தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 51-வது தேவாரத் தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். சப்தஸ்தான தலங்களில் ஒன்று.
சிலாது முனிவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது 4 கைகளுடன் பிறந்தார். குழந்தையை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, சிலாது முனிவர் அப்பெட்டியை மூடித் திறந்தார். உடனே இரண்டு கைகள் நீங்கி, வழக்கமான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுவிட்டு சென்றார் முனிவர்.
பரமேஸ்வரன் அந்தக் குழந்தைக்கு அம்பிகையின் பால், நந்தி வாய் நுரைநீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரிணி தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். இதன் காரணமாக இத்தல ஈசனுக்கு ஐயாறப்பர் என்ற பெயர் விளங்கிற்று, ஒரு சமயம் காசிக்குச் சென்ற இத்தல அர்ச்சகரால் குறித்த நேரத்துக்கு பூஜை செய்ய வரமுடியவில்லை. இவர் பூஜைக்கு வராத செய்தி மன்னர் காதுக்கு எட்டியது.
உடனடியாக மன்னர் இத்தலத்துக்கு வந்து பார்த்தபோது இங்கு அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசியில் இருந்து திரும்பிய அர்ச்சகரைக் கண்ட மன்னரும் பொதுமக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்த அர்ச்சகர் ஊரில் இல்லாத சமயத்தில் ஈசனே அர்ச்சகராக வந்து, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டதை அனைவரும் அறிந்தனர்.
திரு+ஐந்து+ஆறு - காவிரி மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. காசிக்குச் சமமாக கருதப்படும் இக்கோயிலில் முதலில் சூரிய வம்ச சக்கரவர்த்தி பிரியவரதனால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
முதலாம் நூற்றாண்டில் கரிகாற் பெருவளத்தான் என்ற சோழ பேரரசன் கல்லணை கட்டி, காவிரிக்கு கரை எழுப்பி, இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது ஐயாற்றை அடையும்போது தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. பின்னர் அந்த இடத்தை ஆராய்ந்தபோது அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திருஉருவங்களும், யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன. மேலும் அகழவே, நியமேசர் எனும் அகப்பேய் சித்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கரிகாற்சோழனுக்கு ஐயாறப்பரே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோயில் கட்டச் செய்தார்.
இத்தலத்தில் சுவாமி சந்நிதியை வலம் வரக் கூடாது என்று தடை உள்ளது. ஈசனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஒரு நம்பிக்கை இருப்பதால், யாரும் ஈசனின் ஜடாமுடியை மிதித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் சந்நிதியை வலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்து உரைக்கும் விதத்தில் தர்ம சம்வர்த்தினி என்ற பெயரைத் தாங்கி இத்தலத்தில் அம்பாள் எழுந்தருளியுள்ளாள்.
குடும்பத்தில் ஆண்கள் தர்மம் செய்வதைவிட பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்ற அறத்தை வலியுறுத்துவதால் அறம் வளர்ந்த நாயகி எனவும் அழைக்கப்படுகிறாள். னைத்து நாட்களும் சிறப்பானவையே என்பதை வலியுறுத்தும்விதமாக அம்பாளுக்கு அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
திருநாவுக்கரசர் பெருமான் இத்தலத்து ஈசனை வழிபட்டார். அதன் பயனாக அவருக்கு கைலாய தரிசனம் கிடைத்தது. மானசரோவர் ஏரியில் மூழ்கிய திருநாவுக்கரசர் பெருமான் இத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். இத்தல அம்பாள் திருமாலின் அம்சமாக கருதப்படுவதால் திருவையாறு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருமாலுக்கு கோயில்கள் அமையப் பெறவில்லை.
இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை திருமால் வழிபட்டுள்ளார். இதனால் இவருக்கு ஹரிஉரு சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். நவக்கிரகங்களில் இது சூரியனுக்குரிய தலமாகும். சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.
திருவையாறில் தை மாதம் பகுள பஞ்சமி தினத்தில் தியாகராஜ ஆராதனை விழா சிறப்பாக நடைபெறும். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, ராகு தோஷம் நீங்க இத்தல ஈசன் அருள்பாலிப்பார்.
அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 33 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 14 கிமீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 50 கிமீ தொலைவிலும் உள்ளது.