிய குழப்பம் இருப்பதால் இந்த நிலைக்கு ஆளாகிறோம். காரணம் சுயசந்தேகம். மனநிலைக்கேற்ப மாறுவதே இதற்கு காரணம்.
வேறு மாதிரி மாற முயல்கிறோம் அல்லது குறிப்பிட்ட துறையில் சாதனை படைக்க துடிக்கிறோம். இதனால் நம்மை நாம் ஏற்றுக் கொள்வோம் என நினைக்கிறோம். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் நம்மை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என நினைக்கிறோம்.
மற்றவர்கள் புகழ்ந்தால் மட்டுமே நம்மை ஏற்றுக் கொள்கிறோம். நம்மை நாம் ஏற்றுக் கொள்ளாததே இதற்கு காரணம். சுய அங்கீகாரத்துக்காக ஏங்குகிறோம். மற்றவர்கள் மத்தியில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து போராடுகிறோம். இதற்காக இலக்கை நிர்ணயிக்கிறோம்.
இலக்கை அடையவிடாமுயற்சி செய்து மன உளைச்சலுக்கு ஆளாகி, முடிவு எப்படி இருக்குமோ என்ற பயத்தில் வாழ்கிறோம். இலக்கை அடைந்த பின்னும்கூட முழுமையாக நம்மை நாம் ஏற்க மறுக்கிறோம். செயல்களால் முழுமையான மனிதனை உருவாக்க இயலாது.
அறிவால் மட்டுமே மனிதன் முழுமை அடைய முடியும். அறிவு மற்றும் செயல் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டவை. இயக்கம் அல்லது மாறுபடும் தன்மைதான் செயல். மூச்சு விடுவதை போல் நம் முயற்சியின்றி நிகழும் செயல்களும் இதில் அடங்கும்.
‘எந்தச் செயலையும் செய்யாமல் ஒரு நொடி கூட உயிர் வாழ முடியாது’. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது இவையெல்லாம் செயல் என்பதில் அடங்கும். ஒரு சிந்தனையில் இருந்து மற்றொரு சிந்தனைக்கு தாவுவதும் ஓர் இயக்கம்தான். தூங்குவதுகூட ஒரு செயல்தான். உணவு செரித்தல், சீரான ரத்த ஓட்டம் என பலசெயல்கள் தூக்கத்தில் நிகழ்கின்றன. எந்த செயலையும் செய்யாமல் வாழ்வது சாத்தியமில்லை.
ஒரு செயலை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம், மாற்றிச் செய்யலாம். இப்படி சுதந்திரமாக முடிவெடுக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. இதை ‘சுய விருப்பம்’ என்று கூறலாம். எனவே செயல் என்பது விருப்பத்தைப் பொறுத்த விஷயம். முயற்சியின்றி நிகழும் செயல்கள் கூட, மற்றொருவரின் விருப்பத்தால் நிகழலாம். அது கடவுளின் விருப்பமாக இருக்கலாம் அல்லது இயற்கையின் நியதியாக இருக்கலாம்.
அறிவு கொஞ்சம் வேறுபட்டது. சில நிபந்தனைகள் நிறைவேறினால் மட்டுமே அறிய முடியும். முதலில், ஒரு பொருள் இருக்க வேண்டும். அடுத்து அறியும் வழி. இறுதியாக அறிபவர். பொருள் மற்றும் அறிபவர் இவற்றின் தொடர்பை அறியும் வழி புலப்படுத்தும்.
ஆனால் அறிவு விருப்பத்துக்கு உட்பட்ட விஷயம் இல்லை. பூச்சந்தையைக் கடக்கும்போது, அதைப் பற்றிய சிந்தனை நமக்கு இல்லாதபோதும், நாம் எந்த முயற்சியும் செய்யாதபோதும், நமக்கு விருப்பம் இல்லையென்றாலும், மூக்கு தன் கடமையை செய்வதால், பூக்களின் மணத்தை நுகர்கிறோம். கண்களை திறந்தபின் பார்க்காமல் இருக்க முடியாது. பொருட்களையும் மனிதர்களையும் கண்களால் பார்க்கிறோம்.
