ஆந்திராவில் ஸ்ரீராமபிரானுக்கு பல கோயில்கள் இருந்தாலும், வடக்கு பார்த்த மூலவர் உள்ள ஒரே கோயில், 500 ஆண்டு பழமை வாய்ந்த வாயல்பாடு ஸ்ரீபட்டாபிராமர் கோயில்தான்.
ஒரு காலத்தில் வாவில் மரங்கள் அதிகம் வளர்ந்ததால் வாவில் பாடு என முதலில் இவ்வூர் அழைக்கப்பட்டு இன்று திரிந்து வாயல்பாடு என மாறியுள்ளது. ஸ்ரீராமபிரான் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் முடிந்ததும், ஜாம்பவான், ராமபிரானிடம் சொல்லிக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி புறப்பட்டார். வழியில் ஓர் எறும்பு புற்றிலிருந்து ஒளி வந்தது. அந்த மண்புற்றை ஜாம்பவான் உடைத்துப் பார்த்தபோது ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டி உள்ளிட்டோரின் விக்கிரகங்கள்கிடைத்தன.
உடனே அவருக்கு அதே இடத்தில் கோயில் எழுப்பும் எண்ணம் எழுந்தது. அனைத்து விக்கிரகங்களையும் ஒழுங்குபடுத்தியபோது அது ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலம் என அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து, ஒரு சிறு கோயில் எழுப்பி, வழிபாடு செய்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார் ஜாம்பவான்.
அதன் பின் பல காலம் இக்கோயில் கவனிக்கப்படாமல் இருந்து, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஊருக்கு வால்மீகிபுரம் என்ற பெயரும் உண்டு. இங்கு வால்மீகி ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்ததாகவும், அப்போது அருகில் உள்ள ஒரு குன்றில் அமர்ந்துதான் ராமாயணத்தை எழுதினார் எனவும் உள்ளுர் வாசிகள் கூறுகின்றனர்.
இந்த குன்று பெயர் வீரன்ன கௌண்டா எனவும், அங்கு தற்போது வீரபத்திரர் கோயில் உள்ளது என்றும் அறிகிறோம். நான்கு நிலை கொண்ட ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபம் அருகே உள்ள கருவறையில் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமபிரான் - சீதாபிராட்டி திவ்யதம்பதியை தரிசிக்கலாம்.
ராமருக்கு இடதுபுறம் லட்சுமணர், சற்று பின்னால் சாமரம் வீசியபடி சத்ருகுணன், சீதைக்கு சற்று பின்னால் சாமரம் வீசியபடி பரதனும் உள்ளனர். வடக்கு பார்த்தபடி, தனது வலது கையில் கிராச முத்திரையை ஏந்தியும் இடது கையால் வரத ஸ்தம்பத்தை வழங்கிய படியும் ராமபிரான் அருள்பாலிக்கிறார். வெளியில் ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதி உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்த பகுதியின் கலெக்டராக இருந்த ஹேஸ்டிங்க்ஸ் கடும் வயிற்று வலியால் துடித்தார். அப்போது தனது உடல் உபாதையை நீக்கும்படி ராமபிரானிடம் வேண்ட, அவரது உபாதை நீங்கியது, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோயிலுக்கு முன்பாக 4 தூண்களை உடைய மண்டபத்தை கட்டிக் கொடுத்துள்ளார்.கோயிலுக்குள் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
தாளபாக்கம் அன்னமாச்சார்யா 21 கீர்த்தனைகளை இவர் மீது பாடியுள்ளார். கோயில் கர்ப்பகிரகத்தின் மீதுள்ள விமானத்தின் உச்சியில் கலசத்துக்கு பதில் சுதர்சன சக்கரம் உள்ளது. இந்த ஊரைச் சுற்றி பஹுதா நதி ஓடுகிறது. மொத்தம் கோயிலுக்குள் மூன்று மண்டபங்களும், சில பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் சிறியதாக உள்ளன.
அனைத்து இன்னல்களையும் களைந்து ஸ்ரீபட்டாபிராமர் வெற்றி அருள்வார் என்பது ஐதீகம். 1997-ல் இந்த கோயிலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. திருப்பதியிலிருந்து 129 கிமீ தொலைவில் உள்ளது இக்கோயில். கூடுதல் விவரங்களை 9912229547 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.