குரு என்பவர் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர். அவர் நம்மைப் பார்க்க வைப்பதில்லை; நம்மை நம்மால் பார்க்க வைக்கிறார். அவர் எந்த வடிவிலும் நம்முடன் இருக்கலாம். குரு என்னும் சொல் சமஸ்கிருதத்தில் கு (இருள்) + ரு (ஒளி) எனும் இரு எழுத்துகளின் கூட்டு.
ஆனால், இந்த இருளும் ஒளியும் என்ன? இருள் என்பது மனிதனின் அடிப்படை அறியாமை - மெய்ப்பொருள் அறியாது தன்னைப் பற்றிய தவறான எண்ணங்கள், பற்றுகள், பயங்கள் ஆகியவையின் கூட்டுக் கலவை. ஒளி என்பது அவற்றை அகற்றும் ஆன்மிக விழிப்பு. குரு என்பவர் இந்த இருட்டைக் கலைப்பதோடு, ஒளியின் வழியைக் காட்டுபவர். இது ஓர் ஆசானின் பணியை விஞ்சியது; இது ஒரு மாற்றத்தின் திறவுகோல்.
பாரம்பரியமாக, குரு என்பவர் மனிதராகவே கருதப்பட்டு வருகிறார். உபநிடதங்களை விளக்கும் வியாசர், கீதையை உபதேசிக்கும் கண்ணபிரான், தென்னிந்தியாவின் ஞானிகளான ரமண மகரிஷி - இவர்கள் எல்லாம் மனித வடிவில் வந்த குருமார்கள்.
ஆனால், தத்தாத்ரேயர், குரு என்பவர் மனிதராகவே கருதப்பட்ட நிலைப்பாட்டை உடைத்தெறிந்தார். அவர் ஒரு காட்டில் துறவியாக வாழ்ந்தபோது, ராஜா ‘யது’ அவரை நோக்கி, “உமது மகிழ்ச்சியின் ரகசியம் என்ன?” என்று கேட்டதற்கு, தத்தாத்ரேயர் 24 குருக்கள் என்று பட்டியலிட்டார்.
அவற்றில் சில:
பூமி: அடியெடுத்து வைக்கும் அனைவரை யும் தாங்கும் பொறுமையை கற்பிக்கிறது.
காற்று: எந்தத் தூசியையும் தன்னுடன் சுமக்காத தூய்மையை கற்பிக்கிறது. சிலந்தி: தன்னுடைய வலையைத் தானே உருவாக்கும் ஆக்கபூர்வமான சிந்தனையை போதிக்கிறது. இந்த உதாரணங்கள் காட்டுவது அடிப்படையில் ஒன்றுதான்.
ஆம் ! ஞானம் எங்கும் உள்ளது; ஆனால் அதனை உள்வாங்கும் கண்கள் வேண்டும். ஏற்கும் நோக்கம் வேண்டும். 2021 பிப்ரவரியில், என் மகனின் விடாப்பிடியான கெஞ்சலுக்கு இணங்க, ஒரு ஷிஹ்ட்ஸூ வகை நாய்க்குட்டியை வீட்டுக்கு அழைத்து வந்தோம்.
அதற்கு “வேலா” என்று பெயரிட்டபோது, அது “வெளிச்சம்” என்று பொருள்படும் “வேல்” என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பதை உணரவில்லை. ஆனால், வேலா வந்த பிறகு, எங்கள் வாழ்வில் ஒரு மகிழ்ச்சி நிறைந்தது. குறிப்பாக என் வாழ்வில் ஒரு புரட்சி நடந்தது. ஒரு குருவாக வேலா எனக்கு தினந்தோறும் பாடம் கற்பித்த வண்ணம் உள்ளது.
