ஆனந்த ஜோதி

மகம் பிறந்த திருநல்லூர்

பனசை பாக்யலெஷ்மி

சோழநாட்டுத் தென்கரை தலமாக விளங்கும் திருநல்லூர் கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக் கோயில் ஆகும். திருநாவுக்கரசருக்குத் திருவடிசூட்டிய தலம், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்ட தலம், திருக்குடந்தை மகாமக நீராடலோடு தொடர்புடைய தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்தலம்.

திருநல்லூர் இறைவன் பெயர் கல்யாண சுந்தரர். பெரியாண்டவர், பஞ்சவர்ணேசர், இறைவி பெயர் கல்யாண சுந்தரி, பர்வத சுந்தரி, கிரி சுந்தரி. தலமரம் வில்வம். தீர்த்தம் சப்த சாகர தீர்த்தம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலத்தில் அமர்நீதியார் மடாலயம் உள்ளது.

பிருங்கி முனிவர் வண்டு உருவில் வழிபட்டமையால் திருமேனியில் துளைகள் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி. மூலவர் பிரகாரம் வலம் வர குறுகலான வழி உள்ளது. அகத்தியருக்கு ஈசன் திருமணக் கோலம் காட்டிய தலம் என்பதால் இறைவன் இறைவியர் கல்யாண சுந்தரர்,கல்யாண சுந்தரி என்று பெயர்களுடன் அழைக்கப் பெறுகின்றனர். இறைவன் ஐந்து வண்ணமாக காட்சி அருள்வதால் பஞ்சவர்ணேசர் என்று அழைக்கப் பெறுகிறார்.

சோழ நாட்டு பழையாறை என்னும் ஊரில் பிறந்த வணிகர் அமர்நீதி நாயனார், சிவனடியார்களுக்கு அமுது செய்வித்தும் அவர்களுக்கு கந்தை, கீழுடை, கோவணம் ஆகியவற்றை வழங்கியும் வந்தார். திருநல்லூரில் மடம் அமைத்து அன்பர்களுக்கு உணவளித்து வந்தார். ஒருநாள் சிவபெருமான் தனது கோவணப் பெருமையை உலகுக்கு உணர்த்த விழைந்தார். அந்தணர் பிரம்மச்சாரி உருவம் கொண்டு அமர்நீதி நாயனார் திருமடம்வந்தார்.

தன்னுடைய உலர்ந்த கோவணத்தை தந்து காக்கும் படி கூறிவிட்டு நீராடி வரச் சென்றார். நீராடி விட்டு வந்தபின் தன் கோவணத்தை கேட்டார். அமர்நீதி நாயனார் கோவணம் எங்கும் காணாது திகைத்தார். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. அந்தணரிடம் மறைந்த வழி தெரியவில்லை என்றார். வேறு கோவணம் தர முற்பட்டார். ஆனால், அந்தணர் ஏற்கவில்லை. வேறு பொருள்களையும் ஏற்கவில்லை. எனது கோவணத்துக்கு நேர் கோவணமே வேண்டும் என்றார். அமர்நீதியார் இசைந்தார்.

ஒரு தராசுதட்டில் வேதியர் தந்த கோவணத்தை இட்டார். மற்றொன்றில் தன் கையில் இருந்த கோவணத்தை இட்டார். தட்டுகள் நேராக நிற்கவில்லை.மேலும் அடியார்களுக்காக வைத்திருந்த கோவணங்களை இட்டார். தட்டு நேர் பெறவில்லை. பட்டாடைகள், பல்வகை ஆடைகள், பொன், வெள்ளி, மணிகளையும் இட்டார். தட்டு நேர்பெறவில்லை.

தானும், தன் மனைவியும் மற்றும் தன் மைந்தனும் துளையில் ஐந்தெழுத்தோதி நின்றனர். தட்டுகள் நேர் பெற்றன. இறைவனும் கோவண அடியாரின் அன்பும் ஒப்பாகும் என்பதனை இறைவன் உணர்த்திய தலம் இது. இத்தலத்தில் இன்றும் துலாபாரம் இடும் வழக்கம் உள்ளது. இதனை மையமிட்டு ‘கோவண நாடகம்’ என்ற நாடகம் இக்கோயிலில் நடத்த பெற்றது.

திருநல்லூர் தலத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தத்தில் மாசி மக தினத்தில் நீராடுவது சிறப்பாகும். குந்திதேவி கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடினாள். தெளமிய முனிவரை வணங்கி சித்தம் வேண்டினாள். முனிவரும், ‘நாளை மாசிமகம். சப்த சமுத்திர நீராடல் செய்க’ என்றார்.

குந்திதேவி இதுதொடர்பாக இறைவனை வேண்டினாள். திருநல்லூர் இறைவன் அவளின் வேண்டுதலை ஏற்று, இத்தீர்த்தத்தை ஏழுகடல்களாக பாவித்து நீராடுமாறு அருளினார். குந்தியும் அவ்வாறே நீராடி பாவம் தீர்த்துக் கொண்டாள். இக்கோயிலுள் குந்திதேவியின் உருவமும் உள்ளது.

அமைவிடம்: தஞ்சை - குடந்தை செல்லும்வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது திருநல்லூர்.

- Packiyasri2010@gmail.com

SCROLL FOR NEXT