தமிழ் பஞ்சாங்கப்படி சூரியன் மேஷ ராசியில் உலவும் வெயில் காலமாக அக்னி நட்சத்திரம் கருதப்படுகிறது. சூரியன் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கார்த்திகை நட்சத்திரம் முழுவதும் வலம் வரும் காலகட்டமாக இது அமைகிறது. அறிவியல்படி சூரியன் ஒரு கோளாகக் கருதப்பட்டாலும், அதுவும் ஒரு விண்மீன் தான்.
அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன், பூமி ஆகியன சூரியனுக்கு அருகில் இருக்கும். பரணி நட்சத்திரம் 3-ம் பாதத்துக்கு சூரியன் வரும்போது அதிக வெப்பத்தைத் தருகிறது. பிறகு படிப்படியாக நகர்ந்து கார்த்திகை நட்சத்திரத்தில் உலா வரும்.
பரணி மூன்றாம் பாதத்துக்கு சூரியன் வரும் நாள் மே 4-ம் தேதியாக (சித்திரை 21) அமையும். மே 28-ம் தேதி (வைகாசி 14) இந்த நட்சத்திர சுற்று நிறைவு பெறும். இந்த 25 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது. பரணி 4-ம் பாதம் முதல் ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் உலா வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் 21 நாட்கள் மட்டுமே சூரியனின் தாக்கம் நீடிக்கும். கடைசி நேரத்தில் வெப்பம் குறையத் தொடங்கி சாரலுக்கான அறிகுறி தெரியும்.
சூரியனின் பயணத்தின் அடிப்படையில் தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவும், இடையில் உள்ள 7 நாட்கள் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவும் இருக்கும். வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு, இந்த வெடிப்புகளின் இடையில் இருந்து பூமிக்குள் இருந்து வெப்பம் வெளியாகும். வைகாசி மாத இறுதியில் பெய்யும் மழை, வயல்களின் வெடிப்பு வழியாக பூமிக்குள் சென்று வெப்பம் தணியும்.
பரணியும், கார்த்திகையும் வெப்பமான நட்சத்திரங்கள், தன் வெப்பத்தை தாங்கும் நட்சத்திரங்களை சூரியன் தேர்வு செய்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. பரணியின் அதிதேவதை துர்கை. இவள் கோபத்தை அனலாக கக்குபவள். கார்த்திகையின் அதிதேவதை அக்னி பகவான். இவரும் மிகுந்த கோபக்காரர்.
அடுப்பையும் எரிய வைப்பார். ஊரையும் கொளுத்துவார். அதனால் தான் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் காலம் எப்படி உண்டானது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் என்ற காடு அமைந்திருந்தது. அரிய வகை மூலிகைச் செடிகள் இருந்ததால், அப்பகுதியே மிகுந்த வாசம் நிறைந்ததாக இருந்தது.
அப்பகுதி நல்ல செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக, மழையின் அதிபதியாக விளங்கும் இந்திரன், அங்கு அடிக்கடி மழையை பொழியச் செய்தான். அந்த காட்டுக்கு அருகில் இருந்த யமுனை நதிக்கரையில் கிருஷ்ணரும், அர்ஜுனன் உள்ளிட்ட பாண்டவர்களும் வந்து நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் நீராடிவிட்டு கிளம்பும்போது, அந்தணர் வடிவில் வந்த அக்னி தேவன், “எனக்கு மிகவும் பசியாக உள்ளது. இந்தக் காட்டில் உள்ள பசிப்பிணி நீக்கும் மூலிகை மருந்து உண்டால், எனது பசி தீரும். இந்த வனத்துக்குள் செல்ல எனக்கு உதவி புரிய முடியுமா?” என்று கேட்டான்.
வந்திருப்பது அக்னி தேவன் என்பதை அறிந்த கிருஷ்ணர், அவனிடம், வந்த விபரம் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த அக்னி தேவன், “சுவேதசி என்ற மன்னருக்காக, துர்வாச முனிவர் நூறாண்டுகள் யாகம் செய்தார். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உண்டதால் என்னை மந்த நோய் தாக்கியுள்ளது.
