திருமால், மக்களை நல்வழிப்படுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட பூமியில் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்கிற பத்து அவதாரத்தை (தசாவதாரம்) எடுத்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் திருமால் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தன்னிடம் முழுமையான பக்தியுடன் சரணடைந்தவர்களின் வாழ்க்கையை செழிப்படையச் செய்து அபயம் அளிக்கும் தன்மையை உடையவன் இறைவன். வைணவ நெறியில் முழு முதற்கடவுளான நாராயணன் என்கிற திருமாலின் திருவடியைச் சரணடைய வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் ‘பெரிய திருமொழி’ யில் பாடியுள்ளார்.
திருமாலைப் பற்றி நம்முடைய தொன்மையான தொல்காப்பியத்தில் ‘மாயோன் மேய காடுறையுலகம்’ எனப் பாடப்பட்டுள்ளது. இதில் மாயோன் என்பது திருமாலைக் குறிக்கிறது. அதேபோல், மதுரைக் கண்ணங்கூத்தனார் எழுதிய ‘கார்நாற்பது’நூலில் ‘பொரு கடல் வண்ணன் என திருமாலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பாரத தேசத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த அயோத்தி நகரில் அவதரித்த ஸ்ரீராம பிரானைப் பற்றி தமிழகத்தைச் சேர்ந்த கம்பன், சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி என்பவரால் எழுதப்பட்ட ஆதிகாவியமான ராமாயணத்தைத் தழுவி தமிழில் கம்ப ராமாயணத்தை ஆறு காண்டங்களாக பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடினார். ஏறத்தாழ 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பருக்கு முன்பே பண்டைய சங்க இலக்கியங்களில் ராமரைப் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டன.
மானிடத்தின் ஒழுக்கப் பண்புகளை உலகுக்கு உணர்த்த, ‘தந்தை சொல்லே மந்திரம்’ என்பதை நிரூபிக்க, பெண்மையின் கற்பு நெறியை உயர்த்திக் காட்ட என்று பல அறச்செயல்களை செய்துக் காட்டத்தான் தெய்வத் தன்மையுடைய திருமால் தசரதருக்கு மகனாக சித்திரை மாதம் வளர்பிறை நவமி, புனர்பூசம் நட்சத்திரத்தில் ஸ்ரீராம பிரானாக அவதரித்தார்.
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஊன்பொதி பசுங்குடையார் என்கிற புலவர், ‘தென் பரதவர் மிடல்சாய’ எனத் தொடங்கும் பாடலில் (378 பாடல்) ராமனின் மனைவியான சீதாதேவி பரிசாக அளித்த ஆபரணங்களின் மதிப்பு தெரியாமல், அதை எங்கு எப்படி அணிய வேண்டும் என தெரியாமல் மாறி, மாறி குரங்குகள் அணிந்து கொண்டது போன்று தனது உறவினர்களின் செயல் இருப்பதாக உவமையுடன் பாடியுள்ளார்.
மற்றொரு சங்க நூலான அகநானூறு நூலில் மதுரைத் தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார் என்கிற தமிழ்ப் புலவர், ‘கொடுதந் திமிற் பரதவர் வேட்டம்’ எனத் தொடங்கும் பாடலில், ‘ராமர் இலங்கை மீது போர் புரிவது பற்றி மனதளவில் யோசனை செய்து கொண்டு இருந்த சமயத்தில் மரத்தின் மீது இருந்த பறவைகள் கீச்சு குரலுடன் ஆரவாரம் செய்தன. பறவைகளின் சத்தத்தை அடக்க ராமர் மறை (வேத) மந்திரத்தை ஜபித்தார்’ என்கிற பொருளில் பாடியுள்ளார்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘சிலப்பதிகாரம்’ நூலில் இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவை பகுதியில் ‘மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்’ எனத் தொடங்கும் பாடலிலும், ஊர்காண் காதை பகுதியில் ‘தாதை ஏவலின் மாதுடன் போகிக்’ எனத் தொடங்கும் பாடலிலும், புறஞ்சேரியிருந்த காதை எனும் பகுதியில் ‘பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்’ எனத் தொடங்கும் பாடலிலும் ராமபிரானைப் பற்றிய செய்திகளைப் பாடியுள்ளார். மணிமேகலை நூலில் சீத்தலை சாத்தனார் ‘நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி’ என்கிற பாடலில் சேதுவில் பாலம் கட்டியதைப் பற்றி பாடியுள்ளார்.
விபீஷணன் சரணாகதி அடைந்தபோது ராமபிரானால் சொல்லப்பட்ட ஸ்லோகத்தில்,
‘ஸக்ருதேவ ப்ரபந்தாய தவாஸ்மீ இதி ச
யாசதே! அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத்
வ்ரதம் மம!!
எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது தன்னிடம் சரணாகதி அடைந்தவனை எப்பொழுதும் காப்பாற்றுவேன் எனக் கூறி இருப்பதால் ஸ்ரீ ராமநவமி புனித தினத்தில் (6.4.25) ராமபிரானை வழிபட்டு அவரின் தாமரை திருவடியைப் பற்றுவோம். இதே போன்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன்,
‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம்
சரணம் விரஜ
அஹம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுச:’ (18.66)
என அருளியுள்ளார். தன்னிடம் சரணடைந்தவர்களின் பாவங்களைப் போக்கி காப்பேன் என்ற பொருளில் கூறியிருக்கிறார். ‘மாசுச’ என்றால் கவலைப்பட வேண்டாம் என்று பொருள். காஞ்சிபுரம் அத்திவரதர் பெருமாள் திருக்கரத்தில் ‘மாசுச’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே
மனோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம
வராநநே!!