மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் பிரம்மாண்டமாகவும், சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், சக்தி பீடங்களில் தாய் பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் திருவாரூர் விளங்குகிறது. திருமாலை மணம்புரிய வேண்டி திருமகள் தவமியற்றிய தலம் திருவாரூர் ஆகும். திருவாரூர் தேர் அழகு என்பதற்கு ஏற்ப, உலகிலேயே பெரிய தேரும், அழகிய தேரும் கொண்ட திருத்தலம் திருவாரூர்தான்.
பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாக விளங்கும் இத்தலம், சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. பூலோக கயிலாயமாகவும், வினைதீர்க்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கும் தியாகராஜ சுவாமி கோயில் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 150-வது தேவாரத் தலம் ஆகும். சமயக்குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் இத்தலம் போற்றி பாடப் பெற்றுள்ளது.
முக்தி தரும் தலங்களுள் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. காண முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி அண்ணாமலை, கேட்க முக்தி அவிநாசி, பிறக்க முக்தி திருவாரூர் என்று கூறப்படும். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுயம்பு மூர்த்தியாக தியாகராஜர் அருள்பாலிக்கிறார். இக்கோயில் வீதிப் பிரகாரத்தையும் சேர்த்து, 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது.
தியாகராஜருக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. தினமும் மரகத லிங்கத்துக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். உற்சவ வீதிகளில் தியாகேசர் நடனம் (அஜபா நடனம்) புரிந்ததால் ஏற்படும்களைப்பு தீர, சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட மருந்து அளிக்கப்படுகிறது. உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் நடனம், அஜபா நடனம் என்று அழைக்கப்படுகிறது.
தியாகராஜர் ராஜாதி ராஜா என்பதால், எப்போதும் எட்டு கணங்கள் சூழ, வீதிகளில் எழுந்தருள்வார். திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டதாரூரே’ என்று போற்றிப் பாடியுள்ளார். ஆழித்தேரின் உயரம் 96 அடி ஆகும். 96 தத்துவங்களைக் கடந்தவர் வீதிவிடங்கர் என்பது இதன் உட்பொருள் ஆகும். தேரின் மேல்பகுதி கமலவடிவமாக அமைந்துள்ளது. யஜூர் வேத ருத்ரத்தில் தேராகவும், தேர்த் தலைவராகவும் சிவபெருமான் உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 7-ம் தேதி ஆழித் தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 20-ம் தேதி நிறைவடைகிறது.
- Packiyasri2010@gmail.com