உருவம், நிறம் இவற்றை கண்களால் மட்டுமே பார்க்க முடியும். கண்ணுக்கு பதிலாக காது மற்றும் மூக்கை உபயோகித்து பார்க்க முடியாது. வாசனையை மூக்கால் மட்டுமே நுகர முடியும். வேறு விதத்தில் அறிய முடியாது. அறிவு பொருளை மையமாகக் கொண்டது. வேறு உத்திகளை பயன்படுத்த முடியாது. வேறு விதத்தில் அறிய முடியாது.
ஆனால் நம் கருத்து சரியானது என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. பல்வேறு சூழ்நிலைகளை பலவகைகளில் அணுகுவதால் ஐயம் எழுகிறது. சுய சந்தேகம் சூழ்கிறது. மகிழ்ச்சி தருணங்கள் குறைகின்றன. குற்றவுணர்வு வாட்டுகிறது. குறைபாட்டுடன் பொருத்தமற்றவர் என உணர்கிறோம். இவை முகத்தில் பிரதிபலிக்கிறது. இந்த நிலையில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது.
மகிழ்ச்சியான தருணங்கள்: தன்னில் தானாய் திகழும் சில மகிழ்ச்சித் தருணங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. இனிமையாக சில நொடிகள் கழிகிறது. அப்போது சுய மதிப்பு பற்றிய கவலையின்றி மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு நகைச்சுவை, கள்ளங்கபடமற்ற குழந்தையின் சிரிப்பு, பயமறியா இளங்கன்றின் துள்ளல், இளம் குரங்குகளின் சேட்டை, திகைக்க வைக்கும் இயற்கை காட்சி இவை நம்முள் இருக்கும் மகிழ்ச்சியான மனிதனை வெளிப்படுத்துகிறது. உள்ளது உள்ளபடி நீங்கள் ஏற்க தகுந்தவர். போராட வேண்டாம் என ஆன்மிக அருளாளர்கள் சொல்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நம் எண்ணம், தோற்றம் எல்லாம் ஆன்மிகத்தில் இருந்து வேறுபடுகிறது. பலவற்றை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதே இதற்கு காரணம். ஆனால் ஆன்மிக உண்மை முழுமையாக ஏற்கத்தக்கது. ஆன்மிகத்தின் பார்வையில், நம் வாழ்க்கை தேடல் எல்லாம், நம்மை நாம் தேடுவதே. ‘நாம்’ என்ற சொல் எல்லா உயிர்களையும் குறிக்கிறது. சுயச்சார்புடன் வாழ்வதால் சுயகருத்தை தவிர்க்க இயலாது. உயிர்வாழ பணமும், பல பொருட்களும் தேவைப்படுவதால், பணம் சம்பாதிக்கவும், அதை சேமிக்கவும், பாதுகாக்கவும் நம் ஆயுள் முழுவதும் கழிவதால் நம்மால் நம்மை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனிதர்களின் எல்லாப் போராட்டங்களுக்கும் இதுவே காரணம். நம் எண்ணம் தவறானது என ஆன்மிகம் உறுதிபடக் கூறுகிறது.
எங்கு தவறான கருத்து இருக்கிறதோ, அங்கு ஆழ்ந்த அறிவு தேவை. செயல் அல்ல. அறிவால்தான் பிழையை நீக்க முடியும். நம் தேவையெல்லாம் நுண்ணறிவு மட்டுமே. அதன் துணைகொண்டு நம்மை நாம் அறிய முடியும். இந்த எண்ணங்களே ஒருவரது வாழ்வை வண்ணமயமாக ஆக்குகிறது. நல் எண்ணங்களை மனதில் விதைத்து அனைத்திலும் வெற்றி பெறுவோம்.