ஆனந்த ஜோதி

அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்த ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள்

முனைவர் இரா.இராஜேஸ்வரன்

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் அண்மைக் காலத்தில் பீடாதிபதியாக அருளாட்சி புரிந்தவர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள். குருவுக்கு உண்டான லட்சணத்துடன், சர்வகாலமும் பரமானந்தத்தில் திளைத்து உலக பற்றுகளை முற்றிலும் துறந்து, வேத நெறி வழுவாது, தமது 13-வது வயதிலேயே துறவறம் ஏற்று 35 ஆண்டு காலம் மடத்தை செவ்வனே வழிநடத்திய மகான் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆவார்.

ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் சிறந்த தவயோகி. வேத சாஸ்திரம் மட்டுமல்லாது, அறிவியல், தொழில் நுட்பத்தில் தனிப்பட்ட முறையில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அன்றைய காலத்தில் உலகில் சிறந்த விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனைப் போன்று தமிழகத்தில் சிறந்த விஞ்ஞானியாகவும், புதிய கண்டுபிடிப்பாளராகவும் திகழ்ந்தவர் ஜி.டி. நாயுடு (1893 - 1974). இவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகளிடம் தனிப்பட்ட முறையில் மரியாதையும், பக்தியையும் வைத்திருந்தார்.

காரணம், இருவருக்கிடையே ஆன்மிகத்தை தாண்டி அறிவியல், தொழில்நுட்பத்தில் இருந்த ஆர்வமும், தேடுதலும்தான். முன்பு சிருங்கேரியில் துங்கா நதியை படகில் கடந்துதான் நரசிம்ம வனத்துக்கு செல்லமுடியும். மலைப் பிரதேசமான சிருங்கேரியில் மழை அதிகம் பெய்தால் துங்கா நதியை படகில் கடக்க முடியாமல் பக்தர்கள் சிரமப்படுவர். மலையில் பாயும் நதிக்கு நடுவே பக்தர்களின் நன்மைக்காக ஒரு நடைபாதை பாலத்தை கட்டலாம் என ஆச்சார்யர் விரும்பினார்.

இது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்பதால், கட்டிடக்கலை படித்த பொறியாளர்களே சற்று அஞ்சினர். சிமென்ட் காங்கிரீட் நடைபாதை பாலத்தை கட்டி தந்த கம்மான் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்களை அடிக்கடி வரவழைத்து பாலம் கட்டுவதற்கான தொழில்நுட்ப விஷயங்களை கலந்தாய்வு செய்து, தனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மலைப் பிரதேசம் என்பதால் மண் ஆராய்ச்சி, சுற்றுப்புற சூழல் போன்றவற்றை ஆராய்ந்து ஆச்சார்யரின் ஆசியுடன் பிப்ரவரி 1987-ல் பாலத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இடையில் இணைப்பே இல்லாமல், ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை தொடர்ச்சியாக பாலம் பாதுகாப்புடன் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டது தனிச்சிறப்பு. காங்கிரீட் அடித்தளம் 60 அடி உயரத்தில், 110 மீட்டர் நீளமும், 8 அடி அகலத்தில் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு மே 1990-ம் ஆண்டு பாலம் திறக்கப்பட்டது.

துங்கா நதியில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி பாலத்தை கடந்து செல்கின்றனர். ஆச்சார்யரின் தொலை நோக்கு அறிவியல், தொழில் நுட்பத்துக்கு இது ஒரு சான்றாகும்.தற்போதைய பீடாதிபதி யானமகா சந்நிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தம் குருநாதர் பெயரில் ‘வித்யா தீர்த்தசேது’ எனும் பெயரை இப்பாலத்துக்கு சூட்டி மகிழ்ந்தார். ‘ஆச்சார்ய தேவோபவ’ என்கிற உபநிஷத்து வாக்கியத்தின்படி குருவையே தெய்வமாக நினைத்து வழிபட வேண்டும்.

SCROLL FOR NEXT