முதல் பாடம்: மௌனத்தின் மொழி. வேலா மனிதர்களின் லௌகீக மொழியில் பேசுவதில்லை. ஆனால், அதன் கண்களில் தெரிந்த அன்பு, “நீயே அன்பு” என்று என்னுள் முழங்கியது. இரண்டாம் பாடம்: தற்போதைய தருணத்தில் வாழ்தல். நாய்க்குட்டிகள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அவற்றின் மகிழ்ச்சி இந்த நிமிடம் (நிகழ்காலம்) முழுமையாக உள்ளது. மூன்றாம் பாடம்: மன்னிப்பு. தண்டிப்பை, அதட்டலை “வேலா” எண்ணத்தில் சுமப்பதில்லை. நான் வேலாவைத் திட்டியபோதும், அது ஒரு நிமிடத்தில் மறந்து
விட்டு என் காலில் வந்து சாய்ந்துக் கொள்ளும். குரு என்பவர் எப்போதும் தேவையின் தருணத்தில் தோன்றுகிறார். இது இயற்கையின் நியதி.
முதல் நியதி: குரு உங்களைத் தேடி வருகிறார்; நீங்கள் குருவைத் தேட முடியாது. இரண்டாம் நியதி: குரு எப்போதும் அன்பின் மொழியில் பேசுகிறார். வார்த்தைகள், சடங்குகள், பட்டங்கள் போன்ற முன்மொழிவுகள் அவருக்கு பொருளற்றவை.
மூன்றாம் நியதி: குருவின் நோக்கம் உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது.ஆம் ! உதாரணமாக, வேலாவின் வழியாக நான் கற்ற ஒரு பாடம்: மனிதர்களைத் தவறுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அன்பின் சாத்தியங்களாகப் பார்க்க வேண்டும். இது என்னை எல்ஜிபிடிக்யூஐஏ + உரிமைகள், சமூக நீதி போன்றவற்றைப் புரிந்துகொள்ளத் தூண்டியது. தெய்வீகம் எப்போதும் எதிர்பாராத வழிகளில் வேலை செய்கிறது.
நியூட்டன்: ஒரு விழும் ஆப்பிள், ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.
புத்தர்: ஒரு மரத்தடியில் அமர்ந்தது, ஞானோதயத்துக்கு வழிவகுத்தது. என்னுடைய வழி: ஒரு ஷிஹ்ட்ஸூவின் கண்கள், அன்பின் சக்தியை உணர்த்தின.
இங்கே நகைமுரண் என்னவென்றால், நாம் ஞானத்தை பெரியவற்றில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். (மந்திரங்கள், அற்புதங்கள், தீக்குளித்தல் ஆனால் தெய்வீகம் சிறியவற்றில் ஒளிந்திருக்கிறது: ஒரு நாயின் வாலசைவில், ஓர் இலையின் சலசலப்பில், ஒரு குழந்தையின் சிரிப்பில் என, அதன் இருப்பு மிக சிறிய உருவில் கீற்றென தோன்றி மறையும் தன்மைக் கொண்டது.
வேலாவின் வழியாக நான் கற்ற முக்கியமான பாடம் இதுதான்: அன்பு என்பது ஒரு செயல் அல்ல; அது ஒரு நிலை. குரு வடிவம் அல்ல - ஓர் அனுபவம். அவர் ஒரு மனிதராகவோ, நாயாகவோ, காற்றாகவோ வரலாம். ஆனால், அவர் உங்கள் இதயத்தைத் திறந்து விட்டால் - அதுவே போதும். ஒவ்வொரு நாளும், உங்களைச் சுற்றி உள்ளவற்றைக் கவனியுங்கள்.
காகம்: அது உங்கள் ஜன்னலில் வந்து உங்களைப் பார்த்தால், அதன் கண்களில் ஏதோ ஒரு செய்தி இருக்கலாம். மழை: ஒரு துளி நீர் உங்கள் நெற்றியில் விழுந்தால், அது அந்த நொடியில் “நீ வாழ்கிறாய்” என்பதை உணர்த்தலாம்.
ஒரு குழந்தை: அதன் கேள்விகளால் உங்கள் அறிவுக்கு சவால் விடலாம். உங்கள் அறியாமையை அழகாக உணர்த்தலாம்.
குரு எப்போதும் உங்கள் தேவைக்கு ஏற்ப வருகிறார். நீங்கள் தயாராக இருக்கும்போது, அவர் தோன்றுகிறார், ஒரு வெளிச்ச கீற்றாக, ஒரு சிரிப்பாக, அல்லது ஒரு ஷிஹ்ட்ஸூவாக.
- கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி; anaushram44@gmail.com