ஆனந்த ஜோதி

வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர்

சி.எஸ். ஆறுமுகம்

திருவாரூர் மாவட்டம் திருச்சிறுகுடியில் மங்களாம்பிகை உடனாய சூட்சுமபுரீஸ்வரர் கோயில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால சோழர்களால் கட்டப்பட்டதாகும். திருக்கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தபோது, பார்வதி வெற்றி பெற்றார்.

அப்போது ஒரு திருவிளையாடல் நடத்த எண்ணிய சிவபெருமான், அந்த இடத்தில் இருந்து மாயமானார். இதனால் கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி, வில்வ மரத்தடியில் தன் கை பிடி மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டார். இதில் சிவபெருமான் மனமகிழ்ந்து காட்சி கொடுத்து, அம்பாளை இடப்புறம் அணைத்து அருளினார். இந்த லிங்கமே சந்தோஷ ஆலிங்கன மூர்த்தியாக அழைக்கப்படுகிறது. சிறுபிடி என்ற பெயர் காலப்போக்கில் சிறுகுடியாக மறுவி அழைக்கப்பட்டது.

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் மூலவர் மேல், அம்பாள் கைரேகை இன்றளவும் காணப்படுகிறது. அமாவாசை, சிவராத்திரி நாட்களில் மட்டும் தைலக் காப்பு நடைபெறுவது விசேஷமாகும். நவக்கிரகங்களில் சூரியன், செவ்வாய், பறவைகளில் கருடன், ரிஷிகளில் விஸ்வாமித்திரர் தனது சீடருடன் மூலவரை பூஜித்துள்ளனர்.

இந்தக் கோயிலில் செவ்வாயின் அந்தஸ்து உயர்ந்ததால், மங்கள செவ்வாய் ஆனந்தத்துடன் சுபத்தன்மை பெற்ற அருள்பாலிக்கிறார். இதனால் ஜாதகத்தில் எந்த விதமான செவ்வாய் தோஷம் இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ள மூலவரையும், மங்கள செவ்வாயையும் வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நன்மைகள் கிட்டும்.

இங்கு மங்களநாதர், மங்களாம்பிகை, மங்கள விநாயகர், மங்கள சுப்பிரமணியர், மங்கள தீர்த்தம் என அனைத்தும் மங்களப் பெயருடன் திகழ்வது சிறப்பாகும். மனித வாழ்வுக்கு தேவையான வாழ்வு சார்ந்த பதவிகள், சமுதாயம் சார்ந்த பதவிகள் என்று, அனைத்து சூட்சமங்களையும் அறிந்தவர் சூட்சுமபுரீஸ்வரர் என்பதால் வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்த பெருமான், இந்தத் தலத்தை பற்றி பாடிய 11 பாடல்களில், முதல் பாடலில் அனைவரும் சிவலோகம் அடைவார்கள் என்று பாடியுள்ளார். அடுத்தடுத்த பாடல்களில், பிணிகள் அண்டாது என்றும், தியானிக்கும் அடியார்கள் அனைவருக்கும் நலன்களையும், நன்மைகளையும் சிவபெருமான் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இந்தக் கோயிலின் தெற்குப் புறத்தில் இருக்கும் சுவரில், நான்குக்கு நான்கு என 16 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் எண்களை, தற்போது கணித எண்ணில் எழுதி அச்சிட்டு கோயிலிலேயே வழங்குகின்றனர். இந்த எந்திரத்தை தினந்தோறும் 41 முறை, 41 நாட்கள் தொடர்ந்து எழுதி பூஜித்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். பின்னர், இந்த கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, அன்னதானம் வழங்க வேண்டும்.

மேலும், இந்த எந்திரத்தில் உள்ள எண்களை எந்த வரிசையில் கூட்டினாலும் 40 என்று கூட்டுப்புள்ளியாக வரும். எண் கணிதப்படி 40 ராகுவுக்கு உரியதாகும். ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்பது வாக்கு. இந்தக் கோயில் மூலவரை வழிபட்டு, எந்திரத்தை பூஜை செய்தால், வழிபடுவோரின் அந்தஸ்து உயர்ந்து, பதவி, புகழ், பெருமை, பணி, ஊதியம், உயர்கல்வி என அனைத்தும் கிட்டும்.

மங்களாம்பிகையை வணங்கினால் திருமணப் பேறு, குழந்தைப் பேறு கிடைக்கும். மூலவரையும், எந்திரத்தையும், மங்கள செவ்வாயையும் பிரார்த்தனை செய்து வழிபட்டால், கட்சி, ஆட்சி, அரசு பணிகளில் உயர்பதவிகள் பெறலாம் என்பது ஐதீகம். (தொடர்புக்கு : கோயில் சிவாச்சாரியார்: மு.கார்த்திகேயன். செல்:9381044986)

அமைவிடம்: கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில் கடகம்பாடியில் இருந்து வடக்கே 3 கிமீ தொலைவிலும், கும்பகோணம்-காரைக்கால் சாலையில் ஸ்ரீகண்டபுரத்தில் இருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ளது.

SCROLL FOR NEXT