உலக மனித விழுமியங்கள் தினமாகவும், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனை தினமாகவும் ஏப். 24-ம் தேதி உலகம் முழுவதும் நினைவுகூரப்பட்டு, மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, உபதேச மொழிகள் அனைத்தும் மக்களை வழி நடத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இவரது நூற்றாண்டு வைபவமும் சேர்ந்து கொண்டதால், கொண்டாட்டங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
எண்ணிலடங்கா அற்புதங்கள், தெய்வீக ஞானம் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்ட பாபா, ஒற்றுமை, கருணை, ஒருமைப்பாடு, அன்பு, உண்மை, சாந்தி, தர்மம், அகிம்சை உள்ளிட்ட மனித விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் உபதேச மொழிகளை உலகுக்கு அளித்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் எண்ணற்ற பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக, பாபாவின் திறமைகள், நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்தும் திறன், எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பு, ஒவ்வொருவர் மனதிலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றைக் கண்டு அவர்கள் வியந்துள்ளனர். அவர் அவதாரத்தின் உண்மையான நோக்கம், உலகில் தெய்வீக அமைதியின் மூலம் புதிய சகாப்தத்தை தொடங்கி, அனைவரது இதயங்களிலும் தெய்வீக குணங்களை நிறுவுவது ஆகும்.
சாதி, சமயம், மதம் பாராமல் மக்களை ஒன்றிணைத்து அவர்கள் மத்தியில் தெய்வீக சூழலை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டினார். சத்ய சாய்பாபா, தனது முன்னோடியான ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் உணர்வுகளை எதிரொலித்தார். ஒருவருக்கொருவர் சகோதர உணர்வுடன், எப்போதும் உதவ வேண்டும், யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு மற்றும் சுய உணர்தல், மனிதகுலம் தனது பற்றுகளைக் களைந்து, இறையை நோக்கி பயணிக்க உதவும்.
‘ஒன்று பட்ட உலகம்’ என்று வலியுறுத்தினார் பாபா. இச்செய்தி, எல்லை மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஆழமாக எதிரொலித்தது. ஒவ்வொருவருக்கும் கல்வியின் அவசியத்தை உணர்த்தினார். இதனால் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். ‘எஜுகேர்’ என்ற கல்விக்கான தனித்துவ அணுகுமுறையை வலியுறுத்தினார்.
வெறும் கல்வி சாதனையாகவோ அறிவுசார் நாட்டம் பற்றியதாகவோ இல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனிடமும் உள்ள தெய்வீகத் தன்மையை வெளிக்கொண்டு வருவதாக இது அமைந்துள்ளது. இன்றுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்ரீ சத்ய சாய் இலவச கல்வி நிறுவனங்கள் மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் தன்னலமின்றி நாட்டுக்கு சேவை செய்வது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 99 ஸ்ரீ சத்ய சாய் பள்ளிகளும், 28 நாடுகளில் 39 பள்ளிகளும் இயங்குவது தனிச்சிறப்பு.
பால விகாஸ் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைப் பண்பு, சுய ஒழுக்கம், தார்மீக பொறுப்பு உள்ளிட்டவற்றுக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. பள்ளிகளிலும், உண்மை, அன்பு, அமைதி, சரியான நடத்தை, அகிம்சை போன்றவற்றை உள்ளடக்கிய கல்விமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நவீன வாழ்க்கையின் சிக்கல்களை மட்டும் கடந்து செல்லாமல், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணர்ந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாக, 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலப் பாதுகாப்பு, மனநலம், ஆன்மிக நல்வாழ்வு ஆகியவற்றை ஒருவருக்கு அளிப்பதில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, முன்னோடியாகத் திகழ்கிறார்.
எண்ணற்ற சுகாதார திட்டங்கள், நூற்றுக்கணக்கான இலவச மருத்துவமனைகள், நவீன மருத்துவ சிகிச்சைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள், நடமாடும் கிளினிக்குகள், ஆன்மிக நடைமுறைகளை ஒருங்கிணைத்து ஸ்ரீ சத்ய சாய்பாபா மருத்துவத் துறையில் ஆற்றியபங்கு அளப்பரியது.
இந்த அமைப்புகள் உலகளவில் நிறுவப்பட்டு, சாதி, மதம், பொருளாதார நிலை என்று எதையும் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் இலவச மருத்துவ சேவையை வழங்குகின்றன. புட்டபர்த்தி, பெங்களூருவில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள், இதய நோய், நரம்பியல், சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சைகளை உலகத் தரத்தில் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
பாபாவின் சமூக சேவை (சமூக அக்கறை, சமூக பராமரிப்பு) பெரிதும் போற்றப்படுகிறது. சுத்தமான குடிநீரின் அவசியத்தை வலியுறுத்தி, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு (குறிப்பாக சென்னையில்) ஆகிய மாநிலங்களில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில், பல கிராமங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
சேவை என்பதை ஒரு வழிபாட்டுச் செயலாகவே கருதிய பாபா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத் தன்மை இதன் மூலம் வெளிப்படும் என்பதை உணர்ந்திருந்தார். பாபாவின் எண்ணங்களை, அவரது பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள நாராயண சேவா மூலம் பாபா பக்தர்களால், தேவைப்படும் இடங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச உணவு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏப். 24-ம் தேதி, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மஹா ஆராதனை தினமாக அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் உபதேச மொழிகள், லட்சக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து, அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையையும், பிறர் மீதான அன்பையும் வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட புகழ் அல்லது அங்கீகாரத்துக்காக பாபா இப்பணிகளை செய்யவில்லை. பாபாவின் நூற்றாண்டு விழா நெருங்கி வருவதால், அவரது வாழ்க்கை, தன்னலமற்ற பணியை போற்றும் வகையில் நவம்பர் மாதத்தில் புட்டபர்த்தியில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட் சார்பில் நடைபெற்று வருகின்றன. அனைவரையும் நேசி, அவர்களுக்கு சேவை புரி, அனைவருக்கும் உதவி செய், யாரையும் புண்படுத்தாதே என்பதே ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தாரக மந்திரமாக இருந்தது.