ஆனந்த ஜோதி

சூரியனுக்கு ஒளி கொடுத்த திருவாடானை ஆதிரத்னேஸ்வரர்

கே.சுந்தரராமன்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பூஜை நடைபெறும் கோயில்களில் இத்தலமும் ஒன்று. ஆதியாகிய சூரிய பகவான் நீல ரத்தினக் கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால் ஆதிரத்னேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். உச்சி காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது ஈசன் நீல நிறத்தில் தோன்றி அருள் பாலிப்பார். ஈசனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 199-வது தேவாரத் தலம் ஆகும்.

ஒரு சமயம் துர்வாச முனிவருடைய ஆசிரமத்தில், வருண பகவானுடைய மகன் வாருணி தங்க நேர்ந்தது. அவனுடன் அவனுடைய நண்பர்கள் சிலரும் தங்கினர். அச்சமயத்தில் துர்வாச முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். வாருணியின் நண்பர்கள் சிறுபிள்ளைத்தனமாக ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை அங்கும் இங்கும் வீசி, முனிவரின் தவத்தைக் கலைத்தனர்.

துர்வாச முனிவர் மிகவும் கோபமடைந்தார். வருணனின் மகனாக இருந்தும் சிறிதும் பொருந்தாத செயல் செய்த வாருணியை, அவன் தோற்றத்துக்கு சிறிதும் பொருந்தாத தோற்றத்தை உடைய ஆட்டின் தலையையும் யானையின் உடலையும் கொண்ட ஓர் உருவமாக மாற்றிவிட்டார்.

தன்தவறை உணர்ந்த வாருணி, செய்வதறியாது தவித்தான். அப்போது அவனது நிலை கண்டமுனிவர்கள் சிலர் அவனை சூரியனுக்கு ஒளி கொடுத்த தலத்துக்கு செல்லுமாறு பணித்தனர். மேலும் அத்தல ஈசனை வழிபட்டால் சாப விமோசனம் கிட்டும் என்றும் கூறினர். வாருணியும் அவ்வாறே இத்தலத்துக்கு வந்து தனது பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்னேஸ்வரரை வணங்கினான். ஈசனும் அவன் முன் தோன்றி அவனது சாபத்தை நீக்கினார். மேலும் ஒரு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார்.

வாருணியும் கலிகாலம் முடியும் வரை இத்தலம் தனது பெயரால் விளங்க வேண்டும் என்று வரம் கேட்டான். ஈசனும் அவ்வாறே அருளினார். அதன்படி இத்தலம் ‘ஆஜகஜ க்ஷேத்ரம்’ என்று ஆனது. ஆடு-ஆனை-புரம் என்பது காலப்போக்கில் திரு என்ற அடைமொழியோடு ‘திருவாடானை’ என்று ஆனது.

(இதன் மூலம் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் என்ன ஆகும் என்பது உணரப்படுகிறது.) இத்தலத்தில் மூர்த்தி, அம்பாள், தீர்த்தம் மூன்றுமே விசேஷம் கொண்டவை. அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றான்.

அதை எவ்வாறு உபயோகிப்பது என்று ஈசனிடம் கேட்கிறான். அப்போது திருவாடானைக்கு வருமாறு ஈசன் பணிக்க, அர்ஜுனனும் இத்தலத்துக்கு வந்து அதுகுறித்து அறிந்து கொள்கிறான். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, இங்கு சோமாஸ்கந்தரை ஸ்தாபித்தான் என்று கூறப்படுகிறது.

ஒரு முறை சூரிய பகவானுக்கு தன்னுடைய பிரகாசம் குறித்து மிகுந்த கர்வம் ஏற்பட்டது. ஈசனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க, நந்திதேவரால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனின் சுய ஒளி மங்கி விட்டது. இதனால் மனம் வருந்திய சூரிய பகவான் நந்திதேவரிடம் பரிகாரம் குறித்து வினவினார்.

நந்திதேவரும் சுயம்பு மூர்த்தியாக திருவாடானை கோயில் கொண்ட ஈசனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். அவ்வாறே சூரிய பகவானும் செயல்பட, ஈசனுக்கு ஆதிரத்னேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. உச்சிகாலத்தில் பாலால் இவருக்கு அபிஷேகம் செய்தால் நீல நிறத்தில் காட்சி அளிப்பார்.

சிநேகவல்லி அம்பாள் சுக்கிரனுக்குரிய அதிதேவதை என்பதால் இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத் தலமாகும். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 9-வது தலமாகும். இத்தலத்தின் கோபுரம் 9 நிலையுடன் 130 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு ஆகியோர் இத்தலத்து ஈசனை வழிபட்டுள்ளனர். அருணகிரியாரும் இத்தல முருகன் மீது பாடியுள்ளார்.

அக்னி நட்சத்திர வழிபாடு: அக்னி நட்சத்திர காலத்தில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சூரியன் தன்னுடைய ஒளியை மீண்டும் பெற்று பிரகாசமாகத் திகழ்வதால், இக்காலத்தில் அவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது பொருத்தமானது. சிவபெருமானை குளிர்விக்க சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

வைகாசி விசாக வசந்த விழா 10 நாட்களும், ஆடிப் பூரத் திருவிழா 15 நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இத்தல ஈசனை வணங்கினால் முன்செய்த தீவினை நீங்கும். அம்பாளுக்கு சுக்கிர ஹோமம் (1,008 அத்தி, அரசு, அகில், சந்தன சமீத்துகள், 1,008 லவங்கப் பட்டைகள் சேர்த்து) செய்தால் குழந்தை வரம் அருள்வாள்.

சுக்கிரதசை, புத்தி நடப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும். பாரிஜாத வனம், வள்ளி வனம், குகத்தி வனம், வில்வ வனம், முத்திரபுரம், மார்க்கண்டேய புரம், அகத்தீஸ்வரம், பதும புரம், கோமுத்தீஸ்வரம், விஜயேச்சுரம் என்ற பெயர்களிலும் இத்தலம் அழைக்கப் பெறும்.

அமைவிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 63 கிமீ தூரத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT