ஆனந்த ஜோதி

ஞானமே உருவான மெய்ப் பொருள் ஆதி சங்கரர்

தெ. சுமதி ராணி

இந்து சமயத்தின் மிக முக்கியமான அடிப்படை நூல்களான பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை உணர்த்தும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் ஆதிசங்கரர். இந்து மதத்தின் சிற்பி என்று அறியப்படும் இவர், நான்கு திசைகளிலும் மடங்களை நிறுவி, இந்து தர்ம சாஸ்திரங்களை போதிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

கேரள மாநிலத்தில் உள்ள ‘காலடி’ என்ற ஊரில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியின் மகனாக வைசாக சுக்ல பஞ்சமியில் ஆருத்ரா நட்சத்திரத்தில் அழகும் அருளும் நிறைந்த ஞானக் குழந்தையாக சங்கரர் அவதரித்தார். இளம் வயதில் கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதரிடம் வேதாந்த, அத்வைத தத்துவங்களைப் பயின்ற சங்கரர் பின்னாட்களில் மெய்ஞான வல்லுநராகத் திகழ்ந்தமையால், ‘ஆதிசங்கர பகவத் பாதர்’ என்று அழைக்கப்பட்டார்.

சங்கரரின் இளம் வயதிலேயே தந்தை இறைவனடி சேர்ந்துவிட்டார். ஏழு வயது நிரம்பும்போதே சங்கரர் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். இளம் வயதிலேயே துறவறம் ஏற்க ஆதிசங்கரர் விருப்பம் கொண்டு அதை தன் தாயிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு அவரின் தாய் உடன்படவில்லை.

ஒருநாள்,அம்பா ஆற்று படித்துறையில் காலை வைத்தபோது, முதலை ஒன்று ஆதிசங்கரர் காலைப் பற்றி இழுக்கிறது. அவரது தாயார் பதறி அழுகிறார். சங்கரர் சொல்கிறார், "தாயே, முதலை என்னைக் கவ்வியுள்ளது இப்பிறவியின் செயல். துறவு என்பது மறுபிறவிக்கு சமம். துறவு பூண எனக்கு நீங்கள் உத்தரவு கொடுத்தால் உடனடியாக நான் மறுபிறவி எடுத்து விடுவேன்.

இந்த முதலையும் ஓடி விடும். இல்லையேல் முதலைக்கு நான் இரையாவேன்” மகன் உயிருடன் இருந்தால் போதும் என்றெண்ணிய அன்னை, மகன் துறவு பூண சம்மதிக்கிறார். சிறுவன் சங்கரர், 8 திசைகளையும் சாட்சியாக வைத்து துறவு பூண்ட கணமே முதலை அவர் காலை விட்டு ஓடி விடுகிறது.

தாயின் மனப் போராட்டத்தை உணர்ந்த சங்கரர், “நான் எங்கிருந்தாலும் தவறாமல் உன் அந்திமக் காலத்தில் உன் அருகில் இருப்பேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு கிளம்புகிறார். நர்மதை நதிக்கரையில் கோவிந்த பகவத் பாதர் என்ற ஞானியிடம் வந்து சேர்கிறார் ஆதிசங்கரர். அவருக்கு தீட்சை வழங்கிய குருநாதர், “காசி மாநகருக்கு செல். அங்கு வியாஸ மகரிஷி அருளியுள்ள அத்வைதத்தை உரைக்கும் பிரம்ம சூத்திரத்தை விளக்கி பாஷ்யம் செய்" என்று பணித்து அனுப்பிவைத்தார்.

சங்கரரும், காசியில் மணிகர்ணிகை முக்தி மண்டபத்தில் அத்வைத சித்தாந்தத்தை முழங்க ஆரம்பித்தார். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல என்று கூறப்படுவது அத்வைதம் ஆகும் (பிரம்மம் ஒன்றே. பிரம்மத்தில் இருந்து ஆத்மா வேறுபடாத நிலை). வாதங்களில் அனைவரையும் வென்றார்.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் 4 திசைகளில் (4 வேதங்களை அவற்றின் மகா வாக்கியங்களை குறிக்கும் வகையில்) 4 பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார். கிழக்கு திசையில் புரியில் கோவர்தனப் பீடம் (பிரக்ஞானம் பிரம்மம் – அறிவுணர்வே பிரம்மம் - ரிக் வேதம்), தெற்கு திசையில் சிருங்கேரியில் சாரதா பீடம் (அஹம் பிரம்மாஸ்மி – நான் பிரம்மம் - யஜூர் வேதம்), மேற்கு திசையில் துவாரகையில் துவாரகை காளிகா பீடம் (தத்துவமசி – பிரம்மமே நீ ஆகிறாய் - சாம வேதம்), வடக்கு திசையில் ஜோஷி மடம் (அயமாத்மா பிரம்மம் – இந்த ஆத்மாவே பிரம்மம் - அதர்வண வேதம்) ஆகிய 4 அத்வைத பீடங்களை நிறுவி, தனது சீடர்களான பத்மபாதர், சுரேஷ்வர், அஸ்தாமலகர், தோடகர் ஆகியோரை ஒவ்வொரு பீடத்துக்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.

தாயின் அந்திமக் காலத்தை உள்ளுணர்வால் அறிந்து, அவரது இறுதி நேரத்தில் வந்து சேர்ந்தார் சங்கரர். தாயை மடியில் கிடத்திக் கொண்டு, தாயின் அருமை, பெருமைகளை விளக்கும் ‘மாத்ரு பஞ்சகம்’ என்ற ஸ்லோகத்தைப் பாடினார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் என்ற வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

ஸ்ரீசக்கர வழிபாட்டை நடைமுறைப்படுத்தினார். சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், ஆத்மபோதம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் விளக்கவுரை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. நிறைவில் தனது 32-ஆவது வயதில் சமாதி அடைந்தார்.

- sumathiranid@gmail.com

SCROLL FOR NEXT