மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பச்சைபெருமாள் நல்லூர் மங்களாம்பிகை சமேத விஷ்ணுவல்லபேஸ்வரர் கோயில் சனிதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. பரமேஸ்வரன் திருநாமத்துடன் விஷ்ணுவின் திருநாமமும் சேர்ந்துள்ளதால், இத்தலம் பெரிதும் போற்றப்படுகிறது.
மகாவிஷ்ணு சிவ தத்துவங்களை அறிந்து கொள்வதற்காக, சிவலிங்கத்தை பூஜை செய்து தவம் இருக்க எண்ணினார். அதற்கு தகுந்த இடத்தை தேடிக் கொண்டிருந்தபோது, இந்த ஊரைத் தேர்ந்தெடுத்து வில்வ மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் நடத்தி, தவம் இருந்தார். பரமேஸ்வரன் குருரூபமாக வந்து மகாவிஷ்ணுவுக்கு சிவ தத்துவங்களை எடுத்துரைத்தார். இதனாலேயே இவ்வூருக்கு பச்சை பெருமாள்நல்லூர் என்று பெயர் கிட்டியதாக கூறப்படுகிறது.
சனிதிசையின்போது, மகாவிஷ்ணு பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அப்போது இங்கு தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வரனை வணங்கி தோஷ நிவர்த்தி அடைந்தார். மகாவிஷ்ணுவுக்கு சனி தோஷம் நிவர்த்தியான தலம் இது என்பதால், பக்தர்கள் கூட்டம் எப்போதும் இங்கு காணப்படுகிறது.
ஒரு நிலையில் சிறிய அளவிலான ராஜகோபுரம் அமைந்துள்ளது. இதில் லிங்க வடிவிலுள்ள மகேஸ்வரனை மகா
விஷ்ணு பூஜிப்பது போல சுதை சிற்பம் காணப்படுகிறது. கொடிமரத்தருகே விநாயகர், பலிபீடம், நந்திதேவரை தரிசிக்க
லாம். மகா மண்டபத்தின் இடது பக்கம் தென்திசை நோக்கி மங்களாம்பிகை 4 திருக்கரங்களோடு (மான், பத்மம், அப்ய வரத ஹஸ்தம்) அருள்பாலிக்கிறார்.
கருவறையில் கிழக்கு நோக்கி பரமேஸ்வரன் பாணலிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆடிப்பூர தினத்தில் மங்களாம்பிகைக்கு வளையல் சாற்றி, முளை கட்டிய பச்சைப்பயிறை அவள் மடியில் கட்டி பூஜை செய்யப்படுகிறது. அன்று மாலை முளைகட்டிய பச்சைப் பயிறுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தம்பதிக்கு கொடுக்கப்படும். குழந்தை வரம் பெற இந்த சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை சனி ஹோரையிலும், சனிக்கிழமைகளிலும் எள் தீபம் ஏற்றி, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழையாறு சாலையில் சீர்காழியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.