அதை தீர்ப்பதற்கான மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் உள்ளன. நான் இந்த வனத்துக்குள் செல்ல முயற்சிக்கும்போது, இந்திரன் மழையை பொழிவித்து, என்னை நுழையவிடாமல் செய்கிறான்” என்று தன் நிலையை விளக்கினான்.
அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட இருவரும், தங்களுக்குத் தேவையான வில், அம்புகள் வேண்டும் என்று கேட்டனர். அக்னி தேவனும் அவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த காண்டீப வில் அம்புகளை அளித்தான்.
இதையடுத்து கிருஷ்ணர், “உனது பசிப்பிணியை தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த வனத்துக்குள் செல்லலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழையை பொழிய விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார். அக்னி தேவன் காட்டுக்குள் சென்று வனத்தை எரிக்கத் தொடங்கினான்.
இந்திரன் மழையை பொழிவித்தான். மழை பொழியாமல் இருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் ‘சரக்கூடு’ ஒன்றை கட்டி தடுத்தான் அர்ஜுனன். அக்னியும் முதல் 7 நாட்கள் வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கிடைத்ததை உண்டான்.
அடுத்த 7 நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உண்டான். அடுத்த 7 நாட்கள் மிதமாக உண்டு, நிறைவில் கண்ணன், அர்ஜுனனிடம் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னி தேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே (மூலிகை மருந்தை உண்டு தனது பசியை தீர்த்துக் கொண்ட காலகட்டமே) அக்னி நட்சத்திர காலமாக மாறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் முருகப் பெருமானை வழிபடுகின்றனர்.
திருத்தணி, பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய முருகன் கோயில்களில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. போர்க் கடவுள், பார்வதி - சிவபெருமானின் மைந்தன், ஸ்கந்தன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் முருகப் பெருமானைப் போற்றி, நல்வாழ்க்கை, வெற்றி, சிறந்த கல்வி, மன மகிழ்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வேண்டி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
பண்டைய காலத்தில் அக்னி நட்சத்திர காலம், சாதகமற்ற காலகட்டமாக கருதப்பட்டது. இக்காலத்தில் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்பதை நமது முன்னோர் கூறியுள்ளனர். இந்த காலகட்டத்தில் முக்கிய தொழில்கள் தொடங்குவது, வெளியூர் பயணம் செல்வது, நிதி பரிவர்த்தனை ஆகியவை மேற்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் பக்தர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்ட பிறகு, அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை கிரிவலம் மேற்கொள்கின்றனர். இம்மலை மருத்துவம் குணம் நிறைந்த மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படுவதால், இனிமையான நறுமணம், இயற்கை எழிலை ரசித்தபடி பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தையும் பெறுகின்றனர்.
கிரிவலம் மேற்கொள்ளும்போது, பெண் பக்தர்கள் கடம்ப மலர்கள் அணிந்து கொள்கின்றனர். இம்மலர், முருகப் பெருமானுக்கு உகந்த மலராக உள்ளதால், பக்தர்களுக்கு அவர், நல்வாழ்க்கை, செல்வம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் அருள்வார் என்பது ஐதீகம். அக்னி நட்சத்திர கால கட்டம் முழுவதும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த புனித நீர், பக்தர்களுக்கு பிரசாத தீர்த்தமாக வழங்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் குளிர்ந்த குணம் கொண்ட கிருஷ்ணரை வணங்கியும், சிவனுக்கு தாராபிஷேகம் (துவாரமுள்ள கலசத்தில் நீர் ஊற்றி அபிஷேகம் செய்தல்) செய்தும், முருகப் பெருமானுக்கு உரிய பாடல்கள் மற்றும் கதைகளைக் கேட்டும் மங்கல பலன்களை அடையலாம்.