சத்திய லோகத்தில் பிரம்மதேவர் தனது வழிபாட்டுக்காக, ஸ்ரீமன் நாராயணனின் விக்கிரகம் வேண்டி தவம் இருந்தார். அதன் பயனாக, காயத்ரி விமானத்தின்கீழ் ஸ்ரீரங்கநாத பெருமாள் சயனித்திருக்கும் விக்கிரகம் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியது. அதற்கு நித்ய திருவாராதனம் செய்து பிரம்மதேவர் வழிபட்டு வந்தார். சூரிய வம்சத்து அரசர்கள் அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
இவர்களில் இக்ஷ்வாகு என்ற அரசன், பிரம்மதேவரை நோக்கி தவமிருந்து, அவர் வழிபட்டு வந்த ஸ்ரீரங்கநாத பெருமாள் விக்கிரகத்தை பரிசாகப் பெற்றான். அயோத்தியில் சரயு நதியின் நடுவேயுள்ள தீவில், அந்த விக்கிரகத்தை வைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தான். இக்ஷ்வாகுவால் பிரம்ம லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்ததால், ஸ்ரீரங்கநாத பெருமாளை, இக்ஷ்வாகு குலதனம் (இக்ஷ்வாகுவின் சொத்து) என்று அழைப்பார்கள்.
இக்ஷ்வாகுவின் வம்சத்தில் பிற்காலத்தில் தசரத சக்கரவர்த்தி பிறந்தார். அயோத்தியின் மன்னராக முடிசூடிய அவர், குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். இந்த யாகத்துக்கு, பரத கண்டம் முழுவதும் உள்ள அரசர்கள் வரவேற்கப்பட்டனர். உறையூர் சோழமன்னன் தர்மவர்மாவும், அந்த யாகத்தில் பங்கேற்க அயோத்தி சென்றார்.
அங்கு சரயு நதியின் நடுவே இருந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை தரிசித்தார். அவரது அழகில் தன்னை மறந்தார். அயோத்தியில் உள்ள ஸ்ரீரங்கநாத பெருமாள் சோழ நாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டி, காவிரிக்கரையில் தர்மவர்மா கடும் தவம் இருந்தார். பெருமாளும் அவர் முன் தோன்றி, உமது விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று வரம் தந்தார்.
இதனிடையே, தசரத சக்கரவர்த்திக்கு திருப்புதல்வராக ஸ்ரீராமர் அவதரித்தார். சரயு நதிக்கு நடுவே இருந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை ஸ்ரீராமரும் வழிபட்டார். பிற்காலத்தில் இலங்கை யுத்தம் முடிந்து, அயோத்தியில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது, இலங்கை அரசன் விபீஷணனுக்கு, தமது குலத்துச் சொத்தான ஸ்ரீரங்கநாதரை பரிசாக அளித்தார் ஸ்ரீராமபிரான். அதனை விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், காவிரியாற்றின் நடுவேயுள்ள ஸ்ரீரங்கத் தீவில் பள்ளிகொள்ள ஸ்ரீரங்கநாதர் திருவுள்ளம் கொண்டார். பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் நாளில் தெற்கே இலங்கையை நோக்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். இதனால், இந்நாளுக்கு ‘பெரிய பெருமாள் ரேவதி’ என்று பெயர்.
இதையறிந்த தர்மவர்மா தமது வேண்டுதல் நிறைவேறியதை எண்ணி பூரித்தார். ரேவதி நாளில் பெருமாள் இங்கு வந்தாலும், அன்றிலிருந்து 4-வது நாளான பங்குனி ரோகிணி நட்சத்திரம் நாள் தொடங்கி 10 நாட்கள் விழா நடத்தினார் மன்னர் தர்மவர்மா.
அந்த வழக்கப்படி, தற்போதும், ஸ்ரீரங்கநாத பெருமான் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளிய திருவிழா பங்குனி ரோகிணியில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் இவ்விழாவுக்கு ஆதி பிரம்மோற்சவம் எனப் பெயர். நடப்பாண்டு ஏப். 3-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
- மு.இசக்கியப்பன்