திண்டிவனம் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோயில், திருமண வரம் அருளும் தலமாக புகழப்படுகிறது. இத்தல அனுமன் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. திருமால் மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். ‘நரன்’ என்றால் ‘மனிதன்’. ‘சிம்மம்' என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத்தால் உலகம் நடுங்கியது.
இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட்சுமியை வேண்டினார். தாயார் பெருமாளின் சினம் தணியும் வகையில் ஆசுவாசப்படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது.
இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. லட்சுமிக்கு இக்கோயிலில் முக்கியத்துவம் என்பதால் ‘நரசிம்ம லட்சுமி’ கோயில் என்று இதற்கு பெயர் வந்தது.
கோயிலின் முன்பு நுழைவு வாயிலில் 5 நிலை ராஜகோபுரம் தெய்வீக சுதை சிற்பங்களுடன் உயர்ந்து காணப்படுகிறது, கொடிமரம், மகா மண்டபம், அர்த்தமண்டபத்தை கடந்து சென்றால் கருவறையில் நரசிம்மமூர்த்தி இடது தொடையில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதி புளியமர காடாக இருந்தது. வடமொழியில் திந்திருணி என்பது புளிய மரங்களை குறிக்கும். இதனால் முன்பு திந்திருணி வனம் என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி தற்போது திண்டிவனம் என வழக்கில் உள்ளது திந்திருணி வனத்தில் திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள், அங்கு தவம் செய்யும் முனிவர்களுக்கு இன்னல்கள் அளித்து வந்தனர். இது தொடர்பாக முனிவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். நாராயணனும் அரக்கர்களை அழிக்க வீரத்தின் சக்கரவர்த்தியாக திகழும் அனுமனுக்கு தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை அளித்து போருக்கு அனுப்பி வைத்தார்.
அனுமன் அரக்கர்களை அழித்து முனிவர்களின் தவத்துக்கு பாதுகாப்பாக இருந்தார். இத்தலத்தில் வடமேற்கில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு பின்புறம் சங்கு சக்கர சதுர்புஜ ஆஞ்சநேயராக அருள்பாலிக்கும் அனுமனை அமாவாசை தினம், சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டால், மன தைரியம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே இங்குள்ள உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரகலாதனுடன் அனுமனும் சேவை சாதிக்கிறார்.
கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் மேற்கு மூலையில் கனகவல்லி தாயார் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சித்திரையில் ஆஞ்சநேயருக்கு லட்ச தீப விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்மோற்ஸவ பெருவிழா பத்து தினங்களும் நரசிம்ம ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது