வன்னி மரக்கிளையாக வைகுண்டவாசன் அருள்பாலிக்கும் நொச்சிக்காடு கண்கொடுத்த நாச்சியப்ப பெருமாள் கோயில், அதிசயமிக்க கோயிலாகத் திகழ்கிறது. கண்நோய் தீர்க்கும் பெருமாளாக இவர் வழிபடப்படுவது தனிச்சிறப்பு. திருப்பாதிரிப்புலியூர் அருகே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை கிராமமாக நொச்சிகாடு விளங்கியது. இவ்வூரில் நொச்சி மரங்கள் அதிகம் காணப்பட்டதாக தெரிகிறது. அக்காலத்தில் இவ்வூரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 4 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர்.
இவர்கள் திருமாலை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபயணமாக திருப்பதி செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சில காலம் அங்கேயே தங்கி திருப்பதியில் சேவகம் செய்து வந்தனர். அப்போது அவர்களில் ஒருவருக்கு திடீரென்று கண்பார்வை பறிபோனது. இதைக் கண்டு அஞ்சிய உறவினர்கள், வெங்கடவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்பலாம் என எண்ணி உறங்கச் சென்றனர். ஒரு பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘இதுவும் எமது விளையாட்டுதான். உங்கள் ஊரில் உள்ள வங்கக் கடலில் ஒரு வன்னிமரக் கம்பு மிதந்து வரும். அதை எடுத்து ஓர் இடத்தில் நட்டு வைத்து பூஜை செய்யுங்கள். இனி நீங்கள் என்னைக் காண இங்கு வரவேண்டாம். நான் அங்கு வருகிறேன்’ என்று கூறி மறைந்தார்.
உடன் உறங்கியவர்களை எழுப்பி விஷயத்தைக் கூறியதும், அனைவரும் மகிழ்ந்தபடி ஊர் திரும்பினர். ஊர் எல்லையில் இருக்கும் வங்கக் கடலுக்கு சென்று பார்த்தபோது எதுவுமில்லை. அலைகள் மட்டுமே ஆர்ப்பரித்தன. மிகவும் வருந்திய உறவினர்கள் விடிய விடிய கடற்கரையிலேயே அமர்ந்து நாராயணன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தனர். காலை பொழுது புலர்ந்தது. ஏழுமலையான் அருள்பாலிக்கவில்லை என்று கவலையுடன் தங்கள் தொழிலுக்கு புறப்பட ஆயத்தமாகினர். கடலில் கால் வைத்து சிறிது தூரம் நடந்து சென்றபோது கடற்கரையில் ஏதோ ஒதுங்கி நிற்பது போல் கண்ணுக்கு பட உடனடியாக அங்கு சென்றனர்.
2அடி உயரமுள்ள ஒரு வன்னிமரக்கட்டை மிதந்து வந்து கரை ஒதுங்கி நின்றது. அதில் மேல் பகுதியில் திருநாமம் போல் மூன்று கோடுகள் அமைந்திருந்தது. அதை பார்த்தவர்கள், நாராயணா கூறியது போல் நீயே வந்து விட்டாயே என அதை இரு கைகளாலும் சுமந்தபடி கோவிந்த நாமம் சொல்லி கரையை நோக்கி நடந்தனர். கரையில் கண் பார்வை தெரியாத அந்த பக்தர் நாராயணன் நாமத்தை உச்சரித்தபடியே அமர்ந்திருந்தார்.
இந்த வன்னிமரக் கட்டையுடன் சென்றவர்கள், அவர் அருகே வந்து விஷயத்தைக் கூறினர். உடனே, ‘இந்த கட்டையை நான் சுமந்து வருகிறேன்’ என்று அவர்களிடம் கேட்க, அவர்களும் அவர் கையில் கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டவர் நாராயணா என்றபடியே நடந்து சென்றார். சில நிமிடங்களில் அவருக்கு கண் பார்வை கிடைத்தது.
வேப்ப மரத்தடியில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டு, வன்னிமர கட்டையை நட்டுவைத்து, பக்தரின் பார்வையை மீட்டுக் கொடுத்ததால் ‘கண்கொடுத்த நாச்சியப்ப பெருமாள்’ என்ற திருநாமத்தைச் சூட்டி பத்தர்கள் வழிபாடு செய்யத் தொடங்கினர். கீற்றுக் கொட்டகை அமைத்த அன்று இரவு பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் கீற்றுக் கொட்டகை முழுவதும் சேதம் அடைந்தது. நட்டுவைத்த வன்னிமர கட்டையாக அருள்பாலிக்கும் கண்கொடுத்த நாச்சியப்ப பெருமாள் மட்டும் கம்பீரமாய் நின்றார்.
சில நாட்கள் கழித்து ஒரு முதியவர் திருநாமம் தரித்து அவ்வூருக்கு வந்து பெருமாள் கோயில் குறித்து வினவினார். மக்களும் சூறாவளிக் காற்றில் அனைத்தும் சேதமடைந்துவிட்டதாகவும், பெருமாள் மட்டும் கம்பீரமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இனி பெருமாள் அப்படியே இருக்கட்டும், கூரை அமைக்க வேண்டாம் என்று முதியவர் கூறிவிட்டு கிளம்பினார். வந்து சென்றது பெருமாள்தான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்றிலிருந்து இன்று வரை இக்கோயில் மேற்கூரை இல்லாமல் கண்கொடுத்த நாச்சியப்ப பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
2 அடியாக இருந்த வன்னி மரக்கம்பு இறையருளால் வளர்ந்து தற்போது பத்தடி உயரம் இருப்பதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். அதனால் வளரும் பெருமாள் என்று பெருமாள் அழைக்கப்படுகிறார். இக்கோயில் முந்திரிக் காட்டின் நடுவே வேப்பமரத்தடியில் திறந்தவெளியில் தான் உள்ளது.
எதிரில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் என தனித்தனி சந்நிதிகள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதிக்கு நிகராக கருதப்படும் இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு தினமும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. கடலூரில் இருந்து நொச்சிக்காடுக்கு செல்ல 32, 25 தடம் எண் கொண்ட நகரப் பேருந்துகள் உள்ளன.